விட்டை - சிறுகதை

ங்கள் ஊரில் வந்து "விட்டையை தெரியுமா?" என்று யாரிடம் கேட்டாலும் சொல்லுவார்கள், அந்தளவுக்கு விட்டை  பிரசித்தம். 
ஊரில் யாரவது விவரங் கெட்டதனமாய் பேசினால் போதும். "எல விட்டையால நீ?" - கேலியாய் வரும் கேள்வி. ஆக விட்டையென்றால் முட்டாள்த் தனத்திற்கு, பைத்தியக் காரத்தனத்திற்கு  குறியீடாகிப் போய்விட்டது.
ஆனால் நான் பார்த்த விட்டையை என்னால் அப்படி ஒரேயடியாக முட்டாள்த்தனத்தின் குறியிடாகக் கொள்ள முடியவில்லை.
பொதுவான மனித கணிப்புகளின்படி பார்த்தால் அவனைப் பைத்தியம் என்று சொல்ல மனம் எண்ணினாலும் அவனின் தனித்துவ செயல்கள் பல அட இவன்தான் மனிதன் என்று சொல்ல வைக்கும். அந்தளவிற்கு அவன் இருப்பியல் அலாதியானது.
விட்டை  எப்போதும் பழுப்பேறிய வெள்ளை வேட்டி சட்டையில்தான் காட்சி தருவான். வருடத்துக்கு ஒரு முறையோ இரண்டு முறையோ அபூர்வமாக சவரம் செய்து கொள்வான். அதுவும் ஊர் நாவிதர்களின் இலவச கருணை இருந்தால் மட்டுமே நடக்கும்.தலை கொள்ளா சுருட்டை முடியை பராமரித்தால் எந்தவித ஸ்டைலுக்ககும் முடி வெட்டமுடியும்.ஆனால் அதிலெல்லாம் சிரத்தையின்றி பரட்டைதலையுடந்தான் அலைவான்.
"விட்டையின் அம்மா அப்பா எங்கேம்மா?" - என் சின்ன வயசில் விட்டையை எல்லாரும் கல்லெறிந்து விளையாடும்போது பச்சாதாபப்பட்டு அம்மாவிடம் கேட்டேன்.
"அவங்க செத்துட்டாங்கப்பா"
"அப்ப நீ செத்துப்போனா நானும் விட்டையாயிடுவேனாம்மா?" - நான் கேட்டதற்கு அம்மா பதிலே சொல்லவில்லை.
விட்டையின் அப்பாவை நான் பார்த்ததில்லை.ஒம்பதோ பத்தோ வயதில் பக்கத்து வீட்டு குமார் என்னிடம் , "விட்டைக அம்மா செத்து போச்சாம் வா பாத்திண்டு வரலாம்" - என்று சொல்லி நானும் இன்னும் நாலைந்து பேராய் போய் பார்த்து வந்ததாய் ஞாபகம்.அன்று எல்லா சாதாரண மனிதர்கள் போல விட்டையும் அழுதது எனக்கு அதிசயமாய் இருந்தது.
விட்டைக்கு விவரம் கிடையாது, அவன் ஒரு பைத்தியம் என்று என்னைவிட பெரியவர்கள் சொல்லிக்கொடுத்ததை அப்படியே நம்பி இருந்த எனக்கு அன்றுதான் விட்டைக்கும் விபரமெல்லாம் தெரியும், இது அம்மா, இது அப்பா என்று புரியும் என்று எனக்குப் புரிந்தது. இதெல்லாம் தெரியும் விட்டை எப்படி விட்டையாக இருக்கமுடியும் என்ற சந்தேகம் அப்போதுதான் எனக்கு முதல் முதலாய் வந்தது.
விட்டை தெருவில் வரும்போது சிறுவர்கள் முதல் - பெரியவர்கள் வரை யாரும் கண்ணில் காண விடுவதில்லை.பரட்டை தலையும், அழுக்கு வேட்டி சட்டையுடன் தெருவில் வரும் அவனைக் கண்டால் போதும்,"ஐ...விட்ட வரான் விட்ட வரான்" - என்று சிறுவர்கள் அவன் மேல் கல் எறிந்து விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த விளையாட்டில் அவன் மேல் கல் பட்டாலும் கோபப்படாமல் சிரித்துக்கொண்டே "கம்பிடுசான் கம்பிடுச்சான்" - என்று புலம்பிக்கொண்டு போய்விடுவான்.இந்த கம்பிடுச்சானுக்கு அர்த்தம் இருக்கிறதா என்று தெரியவில்லை. அவனுக்கு மட்டுமே அதன் அர்த்தம் தெரியும் போலும். இன்று பிறந்த குழந்தைகூட இரண்டு வருடம் கழித்தால் விட்டையின் மேல் கல்லெறிய தயாராகிவிடுமோ என்னவோ..! கேட்க அவனுக்கு ஆளில்லை என்று குழந்தைகளுக்குக் கூட சொல்லி கொடுக்கப்பட்டிருக்கிறது.
சாலையில் வரும்போது அவனை நிரந்தரமாக கேலி செய்வதற்கென்றே ஒரு நடுத்தர வயது கூட்டமும் உண்டு. அவர்களைக்கண்டால் மட்டும் விட்டைக்கு கோபம் எங்கிருந்துதான் பொத்துக்கொண்டு வருமோ தெரியாது. ஒருவேளை இவர்களால்தானே சின்ன பிள்ளைகள் கூட தன்னை "விட்டை...விட்டை.."என்று கூவி அழைக்கிறதே என்ற தார்மீகக் கோபமாகக் கூட இருக்கலாம். உலகத்தில் உள்ள அனைத்துக் கெட்ட வார்த்தைகளாலும் திட்ட ஆரம்பித்து விடுவான். அவன் திட்ட திட்ட குஷியாகிவிடும் அந்த கூட்டம்,அவன் உடுத்திருக்கும் துணியை உரிந்து எடுப்பது, அவன் இரவில் தூங்கும்போது மூடவைத்திருக்கும் போர்வையை எடுத்து ஒழித்து வைப்பது என்று ரகளையில் ஈடுபடும். பொறுத்து பொறுத்துப் பார்க்கும் விட்டை பெரிய கல்லை எடுத்துக்கொண்டு அவர்கள் மேல் எறிய கூட்டம் சிதறி ஓடும்.
விட்டைக்கு உறவு என்று இருப்பது அவனுடைய  சித்தப்பா மகன்கள்தான். 'இவன் ஒரு கிறுக்கன் ஊர் இப்படித்தான் அவனை வம்பிக்கிழுக்கும் நமக்கென்ன வந்தது' - என்று அவர்களும் ஒதுங்கிக் கொள்வார்கள். அவனுக்கும் அவர்கள் மேல் ஒட்டுதல் கிடையாது. அவர்கள் அழைத்தால் மட்டுமே அவர்கள் வீட்டுக்குச் சென்று ஒருபுடி சோறு தின்றுவிட்டு வந்துவிடுவான். அவனுடைய நிரந்தர குடியிருப்பு மீனவர்கள் ஓய்வெடுக்க கட்டப்பட்டிருக்கும் வாசிப்புச் சாலைதான்.
காலையில் எழுந்து அவன் கண் விழிப்பது கடலுக்கு முன்புதான். இரவு மீன்பிடிக்கப் போன கட்டுமரங்கள் வலைகளுடன் ஒவ்வொன்றாய் கரைக்கு வருவது கண்டால் முதல் ஆளாய் கடற்கரைக்கு ஓடிச்சென்று மரம்பிடிப்பது, வலை தூக்குவது, வலையில் கிடக்கும் சாளை,நௌர மீனை கழிப்பது முதற்கொண்டு பல வேலைகளை செய்து கொடுப்பான். வலைக்காரர்களும் அதற்காக மீனோ அல்லது செலவுக்கு அஞ்சு ரூபா,பத்து ரூபா என்று கொடுப்பார்கள்.
விட்டைக்கு மாம்பட்டை(அரிஸ்டம்) குடிக்கும் பழக்கம் ஒரு சிலரால் ஏற்பட்டிருக்கிறது.அப்பொதெல்லாம் அரிஸ்டம்தான் மீனவர்களுக்கு அருமருந்து.குறைந்த விலையில் இரண்டு குப்பி குடித்தாலே கிடைக்கும் போதை மீனவர்களுக்கு போதுமானதாய் இருந்தது. இப்போதுபோலில்லாமல் கையில் நூறு ரூபாய் இருந்தால்தான் ஆச்சு என்றில்லை.
கரைமடி வளைக்க போனால் விட்டைக்கு அரைக்கூலி கொடுப்பார்கள். அப்போதெல்லாம் அவன் கையில்  வரும் அதிக பட்ச பணம் சிலரின் கண்ணை உறுத்த சிலர் அவனை அழைத்துக்கொண்டு அரிஸ்ட கடைக்கு போவார்கள். அவனுக்கு ஒரு குப்பி வாங்கி கொடுத்துவிட்டு மீதி அவன் பணத்திலேயே அவர்களும் குடிப்பார்கள். கணக்குப் பார்க்க தெரியாத விட்டைக்ககு இதெல்லாம் புரிய வாய்ப்பிலை.விட்டைக்கு முதல் முதலில் அரிஸ்டம் குடிக்க சொல்லிக் கொடுத்தது சிலுவை குரூஸ். விட்டையை கேலி வதை செய்யும் கும்பலின் தலைவரும் இவர்தான்.
திருமணம், மரணம், புது நன்மை, திருமுழுக்கு என்று எந்த வீட்டில் நடந்தாலும் எடுபிடி வேலை செய்ய அவனைத்தான் அழைப்பார்கள்.
"வீட்டில தண்ணி கொறவா இருக்கு ஆத்தில போய் தண்ணி கொண்டு வாரியா ஸ்தனிஸ்லாசு" - விட்டையின் பெயர் தனிஸ்லாஸ் என்று பலருக்குத் தெரியாது. அவன் பெயரை சொல்லி கூப்பிட்டால் எந்த வேலையும் செய்து தருவான்.சுடும் வெயிலில் பழைய வாரறுந்த செருப்பை போட்டுக்கொண்டு குடம் குடமாய் தண்ணீர் சுமப்பான். 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பதுபோல் என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் சொல்லும் வேலையை செய்யும் ஒரே ஆள் அவன்தான். கூலிக்கு ஆள் கூப்பிட்டால் நூறு இருநூறு என்று கொடுக்க வேண்டும். இவனென்றால் ஒரு தடவை சோறு போட்டால் போதும். மாடு மாதிரி உழைப்பான். ஆகவே மக்கள் காரியம் ஆகவேண்டுமென்றால் மட்டும் பெயர் சொல்லி கூப்பிடுவார்கள். மற்றபடி "லே..விட்டை..அங்க போ..இங்க வா" - என்பதுதான் பலருக்கு வழக்கம்.  அவன் அதீத கோபத்தில் இருக்கும்போது அவன் பெயர் சொல்லி கூப்பிட்டால் குளிர்ந்த நீராய் தணிந்துவிடுவான். முகத்தில் உள்ள அறியாமை போய் அவன் மலர்ச்சியுடன் சிரிக்கவும் செய்வான். அப்படி அவன் சிரிப்பதைப் பார்ப்பது அபூர்வம்.
விட்டை திடீர் திடீரென்று புது வேட்டி சட்டை அணிந்துகொண்டு வந்தால் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான் ஏதாவது கலியாண வீட்டில் கொடுத்திருப்பார்களென்று. இப்படி ஊரில் எந்த வீட்டில் விஷேசமென்றாலும் அவனுக்கு புதுத்துணி கிடைக்கும். "என்ன தனிஸ்லாஸ் துணி எங்க கிடச்சது.ஆளு ..புது மாப்ளெ போல காணுது" - வழி நெடுக ஆட்கள் கேட்கும் போதெல்லாம் பெருமிதம் பூக்கும் முகத்துடன் வளைய வருவான். அப்போது உண்மையிலேயே தன்னை புது மாப்பிள்ளையாய் கற்பனை செய்து கொள்வான் போலும். முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் அவனுக்கு.
ஆனால்  இரண்டு நாள் கழிந்தால் பழைய  பழுப்பேறிய வேட்டி சட்டைக்கு மாறிவிடுவான்.புதுத்துணி எங்கு என்று கேட்டால் அவனிடம் பதில் இருக்காது.இவன் தூங்கும் போது யாரேனும் எடுத்துக்கொண்டு போய்விடுவார்களோ , அது தெரிந்துதான் இந்த மழுப்பல் மழுப்புகிறானோ..!வெளியே சொல்ல தயங்குகிறானோ..! தனக்கு சோறு போடும் இந்த ஊரைப்பற்றி குறைசொல்வது சரியல்ல என்று யோசிக்கிறானோ..!
விட்டைக்கு சின்ன குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம். குழந்தைகளைப் பார்க்கும்போது அவன் கண்கள் கடவுளின் கண்கள் போல் மாறிவிடும். மென்மையும், வாஞ்சையுமாய் அது ஒளிரும். கையில் இருக்கும் சில்லரை காசுக்கு குச்சி மிட்டாய் வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்க உள்ளூர ஆசைதான் அவனுக்கும். ஆனால் குளிக்காத அழுக்கு படிந்த அவன் தோற்றம் கண்டு குழந்தைகள் அவனை நெருக்க அச்சப்பட்டன. அப்படி நெருங்கினாலும் பெற்றொர்கள் அவனை விரட்டி விடுவர். அழும் குழந்தைகளுக்கு வழியில் போகும் விட்டைய காட்டி ,"விட்டைட்ட புடுச்சு கொடுத்திடுவேன்" - என்று தாய்மார்கள் உணவு புகட்டுவது கண்டு தனக்குள் சிரித்துக்கொள்வது அவன் கண்களில் தெரியும். தலை முடியில் இருக்கும் தூசை தட்டிக்கொண்டு இடத்தை காலிசெய்வான்.
"ஊரில் வெறி நாய் நடமாட்டம் இருக்கிறதாம்.பாத்து ஜாக்கிரதையா போயிட்டு வரணும்"  - ஆறாம் வகுப்பு படிக்க ஹைஸ்கூல் போகும் என்னிடம் அம்மா எச்சரித்து அனுப்பினாள்.
"நாய்க்கு ஏன்  வெறி பிடிக்குது அம்மா?"
"அது இறச்சி சாப்பிட்டா வெறி பிடிக்கும்".
"நாம எல்லா ஞாயிற்று கிழமையும் இறச்சி சாப்ட்றொமே ..நமக்கும் வெறி பிடிக்காதா?"
"ம்...ம்...நேரம் போவுண்டிருக்கு சீக்கிரம் போ..பிந்தி போனா டீச்சர்கிட்ட அடிச்சும்" - அம்மா என்னை விரட்டுவதில் மும்முரம் காட்டினாள்.
அம்மா சொல்லை தட்டாமல் நான் வீட்டிலிருந்து இறங்கி வந்து விட்டாலும்,எப்படியும் இந்த கேள்வியை டீச்சரிடம் கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
கோவில் தாண்டி நடக்கும் போது விட்டை எதிரில் வருவது தெரிந்தது.அவன் பின்னால் சில சீருடை அணிந்த மாணவர்கள் சிறு கல்லெடுத்து அவன் மேல் எறிந்தனர்."லே...விட்டை....விட்டை.." - என்று கத்தினர். விட்டை அதை கண்டு கொள்ளாமல் அவன் பாட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தான்.சிறிவர்கள் எறியும் சிறு கல் அவனை ஒன்றும் செய்யவில்லை. அவன் கந்தலான ஆடை , தளர்ந்த முகம், வெள்ளை புல் முளைத்த தலை முடி என்று பார்க்க பார்க்க எனக்கு பாவமாய் இருந்தது.
"ஏ விட்டை...இன்னா" - அவனிடம் நெருங்கி என் கையில் இருந்த கமர்கண்ட் மிட்டாயை கொடுத்தேன். கமர்கண்ட் மிட்டாய் உருக்கு கருப்பட்டியில் செய்தது. ஒரு மிட்டாய் சாப்பிட்டால் போதும் மீண்டும் திண்ணவேண்டும் போல் அதன் ருசி நாவில் ஒட்டிக்கொள்ளும். அதுவும் கடைசியில் மென்று விழுங்கும் போது அதன் ருசி அதீதம்தான். கோவில் இறக்கத்தில் இருக்கும் 'சடீர் புடீர்' கடையில்தான் அந்த மிட்டாய் கிடைக்கும். அஞ்சு பைசாவுக்கு ஒரு மிட்டாய் அப்போது.
நான் கொடுத்த மிட்டாயை விட்டை வாங்கவில்லை. ''கம்பிடுச்சான்..கம்பிடுச்சான்" - என்று அவன் மேல் கல்லெரிந்த சிறுவர்களைப் பார்த்து  சொல்லிவிட்டு என்னைத் தாண்டி போய்விட்டான்.
"யே..பேப்பட்டி...பேப்பட்டி வாரு..ஓடு..." - வீதியெங்கும் பதற்றக் குரல்கள் ஒலிக்க நான் என்ன செய்வது என்று திகைத்துப் போய் நின்றேன். ஆட்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடி வீட்டுக்குள் போய் கதவை முடிக்கொள்ள சாலை சற்று நேரத்திற்குள் வெறிச்சோடிவிட்டது. சற்று நேரத்திற்கு முன் நான் பார்த்த சீருடை போட்ட மாணவர்கள் எங்கு போனார்கள் என்றே தெரியவில்லை. சாலையோரமிருந்த வீடுகள் பூட்டிக்கொண்டன. தூரத்தில் எனக்கு முன்னால் தாசன் வீட்டு இறக்கத்திலிருந்து மெலிந்த தோற்றமுடைய ஒரு நாய் குதிரைப்பாய்ச்சலில் ஓடி வந்து கொண்டிருந்தது. வெறி நாய் இதுதானா..ஏதோ நோயில் சாகக்கிடக்கும் கிழவி போல் வத்தலாய்..இருக்கிறதே..'நாய் கடித்தால் தொண்ணூறு நாள் தொப்புளை சுத்தி ஊசி போடணும். கலியாண வீட்டுக்கு போனா..போச்சு..அவ்ளோதான்..வாழை இலையில் சோறு தின்ன கூடாது...இப்பபடி பத்துயம் மீறினா... தொண்ணூறாவது நாளில நாயைப்போல குலைச்சு..குலைச்சு..சாகணும்...' - நாய் கடித்தால் இப்படித்தான் என்று நான் கேட்ட செய்திகள் எல்லாம் வெறி நாயை விட எனக்குள் பீதியை கிளப்பியது.
வெறி நாய் நாலுகால் பாய்ச்சலில் என்னை நெருங்கி கொண்டிருந்தது..இதோ நெருங்கி கூட விட்டது.. என்ன செய்யலாம்.... எப்படியாவது தப்பிக்க வேண்டுமே ... அம்மா காலையில் சொல்லிவிட்டது இதனால்தானா ..கடவுளே..காப்பாத்தும்...அக்கம் பக்கம் பார்த்தேன்..யாரும் இல்லை. எனக்கு சட்டென்று ஞாபகம் வந்தது . எனது பின் பக்கம் திரும்பி பார்த்தேன் சற்று தொலைவில் எந்த பிரக்ஞையும் இல்லாமல் விட்டை நடந்து போய்க்கொண்டிருந்தான். நான் அவனைத் தேடி ஓடினேன்..கையில் இருந்த புத்தகப் பை தவறி விழுந்தது. கால் தடுமாறியது..முழு சக்தியையும் திரட்டிக் கொண்டு விட்டையை நெருங்கினேன்.
"விட்டை......!" - எனது கதறல் விட்டையின் காதில் விழுந்திருக்க வேண்டும். திரும்பியவன் எனக்கு பின்னால் வரும் நாயைக் கண்டதும் உஷாரானான். கீழே கிடந்த இரண்டு கையகல கூர் ஈட்டி கருங்கல்லை ஒரு கையில் பிடித்தவாறு போருக்குத் தயாரான வீரனைப் போல் நின்றான். இந்த விட்டை எனக்குப் புதுசு. இவன் ஊர் கேலி செய்யும் கோமாளி விட்டையல்ல. வேட்டியை மடித்து கட்டி நிற்கும் விதம்..கண்களில் தெரியும் சுடர்..நான் அவனைப் பார்த்து பிரமித்து முடிக்கும் முன் வெறிநாயின் கதை முடிந்திருந்தது.
   
  எட்டு வருடங்கள் கழிந்து விட்டன. ஊரை விட்டு திருநெல்வேலி பொறியியல் கல்லூரியில் படிக்கப் போய்  ஒருவருடம் ஆகிவிட்டது. விடுதியில் தங்கி  வந்த நான் முதல் வருட கோடை விடுமுறைக்கு எங்கள் ஊருக்கு வந்தேன். ஊருக்கு வந்தது முதல் என் கண்கள் விட்டை எங்காவது தென்படுகிறானா என்று தேடியது.அவனுக்காக ஃபவ் ஸ்டார் ஜாக்லெட் கூட வாங்கி வைத்திருந்தேன். அவனைக்கண்டால் கொடுக்க வேண்டும். உன்னை மனிதனாய் நினைக்காத இந்த ஊரில் மனிதனாய் நினைக்க என்னைப் போல் சிலருண்டு என்று சொல்ல வேண்டும். நாலைந்து நாளாய் தேடியும் ஆள் கண்ணில் படவேயில்லை. 'விட்டை ஊரில் இல்லையோ...எங்கு போயிருப்பான்.. உடம்பு கிடம்பு சரி இல்லையோ..?'
       படிப்பகத்தில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது வந்த என் சிறுவயது பள்ளித்தோழன் அமலனிடம் கேட்டேன்.
       "விட்டை எங்க மக்கா?"
      "அவனை எதுக்கு தேடுற..அவன் செத்து போய் நாளஞ்சு மாசம் இருக்குமே" - எவ்வித சலனம் இல்லாத அலட்சிய குரலில் சொல்லிவிட்டு செய்தித்தாளின் கொட்டை எழுத்துக்களில்  மூழ்கினான் அமலன்.
    என் இதயம் திடீரென்று பள்ளத்தில் விழுந்து விட்டது போல் உணர்ந்தேன். பரட்டைத்  தலையும், அழுக்கு உடையுமாய் சாதா ஊரில் சுற்றிக்கொண்டிருக்கும் அவன் உருவம் என் கண்ணில் மிதந்தது."கம்பிடுச்சான்..கம்பிடிச்சான்.." - இன்னும் அர்த்தம் தெரியாத அவன் குழறல் ஓசை என் காதை துளைக்க என் மனது விரக்தியுடன் கூக்குரலிட்டது.


Share this article :

Post a Comment

 
Support : Emmess Info Tech
Copyright © 2014. கடிகை பெர்னாட் - All Rights Reserved

Proudly powered by Blogger