சனிக்கிழமை இரவு எட்டுமணி -
வழக்கத்துக்கு மாறாக இரண்டாம் நம்பர் தெரு மீனவர் ஓய்வகம் மனித தலைகளால் நிரம்பி வழிந்தது. அனைவரின் முகத்திலும் ஒரு தீவிரம் கடற்பாறை போல் உறைந்திருக்க ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதற்கான அறிகுறி எல்லார் முகத்திலும் தெரிந்தது.
"புண்டாச்சு மக்களே..யாருகிட்டல உங்க சீமை மயிர காட்டுறீங்க.." - ஐம்பது வயதை தாண்டியிருந்த, தடித்த உடல்வாகு கொண்ட பானைபோல் வயிரு பெருத்த ஒருவர் ஒன்றாம் நம்பர் மீனவர் ஓய்வகத்தைப் பார்த்து உறுமிக்கொண்டிருந்தார். ஒன்றாம் நம்பர் கூடம் நூறு மீட்டர் தள்ளி இருந்தது.
"என்னப்பா தெரு தலைவரை இன்னும் காண்டுல.."
"அன்னா வாராரு"
"சரி சரி உள்ள வந்து இருங்க..இப்டியே நின்னுட்டுருந்த ஒரு கதையும் நடக்காது"
ஆளாளுக்கு பேசினர். எல்லாருடைய வார்த்தையிலும் கோபம்..எதையோ சாய்க்க நினைக்கும் வேகம் இருந்தது.
வழக்கமாக சனிகிழமையென்றால் எல்லாரும் இந்நேரம் வீட்டிற்கு போயிருப்பார்கள். ஆனால் அவசரக்கூட்டம் என்று சாயங்காலம் ஓய்வக சுவரில் கையால் எழுதி தெருத்தலைவர் கையொப்பத்துடன் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்புதான் இத்தனை கெடுபிடிகளுக்கும் காரணம். அவரசரக் கூட்டத்திற்கான காரணத்தை வந்திருந்தவர்கள் அறிந்திருந்தார்கள் என்பதை அவர்களின் குழப்பம் இல்லாத முகம் காட்டியது.
வந்திருந்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். அவர்கள் தவிர்த்து திடகாத்திரமான ஐம்பது வயதுக்குள் உள்ளவர்களும் ஒன்றிரண்டு முதியவர்கள் தலைகளும் தென்பட்டது.
ஓய்வகத்தில் தரையில் நிரப்பப்பட்டிருந்த வெள்ளைமணலில் கருத்த முகத்துடன் அனைவரும் அமர்ந்தனர்.
தெரு தலைவர் பெர்க்மான்ஸ் சப்பை மூக்குடன், கடலுக்குப் போய் வெயிலும் உப்புத்தண்ணீரும் பட்டுப்பட்டு கருஞ்சிவப்பு நிற முகத்தில் இருந்தார். கூடி இருந்தவர்கள் தன்னிடம் ஒரு நல்ல முடிவை எதிர்பார்க்கிறார்கள் என்ற பெருமிதம் அவரின் மூக்கு விரியும்போது தெரிந்தது. அவர் பேச ஆரம்பித்துடனே கூட்டம் அவரை உன்னிப்பாய் கவனித்தது. சலசலப்புக்கு முன்பு நிலவும் அசாதரண அமைதி அவர்களிடம் நிலவியது. அவர் என்ன முடிவைச் சொன்னாலும் தங்கள் மனதில் உள்ள முடிவுடன் ஒத்துப் போகவேண்டுமென்ற எதிர்பார்ப்பு எல்லாரிடமும் இருந்தது.
"எல்லாரும் நல்லா கவனிங்க நம்ம இப்ப என்ன விசயத்தைபத்தி பேச வந்திருக்கோம்னு எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும்.நேத்து தியேட்டர்ல படம் பாக்க போன நம்மதெரு ஆளுங்க நாலு பேரை ஒண்ணாம் நம்பர் தெருவச் சேந்த பத்துபேர் அடிச்சிருக்காங்க. இதுக்கு ஒரு நல்ல முடிவை நம்ம எடுக்கணும். இத இப்படியே உடவும் முடியாது. அது சிக்கல்லதான் முடியும்". கூட்டத்தலைவர் பேசியதும், இத சொல்லவா கூட்டம் என்பதுபோல் குழுமியிருந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.
"இதிலென்ன யோசனை, நம்ம தெருகாரங்களை அடிச்ச அவனுகளை அடிச்சே ஆவனும்" - இருபதுவயதுக்குள் இருந்த ஒருவன் சொல்ல கூட்டம் கடுகடுப்புடன் அவனை பார்த்தது.
"லே..லே வாயை வச்சிட்டு சும்மா இருல..அடிக்கு அடி எடுத்த உடன பட்ட அடியை திருப்பியா கொடுக்க முடியும்.பேசாம அவங்க தெரு பெரியாளுகள பாத்து சொல்லுவோம்.சண்டையும் வேண்டாம் சச்சரவும் வேண்டாம்."-ஒருவர் சொல்ல. அதற்கும் உடனே எதிர்ப்பு குரல் ஒலித்தது.
"இப்படி பத்து பேரு நம்ம தெருவில இருந்தா அவன் அடிச்சு விட்டிண்டு இருப்பான் நாம பாத்திண்டு இரு்கணுமா..!"
"தியேட்டர்ல நடந்த பிரச்சனை இது. யார் மேல தப்புணு யாருக்கு தெரியும் இதை பெருசு படுத்தாம உடுறதுதான் நல்லது."
பேச்சு திசைமாறி போவதை கண்ட ஜெரால்ட்டுக்கு கோபம் தலைக்கேறியது. அடிபட்டவர்களில் அவனும் ஒருவன் என்பதால் 'எங்கே நமது தெருக்காரர்கள் சமாதானமாய் போய்விடுவார்களோ' - என்ற அச்சம் வந்துவிட்டது அவனுக்கு. தனக்கருகில் இருந்த தன் வயதொத்தவனை உசுப்பினான். உடனே இருவரும் எழுந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து இன்னும் சிலர் எழ ,
"எல இருந்து பேசுங்கள..சொன்னா கேளுங்க"
"சொல்ல சொல்ல கேக்காட்டா எப்படி.." - கூட்டத்தில் பலவிதமான சலசலப்பு ஒலி எழுந்தது.
"எங்களுக்கு வந்ததை எப்படி தீக்கணும்ணு எங்களுக்கு தெரியும்.என்ன ஆனாலும் அவனுகளை விடப்போவதில்லை" - ஜெரால்டு வீம்பாய் பேசினான்.
"லே..ஜெரால்ட்டு இரு ..இரு பேசிண்டு இருக்கோம்ல..நம்ம கையை விட்டு எதுவும் போகாது. நமக்கு ஒருத்தனுக்கு அடி பட்டா எல்லாருக்கும் பட்டதுக்கு சமம். இது வரைக்கும் நம்ம அடிச்சா திருப்பி அடிச்சாத பயலுக இப்ப அடிச்சிருக்காணா என்ன தந்தயெடம் அவனுகளுக்கு இருக்கணும். இப்ப ராத்திரி ஆச்சு. நாளைக்கு அடிச்சவன் எவனை கண்டாலும் செறுக்கணும். அதுக்க பிறகு எவன் வாரானு பாக்கணும். எவனாவது எதுத்துக் கேட்டா ஓட ஓட அடிதான்"
"அதெல்லாம் வாய்ப்பே இல்ல அடிச்சவனுங்க ரெண்டுநாளா ஊர்பக்கமே தலை நடமாட்டம் இல்லாம இருக்கானுக.பயலுக ஒளிச்சிட்டானுக"
"அப்ப...அவனுக எப்ப வந்து எப்ப அடிக்கிறது.பேசாம வீடு ஏற வேண்டியதுதான்." நடுத்தர வயதுக்காரர் ஒருவர் சொல்ல, கூட்டத்தின் பெரும்பகுதியினர் அதனையே பிடித்துகொண்டனர்.
"லே..சொன்னா கேளுங்க அது சரியில்லாத விசயம்.வீட்டில பெம்பளைங்களும் குழைந்தகளும் இருப்பாங்க, இராத்திரி வேறு, இனனிக்கு ராத்திரி மட்டும் பொறுங்க நாளைக்கு பாத்துக்கலாம்."
"அதெல்லாம் முடியாது." - கூட்டம் ஆவேசமாய் ஓய்வுகூடத்தைவிட்டு வெளியே வந்தது.கட்டு மரத்தில் இருந்த, தொழிலுக்கு பயன் படுத்தும் தடி, கொழுத்தீட்டி,அடிகம்பு என்று சிலர் கையில் எடுத்துக்கொண்டனர்.
கும்பல் ஆக்ரோசத்துடன் சத்தமிட்டபடி யுத்ததிற்கு தயாரன சேனைபோல் முன்னேறியது.
வீதியில் கேட்ட ஆவேசமான குரல்கள் அருகாமையில் வீடுகளில் தூங்கிகொண்டிருந்தவர்களை எழுப்பியது. வேடிக்கை பார்க்கும் ஆவலில் கூட்டம் வீட்டு முற்றங்களில் கூடியது. நடக்கப்போகும் பிரளயத்தை தடுக்கும் திறனற்று கையை பிசைந்து கொண்டு நின்றனர் சில ஆண்கள்.
"என்ன வருத்து வாரானுகளப்பா..யே யே உள்ள போங்க அவங்க என்ன பாடும்படட்டும்.." -சில மனைவிகள் கணவர்களை வீட்டுக்குள் அனுப்ப தீவிரமானார்கள்.
பழுதடைந்த லம்பார்டி எந்திரத்திலிருந்து வரும் கரும் புகை போல வாய் கூசும் கெட்ட வார்த்தகளை உபயோகித்தபடி வெறிகொண்ட கூட்டம் முதலில் ஒரு வீ்டுக்குள் நுழைந்தது.
"வீட்டை அடிச்சு நொறுக்குல.."- சிலரின் கைகள் கூரை ஓட்டின் மீதும், வாசல் கதவுகள் மீதும் தங்கள் வரிசையை காட்டின.
"ஒன் மாப்பிள்ளை எங்கம்ப..அவனை வெளிய விடு..தாயோழி அவன் மட்டும் இப்ப கையில கெடச்சான் செத்தான்.."
"ஒன்னும் செஞ்சிடாதீங்கப்பா..பச்ச குழந்தைய கைல வச்சிருக்கேன்" - வீட்டிலிருந்த முப்பது வயசுப்பெண் வந்தவர்களை கையெடுத்து கும்பிட்டாள்.அவள் இடுப்பில் இருந்த குழந்தை வீலென்று பயத்தில் அழுதது. அலட்சியம் செய்த கூட்டம் வீட்டின் சமையல் கட்டுக்குள் புகுந்தது. அலுமினிய பானையில் பொங்கி வைத்திருந்த சோற்றை காலால் எட்டி உதைத்தது.
"ஆள் வீட்டில இல்லை...வீட்டில இல்லை ம்ம்..அடுத்த வீட்டுக்கு கிளம்பு"
"ஏம்ப ஒன மாப்பிள்ளை வந்தா சொல்லிவை.யாருகிட்ட மோதுறான்.ஒரு அப்பனுக்கு பிறந்தவனா இருந்தா வீட்டில இருக்க வேண்டியததானே தேவடியா மவன்"- ஒருவன் வெறி பிடித்தவன்போல் கத்த, இன்னொருவன் அவனை சமாதானப்படுத்தினான்.
"ஒரு நாள் இல்லேனா ஒருநாள் கைல மாட்டாமலா போவான்.வா ..மக்கா வா..பச்ச குழைந்தை கரையுது அடுத்து ரோணிமூஸ் வீட்டுக்கு போலாம்"
"லே..சீக்கிரம் வாங்கல அந்த இடுக்கு வழியா ஒத்தன் ஓடுன மாதிரி இருக்கு. ரோணிமூஸ் மோனாத்தான் இருக்கணும்"
"அப்படியா ஆளை புடி இன்னிக்கு அவந்தான் நமக்கு இரை.." - கூட்டம் இரண்டு வீட்டுக்கு இடையே இருந்த குறுக்கு சந்துக்குள் ஓடியது.
நாகர்கோவிலிலிருந்து ஒன்பதே கால் வண்டியில் வீட்டுக்கு வந்து வீட்டில் இரவு உணவு உண்டு கொண்டிருந்த பெஞ்சமின் அம்மாவிடம் கேட்டான்.
"என்னம்மா வெளிய சத்தம்?"
"ம் நீ வெளிய ஒண்ணும் போகாத..கட்டு திண்ணி கலங்கிலா நடக்காணுக ராத்திரி பகலுனு இல்லியா இவனுகளுக்கு"
பெஞ்சமின் சாப்பாட்டை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டு முன் வாசலுக்கு வந்தான். தெருவில் ஆண்களும் பெண்களும் கூட்டமாய் நின்று மேற்கு திசையில் தூரப்பார்வை பார்த்து நின்றிருந்தனர்.
"சொன்னா கேளுப்பா அந்த பக்கம் போவாத அவனுக யாரு எவருனு பாக்கமாட்டானுக" - அம்மா சொல்ல சொல்ல கேட்காமல் கதவில் மாட்டியிருந்த சட்டை போட்டுக்கொண்டு பொத்தான் வைத்தபடியே வெளியே வந்தான் பெஞ்சமின்.
படிப்பகம் அருகில் அவன் வயதொத்த இளைஞர்கள் கூட்டத்தினரிடம் வந்தான்.
"என்னாச்சு மக்கா..?" - அவனுக்கு சற்று அறிமுகமான ஒருவனிடம் கேட்டான் பெஞ்சமின்.
"நீ ஊர்லதானே இருக்க.. உனக்கு தெரியாத உங்க தெருவு பசங்களுக்கும் அவனுகள்ல கொஞ்ச பேருக்கும் முந்தானாள் தியேட்டருல வச்சு அடியாம். இப்ப இவனுக ஒண்ணா சேந்து அவனுக வீட்டில ஏறப்போறானுக"
"இதுதான் இந்த ஊரோட பிரச்சனை. ஒருத்தன் ரெண்டு பேருக்கு பிரச்சனை வந்தா அதை ஊர் பிரச்சனையா ஆக்கிடுவானுக.கேட்டா எங்க மாமனை அடிச்சிட்டான்.மச்சானை அடிச்சிட்டானு புதுசு புதுசா உறவுமுறை சொல்லுவானுக"
"நீயும் அவனுக கூட நடக்க ஆளுதானே.சொல்ல வேண்டியடுதானே"
"சொன்னா எவன் கேட்கிறான்.ஊர்ல பேசித்தான் இதை தீக்கணும்"
"வாங்கடா பங்கு சாமியாரை பார்த்து ஒருவார்த்தை சொல்லிட்டு வந்திடுவோம்.இப்படியே விட்டா அடிதடில தொடங்கி கொலைல முடிஞ்சிடும்"
"சாமியாரு சொன்னா மட்டும் இவனுக கேட்கவா போறானுக.அதெல்லாம் அந்த காலம்.இப்ப அவர் கேட்டா அவருக்கும் அடிதான் கிட்டும்" - இன்னொருவன் சொன்னான்.
"இப்படியே ஒருத்தர் ஒருத்தர் நமக்கென்னனு ஒதுங்க ஆரம்பிச்சா இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் நம்ம ஊரு இப்படித்தான் இருக்கும்.கெட்டதுக்கு நூறு பேரு ஒண்ணா சேருதோம்.நல்லதுக்கு பத்துபேருகூட ஒண்ணு சேரமாட்டோம்கிறோம்"
"நீ சொல்லுறது சரிதான் மக்கா.ஆனா நல்லது செய்யணும்னு நினச்சா நாளைக்கு ரெண்டு ரெண்டு தெருக்காரங்களும் நம்மை எதிரியா நினைப்பானுக" - பனிரெண்டாம் வகுப்புவரை ஒண்ணா படித்துவிட்டு இப்போது எஞ்சினியரிங்க் காலேஜ் கடைசி வருடம் படிக்கும் சுனில் சொன்னான்.
"இப்ப நீ வாரியா இல்லையா நான் ஃபாதரை பாத்து பிரச்சனையை சொல்லப் போறேன்.." - பெஞ்சமினின் பிடிவாதம் சுனிலை கரைத்தது.
"சொன்னா உனக்கு புரியாது. சரி வா..வா..நானும் வரேன்" - சுனில் சொல்ல இருவரும் இணைந்து பங்குப்பணியாளர் வசிக்கும் இல்லம் நோக்கி நடந்தனர்.
மேடை என்று மீனவர்களால் அழைக்கபடும் பங்குப் பணியாளர் இல்லம் கோவிலுக்குச் அருகில் மேற்கு பக்கம் இருந்தது. முன்பு சராசரி வசதியுடன் இருந்த மேடை, இதற்கு முன்பிருந்த ஃபாதரால் நவீன பாணியில் கட்டப்பட்டது. விலை உயர்ந்த தரை ஒடுகள் கால் வைத்தால் வழுக்கிவிடும்போல் பளபளத்தது. தாழ்வாரத்தில் போடப்பட்டிருந்த ஃபர்னிச்சர்களில் ஒருவித பணக்காரத்தனம் தெரிந்தது.
"ஃபாதர்..ஃபாதர்.." - பெஞ்சமினும் சுனிலும் மேடை தாழ்வாரத்திலிருந்து உள் நோக்கி குரல் கொடுத்தனர்.
ஃபாதர் நல்ல உறக்கத்தில் இருந்தார் போலும். பத்து நிமிடம் கழித்து சிறிய கொட்டவியுடன் கதவைத் திறந்தார். மேற்கத்திய பாணியில் இரவு உடையில் முதலாளித்துவம் கலந்து தெரிந்தார். இப்போதுதான் ஷேவ் செய்தார் போல் கன்னம் அரை வெளிச்சத்திலும் மினுமினுத்தது.
"என்னப்பா வேணும். யாருக்காவது அவஸ்தை கொடுக்கணுமா. இருங்க சின்ன சாமியாரை அனுப்புறேன்"
"அதெல்லாம் இல்ல ஃபாதர். ஊர்ல சண்டை. இரண்டாம் நம்பர் தெருக்காரங்க கும்பலாபோய் ஒண்ணாம் நம்பர் தெருவில இருக்க வீட்டில ஏறி பிரச்சனை பண்ணுறாங்க"
ஃபாதர் யோசனையுடன் சில நொடிகள் அவர்களைப் பார்த்தார். புருவம் உயர்த்தி நெற்றி சுருக்கினார்.
"இது போலீஸ் ஸ்டேசன் இல்ல. சண்ட வருதுனா போலீசுக்கு ஃபோண் பண்ணி சொல்லுங்க"
"என்ன சாமி இப்படி சொல்லுறீங்க?"
"பின்ன நான் என்ன செய்யணூம்?"
"நீங்க வந்து சொன்னா அவங்க கேப்பாங்க. சண்டை உடனே நிக்கும்"
"அதெல்லாம் நிக்காது. முன்னாடி மாதிரியில்ல உங்க ஆளுக. சாமியாருனு பாக்காம கெட்டவார்த்தை போடுறானுக. எனக்கெதுக்கு வம்பு. கிளம்புங்க கொஞ்ச நேரம் கழிச்சா சண்டை அதுவா நிக்கும்"
"இப்படி பொறுப்பே இல்லாமல் பதில் சொன்னா எப்படி ஃபாதர்?"
ஃபாதரின் முகத்தில் கோபத்தின் ரேகைகள் எட்டிப்பார்த்தது. பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னார்.
"நாங்களும் மனுஷங்கதானே. எங்களுக்கும் மானம் மரியாதை இருக்கு. உங்க கிட்ட வந்து கெட்ட வார்த்தையும் அடியும் பட எங்கள பெத்தவங்க சாமியாரா எங்களை அனுப்பிவிடல"
"இப்ப என்ன சொல்ல வறீங்க ஃபாதர்?"
"நாள் பூசையா..? திருவிழா பூசையா..? அடக்க பூசையா..அவஸ்தை கொடுக்கணுமா..அதுதான் எங்களால செய்ய முடியும். ஊர்ல வந்து நடக்க சண்டைய விலக்கி விடுறது எங்க வேலை இல்ல..அதுக்குத்தான் போலீஸ் இருக்கே..! ஒரு ஃபோண் பண்ணிட்டா போதும். உடனே வருவாங்க.. அவ்ளோதான் சொல்லுவேன்".
" நீங்களே ஃபோண் பண்ணலாமே ஃபாதர்..!"
"உங்க ஊர்ல நாலு தெரு இருக்கு ஒருத்தருக்காக போலீஸ் கிட்ட கம்ளைண்ட் பண்ணிணா மத்தவங்களுக்கு விரோதமா போயிடும். நான் எல்லார்கிட்டயும் நல்ல பெயர் எடுத்தாதான் இந்த ஊர்ல காலம் தள்ள முடியும்"
ஃபாதர் சொல்ல சொல்ல பெஞ்சமின் உணர்ச்சிப் பிளம்பானான்.
"வெறும் பூசை செய்யுறதுக்கும் , அவஸ்தை பூசுதல் கொடுக்கிறதுக்காகவுமா பத்து வருஷமா படிச்சீங்க ஃபாதர்? " - சொன்ன பெஞ்சமின் மறுபதில் எதிர்பார்க்காமல் இடத்தை விட்டு அகன்றான். தன் முதுகில் ஃபாதரின் உஷ்ண்மான கண்கள் சுட்டதை அவனால் உணர முடிந்தது.
மனம் முழுக்க சிந்தனையும், விரக்தியும் கரப்பான் பூச்சியாய் துரத்த வீட்டிற்கு வந்தான். படுக்கையில் விழுந்தான். மனசு பல கேள்விகளைக் கேட்க தூக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டிருந்தான். ரோட்டில் ஏதோ ஒரு வயதான் பெண்மனியின் ஒப்பாறி சத்தம் அவன் காதில் எட்டியது.
"ஐய்யோ என் மோனை அடிச்சு போட்டிருக்கானுகளெ.. எல்லாரும் பாத்திட்டிருகாங்களே.. என் மோனை அடிச்சவன் மண்ணாதான் போவான்.. நீரும் சாம்பலாதான் போவான்.. விளங்க மாட்டான்...அவன் பெண்ட்டாட்டிக்கும் மக்களுக்கும் உதவாமத்தான் போவான்" - மெல்ல மெல்ல அழுகுரல் வீதி கடந்து தேய்ந்து போனபின்னும் காலை வரை அழுகைச் சத்தம் விடாமல் எதிரொலித்துக் கொண்டே இருந்தது அவன் காதில்.

Post a Comment