"மோனே ஜாண் எவ்ளோ நேரமா எழுப்புரது... சாப்பிடனும்னு எண்ணமுண்டா..? அப்பா தெக்க போயிருக்கு வலை கெட்டணூமாம் சாப்பிட்டிண்டு சீக்கிரம் போ" - இரவில் கடலில் மீன் பிடிக்க போய்வந்து, காலையில் படுத்தவன் பகல் இரண்டு மணியாகியும் இன்னும் எழாததால் அக்கறையுடன் மகனை எழுப்பினாள் அமிர்தம்மாள்
கத்தரிக்கப்பட்ட கனவுகளுடன், பாரமான இமைகளுடன் எழுந்த ஜாண் சுருக்கம் கூடிய தன் அம்மாவின் முகம் பார்த்தான். பெரும்பாலும் அம்மாவின் முகத்தை மிக அருகில் பார்க்க அவனால் முடியாது. வயோதிகம் வரியோடிருக்கும் அந்த முகத்தைப்பார்க்கும் போதெல்லாம் அவன் மனம் நெகிழ்ந்து கண்களில் நீர் முட்டிக்கொண்டு வரும். 'உங்களில் முகவரிகள்தான் எனக்கு முகவரி தந்திருக்கின்றன அம்மா என்று மனதிற்குள் சொல்லிக்கொள்வான். உங்கள் முகத்தில் உள்ள ஒவ்வொரு சுருக்கங்களிலும் என்னைப்பற்றிய கனவுகளையல்லவா சேகரித்து வைத்திருக்கிறீகள்.'
மதிய உணவை முடித்துவிட்டு கடற்கரையில் இருக்கும் மீனவர் ஓய்வகத்துக்கு வந்தான். அப்பாவின்..! மெலிந்து போன கருத்த கைகள் கடமையே கண்ணாக இரவு மீன்பிடிக்க கொண்டுசெல்ல வேண்டிய வலையின் பீத்தையை(கிழிசல்) கட்டுவதில் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்தன.
"என்ன இவ்ளோ நேரம். சாயங்காலம் எங்கேயும் போயிடாத இன்னிக்கு முங்கவருக்கு(சாயங்காலம் கடலுக்கு செல்லுதல்) வலை தள்ளணும்.. சீக்கிரம் வலையை கட்டுண்டு வலையை வழுச்சு வச்சிண்டு குளிச்சுட்டு வந்துடலாம். கட்டா மடைக்கு கீழா வெலங்க ஐல மீனு கனமா பட்டிருக்கு "
"சரிப்பா..?" - தந்தைக்கு பதில் சொன்ன மகனின் கைகள் லாகவமாய் வலையின் கிழிசலை வெகுவேகமாய் அடைத்துக்கொண்டிருந்தது. அவன் வலை கட்டும் வேகத்தைப் பார்க்கும்போதெல்லாம் அப்பாவுக்கு ஆச்சரியம் வரும்.
போன வருஷம்தான் காலேஜ் படிச்சு முடிச்சவன், 'வேலை கிடைக்கிறவரைக்கும் கடலுக்கு உங்க கூட வாறேன் அப்பானு..!' - சொன்னவனை முதலில் கடலில் கொண்டு போக அப்பாவுக்கு முழு விருப்பமில்லை. ஆனால் மனைவி அமிர்தம்மாள் விடாப்பிடியாகச் சொன்னாள், "இங்க பாருங்க படிச்ச உடன வேலை இந்தகாலத்தில போட்டா கிடக்கு அதான் அவன் கடலுக்கு வாரேனு சொல்லுதானே கூட்டுண்டு போங்க. அவனுக்கு எளையது ரெண்டும் பெம்புள மக்க. மூத்தவ சடங்காயி ரெண்டு வருஷமாச்சு இப்பமே சேத்தாதான் கெட்டி கொடுக்க முடியும். வேல கெடச்சும்போது கெடச்சட்டும் அதுவரைக்கும் அவன் கடலுக்குபோனாதான் நமக்கும் ஏந்தலா இருக்கும்..!"
மனைவியின் பேச்சில் இருக்கும் யதார்த்தம் புரிந்து மகன் ஜாணை கடலுக்கு அழைத்துச் செல்ல அவர் சம்மதித்தார். காலேஜ் படித்தவனென்றாலும் கடல் தொழிலில் உஷாராகத்தான் இருந்தான் அவன். கரையில் வந்தால் வலைகட்டுவதிலும் அவரை மிஞ்சிவிடுவான் போல் வேகம் இருந்தது. "படிச்சவனைபோலயா கடலுல அவன் வேல பாக்குறான். கையும் காலும் வார வருத்து. ஒருநா கூட ஒயர இருக்குதானில்லை. தொளவ போடுற வேகம். அவன் தொடுத்தா தன்னால மரம் ஓடும்" - அவர்களுடன் கடலுக்குப் போகும் அம்புரோஸ் மகனைப் பற்றி குடி கடையில் சொல்லும்போது அப்பாவுக்கு மகனை நினைத்து பெருமைதான். இருந்தாலும் கடலுக்கு போகவா என் மோனை காலேஜ் வரைக்கும் படிக்க வச்சேன் என்ற எண்ணமும் அவருக்கு அடிக்கடி எழாமல் இல்லை.
"மக்கா மெட்ராஸ்ல வேலைக்கு ஆப்லிகேசன் போட்டிருந்தியே பதில் வந்திச்சா.." - கிட்டதட்ட அவன் மறந்துவிட்ட விசயத்தைதை அப்பா இன்னும் மறக்காமல் கேட்டது அவனுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
எந்த கடலோடி அப்பாவும் தன் மகனை படிக்க வைக்கும் நோக்கமே இதுதான். தான் கடலுக்குப் போய் காற்றிலும் கடலிலும் கஷ்டப்படுவதுபோல் தன் மகனும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத்தான். என்னால்தான் படிக்க முடியல என் மகனாவது படிச்சிமுன்னேறட்டும் என்று நினைக்காத தந்தை உள்ளம் கடலோரத்தில் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்று விஞ்ஞானம் மீன் பிடித்தொழிலை எந்திரபடகுகளாய் பரிணமிக்க வைத்திருந்தாலும் கடலோடிகளின் கடும் உழைப்பின் அளவும், இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் சூழலும் அதிகரித்தே உள்ளது என்றுதான் சொல்லமுடியும்.சிறு கட்டுமரம் முதல் பெரிய விசைப்படகுகள் வரை இந்த விதிகளுக்கு அப்பாற்பட்டது அல்ல.
கடுமையான கடல் போராட்டத்துப்பின் கிடைக்கும் பணம் தன் குழந்தைகளின் படிப்புக்காக, திருமணத்திற்காக செலவிடுவதில்தான் ஒரு கடலோடி முழுதிருப்தியடைகிறான். ஆனால் கடலோடிகளின் பணம் இப்போதெல்லாம் கடற்கரை கிராமங்களில் அடிக்கடி நிகழும் குழு வன்முறைகளினால் வழக்காடு மன்றங்களில் அல்லவா செலவிடப்படுகிறது. இப்படிப்பட்ட நிகழ்வுகள் கடலோடி கிராமங்களின் பொருளாதரவளர்ச்சியை வெகுவாக பாதிப்பதோடு சமூகமதிப்பீட்டையும் அல்லவா குறைத்துவிடுகிறது. இப்படிப்பட்ட சமூக அவலத்தை மாற்றுவது யார்..?
தன் தந்தையின் கேள்விக்கு பதில் சொல்லுமுன் இப்படியெல்லாம் மனதிற்குள் எண்ணிமுடித்திருந்த ஜாண், "இன்னும் பதில் வரலேப்பா பெரும்பாலும் ஒண்ணு ரெண்டு நாள்ல தெரிஞ்சிடும்" - என்று அரைமனதுடன் சொல்லிவைத்தான்.
மறுநாள் காலையில் வீட்டு வாசலில் தபால்காரர் அவன் பெயர் சொல்லி அழைத்தபோது அவனுக்கு புரிந்துவிட்டது, தான் இந்த ஊரை பிரியும் நாளும் நெருங்கிவிட்டதென்று.
வேலைதேடும் இளஞனுக்கு நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்தால் அதைவிட சந்தோசம் என்ன இருக்க முடியும். ஆனால் அது அவனுக்கு சோர்வையே தந்தது. சிறு வயதிலிருந்து ஊரைப்பிரிந்து இருந்ததில்லை. படிக்கும் போது சுற்றுலா சென்றபோது அதிகபட்சமாய் ஐந்து நாட்கள் இருந்திருகிறான் அவ்வளவுதான்.
வீடு, வீட்டுக்கு பின்புறம் பாறைகளோடு கடல் அடிக்கும் ஓசை, தினந்தோறும் குளிக்கும் ஆறு, குருவிகல், கும்பாரிகல்..ஆற்றுக்கு அக்கரையில் கால்பந்து விளையாடும் வெள்ளைமணல், பக்கத்து ஊரில் இருக்கும் பஞ்சாயத்து நூலகம், இப்படி ஒவ்வொன்றாய் அவன் மனதில் நிழலாடியது இவற்றையெல்லாம் பிரிந்து நான் போய்த்தான் ஆக வேண்டுமா?. சென்னையில் மட்டும் ஏன் வேலை வாய்ப்பு குவிந்து கிடக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அது பரவலாய் கிடந்தால் எத்தனை நன்றாக இருக்கும். படிக்கிறவனெல்லாம் சென்னைக்குத்தான் போயாகவேண்டுமென்றால் சென்னை மக்கள் அடர்த்தி மிகுந்து வெப்பக்காடாய் மாறிவிடுவதில் என்ன வியப்பு? ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொழிற்சாலைக்கென்று தனி பகுதி ஒதுக்கி இந்த அரசாங்கம் தொழில் முதலீடுகளை பகிர்ந்தளித்தாலென்ன?
"மோன எப்ப மெட்ராஸுக்கு போற.." - அம்மாவின் குரலில் புதிய மகிழ்சி. கண்களில் இன்னும் கொஞ்சநாள் இவனை பார்க்கமுடியாதே என்பதால் ஒருவருடத்திற்கான பாசம். அம்மாவின் முகமும் அதில் தெரிந்த நிம்மதியும் ஜாணின் மனதைக் கரைத்துவிட்டது. 'இந்த முகத்தில்தான் எத்தனை ஏக்கம், எத்தனை கனவுகள்'.
"நாள, ஞாயித்துகிழம சாயங்காலம் போகவேண்டியதுதான்.."
"நல்லது. போகும் முன்னால குருசடில ஒரு ஆரம் வாங்கி அந்தோணியாருக்கு போடப்பா.."
"சரிம்மா"
"காலம்பூரா இந்த ஊரில இருந்து கடலுக்கு போயே கஷ்டப்படப்போறியோணு நினச்சேன் நல்லவேளை கடவுள் கண் திறந்திட்டாரு.." - அம்மா சேலை தலைப்பால் கண்களை ஒற்றிக்கொண்டாள்.
மறுநாள் - ஞாயிற்றுக்கிழமை- கதிரவன் சுடும் முயற்சியை தொடங்கிய ஒரு காலை நேரம். என்ன நடந்தாலென்ன நான் உதிக்கத்தான் செய்வேன் என்பதுபோல சூரியன் தன் சுடும் கதிரை ஜன்னல் வழியே தூவ தூக்கம் கலைந்த ஜாண் வீட்டுக்கு வெளியே வந்தான். ஞாயிறு பூசையில் கடவுளை காணும் நம்பிக்கையில் ஆண்களும் பெண்களும் கோவிலுக்கு விரைந்து கொண்டிருந்தனர்.
பூசை முடிந்தபின்பு ஆலயத்துக்கு வருவதுதான் அவன் வழக்கம். பனிரெண்டாம் வகுப்புவகுப்பு வரை ஒன்றாய் படித்த நண்பர்கள் கல்லூரி படிப்புக்காக வேறு வேறு ஊர் என்று பிரிந்தபின்பு நட்பை புதுபிக்கவும், அவரவர் அனுபவங்களை பகிரவும் ஞாயிற்றுகிழமை பூசை முடிந்தபின் நடக்கும் சந்திப்புதான் வடிகால்.
வழக்கமாக சந்திக்கும் இடத்தில் நண்பர்கள் கூட்டம் இல்லை. எங்கே போய்விட்டார்கள் இவர்கள். மொபைலை எடுத்தான்.
"மக்கா எங்க போயிட்ட"
"நான் வீட்டுக்கு வந்திட்டேண்டா..நம்ம பசங்களும் வீட்டுக்கு போயிட்டானுக."
"ஏண்டா..சீக்கிரம் போயிட்டீங்க.?"
"புதுசா வந்திருக்கிற சின்ன சாமியார் இளைஞர்களை பாக்கணும்னு சொன்னாரு. நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது. கோயில் பக்கம் நின்னிட்டிருந்தா வா.. வா..னு கூப்பிடுவாரு அதான் நாங்களெல்லாம் எஸ்கேப் ஆயிட்டோம்"
பேசிக்கொண்டிருக்கும் போது அவன் கண்கள் தேவாலயத்திற்குள் ஓடியது. திருப்பலி முடிந்த பின்னும் கோவிலைவிட்டு வெளியேறாமல் இளைஞர் பட்டாளம் கூடத்தில் குழுமியிருந்தது.
'ஒரு பங்கில் புதிதாய் ஒரு பணியாளர் வந்துவிட்டால், பக்த சபையினர்களையும், பாடகர் குழுவினரையும், மறைக்கல்வி மன்றத்தினரையும் - தான் முதல் முதலில் சந்திக்க விரும்புவது வழக்கம். ஆனால் இவர் மட்டும் சற்று வித்தியாசமாய் இளைஞர்களைத் தேடி..!' அவன் மனதில் எதிர்பார்ப்புரேகை ஓடியது. அவனும் கோவிலுக்குள் இருந்த கூட்டத்தினருடன் சேர்ந்துகொண்டான்.
கூட்டத்தில் பெரும்பாலானோர் ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு சிறு வயதிலேயே கடலுக்கு போனவர்கள். 'படிச்சா வேலையா கிடைச்சபோறு..! எழுத்து வாசிக்க தெரிஞ்சா போதாதா கடலுக்கு போனா தான் குடும்பம் நல்லாவும்' - என்று பெற்றோர்கள் சொல்லி படிப்பை ஆரம்பப் பள்ளியின் இறுதியில் நிறுத்தியவர்கள்- ' பெம்புள மக்க இருக்க வீடு ஒரு வருமானத்த வச்சி எப்படி அதுகளை கெட்டி கொடுக்கமுடியும் அதனால ஒனக்க மோனை கடலுக்கு வுடு இல்லேனா முதுகு கூனுறவரை ஒன் மாப்பிள்ளை சம்பாரிச்சாலும் கொமுறு கொமுறாதான் இருக்கும் ' - உறவினர்களின் யோசனையில் படிப்பை நிறுத்தியவர்கள் - ' பரிச்சைல ஃபெயிலானவங்க எல்லாம் வீட்லேர்ந்து ஆளு கூட்டிட்டு வரணும் ' - வகுப்பு ஆசிரியர் சொன்னதால் வீட்டிற்கு வந்து நின்ற மகனை ,'எல இனி உனக்கு படிப்பு ஏறாது பேசாம உங்கப்பனுக கூட கடலுக்கு போல..' - என்று அம்மாக்களால் தடைசெய்யப்பட்டவர்கள் - ஆசிரியர் கொடுத்த அடியை தாக்குபிடிக்க முடியாமல் அவரை அடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ' யம்மா நான் இனி பள்ளுகூடத்துக்கு போவல' - என்று தனக்குத்தானே முடிவெடுத்து படிப்பை நிறுத்தியவர்கள் - இப்படி கடற்கரை கிராமங்களில் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் பின்ணணியில் ஒரு கதை இருக்கும்.
இளைஞர்களை அதிக நேரம் காக்க வைக்காமல் சின்ன சாமியார் அருள்ராஜ் சீக்கிரம் வந்தார். எல்லாரும் அவருக்கு வணக்கம் சொல்ல, ஸ்னேகமான புன்னகையுடன் அவர் பதில் வணக்கம் சொன்னார். புத்தம் புதிய வெள்ளையங்கி அணிந்து, மெல்லிய உடலும், நல்ல சிவந்த நிறமுமாய் எளிமையாய் இருந்த அவர் முகம் அனைவரையும் ஈர்த்த்து. புது சாமியர்களுக்கே உரிய சிறப்புக் களையும் தேஜஸூம் அவர் முகத்தில் இருந்தது.
தன்னை பற்றிய சுய அறிமுகத்தை முடித்து கொண்டபின்பு, தெளிவான குரலில் அவர் பேசினார்," உங்களை எதுக்கு சந்திக்க வந்திருக்கேனு யூகிக்க முடியுதா?".
கூட்டம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டது. என்ன விஷயமா இருக்கும் கண்களால் கேட்டுக்கொண்டது. ஆனால் வந்ததும் வராததுமாய் இளைஞர்களை தேடி வந்திருக்கும் அவரின் செயல் எல்லாரையும் கவர்ந்தது.
" இந்த ஊரோட பெரிய சொத்து எதுனு தெரியுமா?"
'என்னடா இது வந்ததும் வராம சொத்துக்கணக்கை கேட்கிறாரு அதை கணக்கு பிள்ளகிட்டு கேட்டு தெரிஞ்சுக்களாமே' - என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டிருந்த ஒருவன் சொன்னான் " பெரிய குளத்து ஏலாவை சுற்றி வாங்கிபோட்டிருக்க தென்னந்தோப்பும்,வயலும்தான் பெரிய சொத்து " - சொல்லி முடிக்குமுன்பு கூட்டம் சிரிபலையில் மிதந்தது. சாமியாரும் சிரித்துக்கொண்டார்.
"நீங்களே சொல்லுங்க சாமி, எங்களுக்கு மரம்கெட்டனும், வலை பாக்கணும், எஞ்சினுக்கு ஆயில் மாத்தணும் இப்படி நெறைய வேலை. வயித்து பசிவேற குடலை பிரட்டுது" - இன்னொருவனின் வாயிலிருந்து வார்த்தை அவசரமாய் விழுந்தது.
" இந்த ஊரோட பெரிய சொத்தே நீங்கதான்".
அமர்ந்திருந்தவர்களில் நேர நெருக்கடி அவருக்கும் புரிந்ததென்பதால் அவர்களின் நேரத்தை விரயம் செய்ய விரும்பாத ஃபாதர் அருள்ராஜ் நேரடியாக விசயத்துக்கு வந்தார். "நம்ம ஊரில இளைஞர் இயக்கம் தொடங்கணும்னு நினைக்கிறேன் நீங்க என்ன சொல்லுறீங்க"
"அதெல்லாம் எதுக்கு சாமி, அதான் ஊருல பங்கு பேரவை இருக்கு, நிறைய சபைகள் இருக்கு, இவங்கயெல்லாம் செய்யாததையா நாங்க செய்யப்போறோம்." - கூட்டத்தில் சில முணுமுணுப்புகள் எழுந்தன.
இந்த முணுமுணுப்புகளால் மன உறுதியை இழக்காத பணியாளர் பேசினார், "நீங்க சொல்லுற இந்த எல்லா அமைப்புகளும் கோவில் பணியைத்தான் செய்யுது ஆனா இந்த சமூகத்துக்கான பணியை செய்யணும் அது உங்களாலதான் முடியும். கிட்டத்தட்ட ரெண்டாயிரம் இளைஞர்கள் இருக்கிற இந்த ஊரில ஒரு நூறுபேர் தன்முனைப்போட செயல்பட்டா இந்த ஊரில இருக்கிற பல பிரச்சனைகளுக்கு விடுதலை கிடைக்கும். அது போல ஒவ்வொரு இளஞனுக்கும் இந்த சமூகத்தைப்பற்றிய பிரக்ஞை இருக்கணும் இதுதான் அடுத்த தலைமுறைக்கு நீங்க கொடுக்கிற பெரிய சொத்து"- அவர் சொல்வதை ஒன்றிரண்டு பேர் தவிர பலர் சரியாக உள் வாங்கவில்லை என்றாலும் அவர் பேச்சுத் தொனியில் ஈர்க்கப்பட்ட கூட்டம் சற்று அமைதியாகியது. "ஆளைப்பாத்தா நல்லவராத்தான் இருக்கார் என்ன சொல்ல வராருனுதான் புரியில"- சிலர் முனகியது ஜாணின் காதில் விழுந்தது.
தனது பேச்சில் சிறிய இடைவெளி விட்டவரின் கண்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கணக்கிட்டது. அடுத்த நிமிடம் மனதில் என்ன நினைத்தாரோ , "நான் சொன்னதில் விருப்பம் உள்ளவர்கள் இங்கிருங்கள். மற்றவர்கள் விடைபெறுங்கள் காத்திருந்ததுக்கு நன்றி" - என்று நிதானமாகச் சொன்னார்.
விட்டால் போது போய்விடலாம் என்றிருந்த சிலர் உடனே எழுந்துவிட்டனர். அவனே போறான் நான் மட்டும் எதுக்கு இருக்கணும் என்ற எண்ணத்தில் சிலர் கலைந்தனர். ஐந்தே நிமிடத்தில் கூட்டம் குறைந்து, பின்னர் குறுகி நூறு பேராய் ஆனது.
"பரவாயில்லை விவேகானந்தன் சொன்னதுபோல் இந்த ஊரை மாற்றும் நூறுபேர் எனக்கு கிடைதிருக்கிறீர்கள்.. நீங்கள் கூடிஇருப்பது உங்களுக்குள் இருக்கும் தேடலால்தான். நான் உங்களை அழைத்தது எனக்குள் உள்ள தேடல். 'தேடுங்கள் கண்டு கொள்வீர்கள்'-இயேசு சொன்னார். நான் உங்களை கண்டு கொண்டேன் நீங்கள் என்னை தெரிந்து கொண்டீர்கள். இந்த ஊரின் பிரச்சனைகள் நான் அறிவேன். சின்ன சின்ன காரணங்களுக்காக பெரிய பெரிய சண்டைகள். இரண்டுபேருக்குள் நடக்கும் வாக்குவாதம் இரண்டே நிமிடத்தில் தெருச் சண்டையாகிறது. சிலர் ஊதி ஊதி பெருசாக்கி அதை ஊர் சண்டையாக்குகின்றனர். என்ன வேறுபாடு உங்களுக்குள் சாதியா..? மதமா..? ஒரே இனம். ஒரே மதம். பின் எதற்கு சண்டை..!ஏன் சச்சரவுகள்..!மதமும், இனமும்,சாதியும்தான் சண்டைக்கு காரணமென்று உலகம் தவறாக புரிந்து வைத்துள்ளது. உண்மை வேறு அதன் தன்மையும் வேறு...அதை நீங்கள் உணரவேண்டும் நமது அடிப்படை மதிப்பீடுகள் மாறவேண்டும்" - கண்களில் புத்தொளிவீசச் சொன்னார் பாதிரியார்.
"உங்களிடம் ஒரு கேள்வி.." - கூட்டத்திலிருந்து ஒரு குரல் வெடித்தது.
"உனது பெயர்"
"ஜாண்"
"கேள்.."
"ஏன் இளைஞர்களை மட்டும் அழைத்தீர்கள்.."
"இளைஞர்கள் உலகையாளும் சக்தி"
"அதனால்..?"
"நீங்கள் இணைய வேண்டும்"
"பெரியவர்களை மீறி எங்களால் என்ன செய்ய முடியும்..?"
"அவர்களை மீறவேண்டியதில்லை நீங்கள் சரியான பாதையில் சென்றால் அவர்களாகவே உங்களுக்கு வழிவிட்டுத்தருவார்கள். தேவைப்பட்டால் வழிகாட்டவும் செய்வார்கள்" - புன்முறுவல் மாறவில்லை பாதிரியார் முகத்தில்.
"சமூக அக்கறை எங்களுக்கு எதுக்கு.. வேலை, வீடு, குடும்பம் என்றிருந்தால் போதாதா?"
"விருப்பம் இல்லாதவர்களைத்தான் போகச் சொன்னேனே நீயும் போக வேண்டியதுதானே.."
"விருப்பம் இருக்கிறது விளக்கம்தான் கேட்டேன்"
"என்ன வயது உனக்கு"
"இருபத்து இரண்டு"
"சரியான வயதுதான் ஆனால் அறியாதவன் போல் பேசுகிறாய்"
"அறிந்ததால்தான் பேசுகிறேன்"
"என்ன அறிந்துகொண்டாய்"
"தன்னையறியச் சொன்ன சாக்கிரடீசுக்கு விஷம் கொடுத்து இந்த சமூகம்தான். சேகுவேராவை,லிங்கனை,காந்தியை கொன்றது இந்த சமூகம்தான் இவர்களை விடுங்கள்..நீங்களும் நானும் பின்பற்றும் இயேசு கிறிஸ்துவை கொலைக்களம் அனுப்பியதும் இந்த சமூகம்தான். நல்லவர்களை கொன்று குவித்த,அவர்களை புரிந்து கொள்ளாத இந்த சமூகத்திற்குத்தானா நாங்களும் சாகவேண்டும்.."
"பேசி முடித்துவிட்டாயா..! கொஞ்சம் மூச்சும் வாங்கிக்கொள்"- சலனமற்று ஒலித்தது சாமியாரின் குரல். "நீ சொன்ன இத்தனை பேரும் கொல்லப்பட்டார்கள். ஆனால் யாரும் சாகவில்லை. மரணம் உடல் சார்ந்ததல்ல. உண்மை சார்ந்தது. புரிந்துகொள். உன்னையறிந்துகொள்..!"
பாதிரியார் கூட்டம் பார்த்து உரக்கச் சொன்னார், அவர் பேசப்பேச இளைஞர் கூட்டம் எழுச்சியுற்றது.
ஜாண் எழுந்து சொன்னான், "எங்களை பிரிக்க பலர் இருக்கிறார்கள் - ஆனால் இணைக்கத்தான் யாருமே இல்லை. இப்போது அந்த குறை தீர்ந்தது".
"'இல்லை..இல்லை நீங்கள் சரியான விதைகள்தான் ஆனால் விழுந்த இடம்தான் சரியில்லை"
சாமியார் தொடர்ந்து பேசினார். "நான் உங்களுக்கு சொல்லுகிறேன் நான் ஒரு வழிப்போக்கன். ஓராண்டுதான் எனக்கு உங்கள் ஊரில் பணி. அதுவரைதான் நான் உங்களோடு பின்னர் என் பயணம் வேறு என் பாதை வேறு. உங்களை வழிநடத்தும் தலைவர்கள் உங்களில் உருவாகவேண்டும். அதற்கான முயற்சியும் முறையான பயிற்சியும் வேண்டும். இப்போது உங்களில் ஒருவனை தேர்ந்தெடுப்போம் "
"இவன்தான் இதற்கு சரியான ஆள்" கூட்டத்தில் ஒருவன் கை ஜாணை சுட்டியது. இன்னொருவன் அதை வழிமொழிந்தான்.
"ஆம்..இவன் படிச்சவன் எங்களுக்கும் பிடிச்சவன்"
"இல்லை இல்லை எனக்கந்த தகுதி இல்லை நான் தலைவனல்ல உங்களில் ஒருவனாகத்தான் இருக்க விருப்பம்" - அவசரமாய் மறுத்தான் ஜாண்.
"இந்த தன்னடக்கம்தான் தலைவனின் முதல் தகுதி.." - பாதிரியார் சொல்ல அனைவரின் கைகளும் இணைந்து கரவொலியால் அதை ஆமோதித்தன.
ஜாண் கூட்டத்தின் முன் எழுந்து நின்றான். அவன் முகத்தில் புதிய நம்பிக்கை ஒளி. இந்த ஊர் நிச்சயம் மாறும். இத்தனை நாட்கள் இதற்காகத்தானே ஏங்கினோம், "நண்பர்களே உங்களை மதிக்கிறேன். உங்களின் கருத்தை ஏற்கிறேன். ஒரு சமூகம் மாறவேண்டுமென்றால் அதன் அடிப்படை மாறவேண்டும். தவறான கருத்துக்களாலும் நம்பிக்கைகளாலும் நமது இதயம் என்ற குளம் கலங்கி இருந்தது. அதில் சில சுய நலமிகள் மீன்பிடித்து விட்டனர். இனி அதற்கு வழியில்லை அந்த கனவுகளை நமது இளைய பங்குதந்தை விதைத்துவிட்டார். நாம் ஒன்றிணைந்திருக்கிறோம் என்ற நம்பிக்கையில் சொல்லுகிறேன், இளைஞர்கள் உலகையாளும் சக்தி இனியொரு விதி செய்வோம். இந்த யுகத்தையும் வெல்வோம்" உணர்சியுடன் ஒலித்தது அவன் குரல்.
மகிழ்சியும் திருப்தியும் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்கையில் மிக அவசியம். நீங்கள் வாழ்கின்ற வாழ்கை உங்களுக்கு திருப்தியை தருகிறதா மகிழ்சியாக இருகிறீர்களா என்று கேட்டால் பலர் உதட்டை பிதுக்குவார்கள். காரணம் மகிழ்சி என்ற சொல்தான் ஒன்றே தவிர அதற்கான அளவுகோல் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது.
சிலருக்கு நினைத்த வேலை கிடைப்பதுதான் மகிழ்சி. சிலருக்கு அழகான மனிவி, சிலருக்கு சொந்த வீடு, சிலருக்கு பணம்,சிலருக்கு புகழ் இப்படி மனிதன் தனது மகிழ்ச்சிக்கான அளவுகோல்களில் உண்டாக்கி அது கிடைக்காத போது துன்பத்திலும், கிடைக்கின்ற போது திருப்தியுமாய் உணர்கிறான்.
ஜாண் அன்று முழுவதும் மிகவும் மகிழ்சியான மனநிலையில்தான் இருந்தான். அவன் மனம் எதையோ சாதித்து விட்டதுபோல் ஆனந்தத்தில் மிதந்துகொண்டிருந்தது. சிறு வயதுமுதல் எந்தவித எதிர்பார்புக்குள்ளும் சிக்காத அவன் மனம் இன்று ஊரில் தொடங்கப்பட்ட இளைஞர் இயக்கம் புதிய எதிர்பார்ப்பையும் அதில் அவன் ஆற்றயிருக்கும் பங்கும் அவனை மிகத்திருப்தியாய் உணரவைத்தது.
பொதுவாக பெரும்பான்மையினர் தான், தனது குடும்பம் என்ற கனவுகளில்தான் வளையவருகின்றனர். மிகச்சிலரிடம் மட்டுமே சமூக பிரக்ஞை எப்போதும் உண்டு. நிகழ்கின்ற ஒவ்வொரு செயல்களிலும் சமூகத்தில் ஏற்படும் தாக்கம்பற்றி தன்னையறியாமல் எவனொருவன் உள்மனம் லயித்துக் கிடக்கிறதோ அவனால் மட்டுமே தன்னலம் தாண்டி சமூக நலம் பற்றி சிந்திக்க முடியும். ஜாணின் மனம் இரண்டாம் வகை மனிதர்களைச்சார்ந்த்து. வீட்டில் இருக்கும் பிரச்சனைகளை அவன் மனம் பெரிதாக எண்ணி மனம் குமுறிக்கொள்வதில்லை. தான் இந்த சமூகத்துக்கான மனிதன் என்ற விதை அவனையறியாமல் எப்போதோ அவன் மனதிற்குள் விதைக்கப்பட்டிருந்தது. அதன் காரணம் அவனுக்கு புரியவில்லை. புரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. எப்படியோ சராசரி மனிதனின் கனவுகள்தாண்டி அவன் உருவாகி இருந்தான்.
அவன் மனம் திரும்ப திரும்ப சிறிய பங்குதந்தை சொன்னதை சுற்றி வந்தது. இளஞர்கள் உலகையாளும் சக்தி. சமூக மாற்றத்திற்கான திறவுகோல் அவனிடம் மட்டுமே உண்டு. சமூகம் வீழ்வதும் எழுவதும் அவன் கையில்.
காலை உணவு மறந்தான் அவன். உரெல்லாம் சுற்றித்திரிந்துவிட்டு வீடு வரும்போது மணி நண்பகல் ஒன்று தாண்டி விட்டது.
"மணி என்னாவுது. காலைல ஒண்ணும் தின்னாம எங்க போன. வா..வா சாப்பிடு மெட்ராஸ்க்கு போவணுமே துணியெல்லாம் எடுத்து வச்சணும்னு எண்ணம் இருக்கா?" - அம்மாவின் குரலில் அதட்டல் இருந்தது. அதன் ஆழத்தில் அக்கறையும் இருந்தது.
"நான் மெட்ராஸ்க்கு போகலேம்மா"
"எல என்ன சொல்லுத?"
"என்னால இந்த ஊர பிரிஞ்சு இருக்க முடியாதம்மா."
"இந்த ஊர்ல அப்படி என்னத்த இருக்கு. கடல்தான் இருக்கு."
"நான் கடலுக்கே போறேன்மா"
"பின்ன எதுக்கு படிச்ச சின்ன வயசிலேர்ந்தே கடலுக்கு போயிருக்கவேண்டியத்தானே. எங்க பணத்தையும் இல்லாமாக்கிண்டு இப்படி கடலுக்கு போய் சாவணும்னா உன்னை படிக்க வச்சோம் "
"படிச்சிட்டு கடலுக்கு போனா பாவமாம்மா"
"எல்லாம் உன் நல்லதுக்குதான் சொல்லுதேன் எங்களை போல நீயும் கஷ்டப்படக்கூடாதுனுதான் சொல்லுதேன் சொன்னாகேளு பேசாம மெட்ராஸ்க்கு போ.. எங்க ஜீவனையும் வாணாலையும் எடுக்கணும்னே வந்து வாச்சிருக்கான்" - அம்மாவின் குரல் அழுகை கலந்து ஒலித்தது. தான் இத்தனை நாள் கூட்டி வைத்த கனவுகள் கலைந்து விடுமோ என்ற பதட்டமும் அதில் தெரிந்தது. மகன் சொல்ல சொல்ல கேக்கலையே என்ற இயலாமையில் அவள் கண்கள் கசிந்தன. நாசியிலிருந்து வடிந்த நீரை முந்தானையால் துடைத்தாள் அமிர்தம்மாள்.
தாயுக்கும் மகனுக்கும் உள்ள உரையாடலை வீட்டு திண்ணையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அப்பா உள்ளே வந்தார். அம்மாவை பார்த்து சொன்னார், " இங்க பாரு அவனை படிச்சவச்சிட்டோம் எல்லா விவரமும் அவனுக்கு தெரியும். அவன் இஷ்டப்படி அவனை விடு. என்னைகாவது ஒரு நாள் இந்த ஊரே வேண்டாம்னு கூட அவனுக்கு தோணலாம் அப்ப அவனுக்கு நீ சொல்லுறது ஒரைக்கும். அதுவரைக்கும் அவன் போக்கில உடு.."
அப்பா சொல்ல, அம்மா அவனை விட்டுவிட்டு அப்பாவை பிடித்துக்கொண்டாள். "எல்லாம் நீங்க கொடுக்கிர எடம். இந்த வீட்டில யார் என் பேச்சை கேக்கிறா...".
ஜாண் தன் அறைக்குள் வந்து சேகுவேரா - வின் வாழ்கை வரலாற்றுப் புத்தகத்தை நேற்றிரவு விட்டதிலிருந்து படிக்க ஆரம்பித்தான்.

Post a Comment