தீக்குச்சி


ந்த  வீட்டைச் சுற்றி கூட்டம் கூட்டமாய் மனித தலைகள். வீட்டுக்குள் அவள் அழுது ஓய்ந்த முகத்துடன் நின்றிருந்தாள். சுவரோடு சாய்ந்து கண்கள் எங்கயோ வெறிக்க அவள் நின்ற கோலம் யாருக்கும் பரிதாபத்தை ஏற்படுத்தும். அவளின் வெள்ளைக் கன்னங்களில் கண்ணீர் வழிந்து வழிந்து வற்றிய ஆற்றின் கிளைகள் போல் காய்ந்திருந்தது. முப்பதின் விளிம்பில் இன்னும் இளமை மாறாத அந்த முகம் மனதுக்குள் அடக்கி வைத்திருந்த வலியை அப்பட்டமாய் வெளிக்காட்டியது.

"இவளெல்லாம் ஒரு மனுஷியா இருக்கா..ப்பூ..." - யாரோ காறித்துப்புவது அவளுக்கு நன்றாகவே கேட்டது. அவள் உள்ளுக்குள் இறுகி வெற்றுப்பார்வையில் தன் வலியை வெளிப்படுத்தினாள். ' நான் என்ன செய்தேன்?' - கேள்வியை அவளால் வெளியே கேட்கமுடியாது. அவளைச் சுற்றி நின்ற கூட்டம் அவளை வார்த்தைகளால் சாகடித்துவிடும். இதுவரை அவளை மனதுக்குள் வசைபாடிக்கொண்டிருந்த கூட்டம் இதுதான் தோது என்று பகிரங்கமாகவே அவளை பாய்ந்து குதறிவிடும்.

நடந்திருந்த சம்பவத்தைவிட கூடியிருந்த கூட்டத்தின் கண்கள்தான் அவளை அதிகம் சாகடித்தது. 'எல்லாத்துக்கும் இவள்தான் காரணம். இவளாலதான் அவன் தூக்கில தொங்கினான். பெண்ட்டாட்டி இப்படி இருந்தா சூடு சொரணையுள்ள எந்த ஆம்புள இவகூட வாழுவான். இவளுக்குத்தான் தோலுல சுளுக்கில்ல அவன் அப்படியா..! மானஸ்தான் அதான் ஒரு முழம் கயித்தில தொங்கிட்டான்'. கூடியிருந்தவர்களின் முகத்தில் இறந்தவனுக்கான பரிதாபத்தை விட அவள் மேல் இருந்த காழ்புணர்ச்சியே அதிகம் தெரிந்தது.

ழு வருட திருமண வாழ்கை சொர்க்கமாய் நகர இரண்டு பெண் குழந்தைகளின் தாயான அவளின் வாழ்கையில் புயல் வீசத்துவங்கியது அவள் பெற்ற தாயால்தான். தாய்க்கும் மகளுக்குமிடையே ஒரு முறை வந்த வாய்த் தகறாரில் பெற்றவள் அவளின் வாலிப வயதுக் காதலை சொல்லித் தொலைக்க தொடங்கியது பூகம்பம். பெற்றதாய் தன் மகளைப் பற்றி இப்படியா சொல்ல வேண்டும். அதுவும் கட்டிய கணவனின் முன்னிலையில் இப்படியா பேசவேண்டும்..!

இரவு குழந்தைகளைத் தூங்க வைத்தபின் படுக்கையில் கணவனை நெருங்கியவளின் கைகளைத் தட்டிவிட்டான் அவன். "சீ....என் பக்கம் வராத..!" அவன் சொன்ன சொல் கூட அவளைச் சுடவில்லை. அவன் முகத்தில் தெரிந்த பாவனை, ஏதோ எச்சில் இலையை பார்ப்பது போன்ற உணர்வுடன் அவளை அவன் பார்த்த பார்வை..! அவள் இதயத்தில் பெரிய பள்ளத்தை மண்வெட்டியின் உபயம் இல்லாமல் உண்டாக்கிவிட்டது.

"நீ..இவ்வளவுதானா..என்னைப் பற்றிய உன் நம்பிக்கை இவ்வளவுதானா.." - நினைக்க நினைக்க அவமானமாய் உணர்ந்தாள் அவள். "இவனுடன்தானா இத்தனை நாள் வாழ்கை. என்னை முழுமையாய் ஒப்படைத்து வாழ்ந்த வாழ்கை. ஒரு சொல்லில் நம்பிக்கை செத்துவிடும் அளவிற்கு மேலோட்டமான வாழ்க்கைதான இவன் என்னுடன் வாழ்ந்தது.." - அருகில் சன்னமான குறட்டை ஒலியுடன் கணவன் தூங்கினாலும் அவள் தூங்கமுடியாமல் மனக்காய்ச்சலில் துடித்துக்கொண்டிருந்தாள்.


அன்று தொடங்கிய விலகல், இருவருக்குமிடையே கண்ணுக்குத்தெரியாத ஒரு கோட்டை வரைந்திருந்தது. அவளின் பாராமுகம் அவனுக்கு உரைத்தது. ஆனால் ' நான் என்ன தப்பா சொல்லிட்டேன்...வழியில வாரவன் போறவன் சொன்னதையா நான் கேட்டேன்? அவ அம்ம சொன்னதுனாலதானே அப்படி கேட்டேன். என்னைப்பத்தி எல்லாமே அவகிட்ட சொல்லியிருக்கேன். அவ எங்கிட்ட இதை மறச்சிட்டாளே. அப்படின்னா என்ன அர்த்தம்? அவளைப்பத்தின உண்மை தெரிஞ்சதுனா அவளை நான் வெறுத்திடுவேன். இதுதானே அவ எண்ணம். என் மேல அவளுக்கு நம்பிக்கை இல்லேனுதானே அர்த்தம். இருந்திருந்தா சொல்லியிருப்பாளே...அவளுக்கு என் மேல நம்பிக்கை இல்லேனா..நான் மட்டும் அவளை எதுக்கு நம்பணும் ' - என்பதே அவனின் மனப்பாங்காக இருந்தது.

இருவரும் பேசிக்கொள்வதை நிறுத்தி ஒரு மாதமாகியிருந்தது. ஏதாவது முக்கியமான விசயமென்றால் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் ஜாடை மாடையாய் பேசுவதோடு சரி. அவன் தினமும் வேலைக்குப்போவான். அவள் தினமும் சமைப்பாள். துணிதுவைப்பது முதல் எல்லா வீட்டு வேலைகளையும் செய்வாள். முன்பெல்லாம் வேலை முடிந்ததும் நேரே வீட்டுக்கு வரும் அவன் இப்போதெல்லாம் தாமதமாகவே வர ஆரம்பித்தான். அவள் மனதில் சிறு அச்சம் எட்டிப்பார்த்தது. இப்படியே போனால் பிரிவு நிரந்தரமாகிவிடுமோ..? வீட்டுப்பிரச்சனையை மனதில் வைத்து குடிக்க ஆரம்பித்துவிடுவானோ..! அச்சம் அவளின் பிடிவாதத்தை தளர்த்தினாலும், அவன் வீட்டுக்கு வரும்போது அவனை நெருங்க அவள் தயங்கினாள்.

அவன் அடித்தால் கூட அவள் வாங்கத் தயாராக இருந்தாள். ஆனால் அவன் வாயிலிருந்து விழும் வார்த்தை தன்னை காயப்படுத்திவிடுமோ என்றுதான் அஞ்சினாள். 'ஆம்பளைங்கனா முன்ன பின்ன அப்ப்டித்தான் இருப்பார்கள்..நாம்தான் சகித்துக்கொண்டு போயாகவேண்டும்' - மனசு தனிமையில் அவனுக்காக தவித்தாலும், அவன் வீட்டுக்கு வரும்போது அவன் முகத்தில் தெரியும் இருக்கமும், அலட்சியமும் அவள் அவனை நெருங்கவிடாமல் செய்தது.

'நான் என்ன தப்பு பண்ணிட்டேனு இந்த மனுஷன் இவ்ளோ பிடிவாதமா இருக்காரு.. ஊரு உலகத்தில எந்த பெண்தான் தன்னைப்பத்தி எல்லா விஷயத்தையும் புருஷங்கிட்ட சொல்லுவா..சொன்னா மட்டும் இந்த ஆம்பளைங்க மனசு அதை பெரிசு படுத்தாம பக்குவமா எடுத்துக்குமா என்ன..! நேரங்கிடைக்கும்போதெல்லாம் அத குத்திகாட்டி குத்திகாட்டியே மனச இரணமாக்குவாங்களே.. இருக்கட்டும் இவருக்கு இவ்ளோ வைராக்கியமும் பிடிவாதமும் இருக்கும்னா எனக்கு இருக்ககூடாதா என்ன.? எத்தனை நாளைக்கு என்ன தொடாம இவரு இருப்பாரு பாப்போம்..' - மனசுக்குள் எண்ணி இறுமாந்து இருக்கும் போதே ' ஒரு மாசத்துக்கு மேல என்னை ஏறெடுத்துப் பாக்காம இருக்கிறவன் இப்படியே இருந்திடுவானோ..?!" - லேசான அச்சமும் எழாமல் இல்லை அவளுக்கு.

ரு ஞாயிறு - மதிய நேரம் அவன் அழுக்குத் துணிகளை துவைக்க எடுக்க்கும் போது அறைக்கு வந்த அவன் குரல் கோபத்தில் வெடித்தது."இனி என் துணியை நீ துவைக்க வேண்டாம்..அதை நானே செய்வேன்.."

அவள் பிடிவாதமாய் அவன் துணியை எடுத்து அறையைவிட்டு வெளியேற முயல, அவன் விடாப்பிடியாக அதைப் பிடுங்கி எடுத்து விட்டு அறையை உள்பக்கம் தாளிட்டுக்கொண்டான்.

அவள் கொதிப்புடன் வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு குழந்தைகளை கவனிக்கச் சென்று விட்டாள்.

அறைக்குள் அங்கும் இங்கும் உலாவிக்கொண்டிருந்த அவனுக்கு மனசு கொஞ்சம் லெகுவானது போல் இருந்தது. 'எங்கிட்ட வலிய வந்து பேசினா என்ன கொறஞ்சு போகும் இவளுக்கு உன் திமிற எங்கிட்டயா காட்டுற..இப்ப உன் திமிருக்கு வச்சேன் பாரு ஆப்பு'- மனசுக்குள் எண்ணி எண்ணி திருப்தி பட்டுக்கொண்டான் அவன்.

இரவு உணவு உண்ண அழைப்பு வருமென்று எதிர்பார்த்தான். வழக்கமாக சாப்பாடு ரெடி என்றால் மூத்த மகளிடம்தான் சொல்லி அனுப்புவாள். 'மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் கதவு தட்டப்படவில்லையே..!' அறைக் கதவைத் திறந்து வெளியே வந்தான். அடுக்களையில் அவள் பாத்திரம் கழுவும் அரவம் கேட்டது. குழந்தைகள் இருவரும் ஹாலில் படுத்து தூங்கியிருந்தனர்.

அவன் மெல்ல கனைப்புடன் சோபாவில் அமர்ந்து கொண்டான். கிச்சனிலிருந்து ஒவ்வொரு பாத்திரமாய் கழுவி வைக்கும் ஓசை "ணங்க்.. ணங்க்" - என்று கேட்டது. அது உனக்கு இன்று சோறில்லை என்று தலையில் கொட்டிச் சொல்வதுபோல் அவனுக்குத் தோன்றியது.

மறுநாள் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவனை அவள் சீறினாள். அதுவும் நேருக்கு நேர் நின்று அவள் முறைத்தாள். ஏன் இப்படி துணிந்து தன்னை முறைக்கிறாள் என்று அவன் பல கோணங்களில் யோசித்தும் அவனுக்கு காரணம் புரியவில்லை.

"யார் அவ..இப்படி இளஞ்சு இளஞ்சு பேசிட்டு நின்னீங்க.." - அவள் வார்த்தையில் இருந்த உஷ்ணம் அவனை வெகுவாகவே தாக்கியது. ஆனால் அவள் யாரைப் பற்றி சொல்ல வருகிறாள் என்பதுதான் அவனுக்கு இன்னும் புரியவில்லை. ஆனாலும் அதை காட்டிக்கொல்ளாமல் அவளைச் சட்டை செய்யாமல் தனது அறைக்குள் நுழைந்தான். அவனைத் தொடர்ந்து அவள் குரல் இன்னும் உஷ்ணமாய் அவன் முதுகில் அறைந்தது.

"நான் கேக்கிறதுக்கு பதில் சொல்லிட்டுப் போங்க"

"அதை பத்தி உங்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" - விஷயம் என்னவென்று அவனுக்குப் பிடிபடாவிட்டாலும் அவளை வெறுப்பேற்ற வேண்டுமென்ற முனைப்பில் அவன் அப்படிச் சொல்லிவிட்டு அறைக்கதவை அறைந்து சாத்தினான்.

நேற்று இரவில் அவன் பட்டினி கிடந்ததுடன், இன்று காலையும் அவன் சாப்பிடாமல் வேலைக்குச் சென்று விட, அவள் மிகவும் நொந்து போய்விட்டாள். அவனை, தான் ரொம்பவே கஷ்டப்படுத்துகிறோமோ என்ற பச்சாத்தாபம் மேலோங்க, அவனுக்கான மதிய உணவை சமைத்து எடுத்துக்கொண்டு, அவன் வேலை செய்யும் வங்கிக்கு கொண்டு சென்றாள். ' இனிமேல் இந்த எலியும் பூனை விளையாட்டு வேண்டாம்..அவனிடம் சமரசமாகப் போகவேண்டியதுதான்..அலுவலக்த்திற்கு நான் உணவு கொண்டு சென்றால் அவனால் அதை திருப்பி அனுப்ப முடியாது..வீட்டுக்கு வந்ததும் மீதியை பேசிக்கொள்ளலாம்..' - நினைப்புடன் நடந்தவளுக்கு அவள் கண்ட காட்சி அதிர்ச்சியைத் தந்தது. தன் கணவன் அவனது வங்கி வாசலில் வேறு ஒரு பெண்ணிடம் நெருக்கமாக நின்று சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டு நின்றிருந்தான். அவனிடம் பேச்சை நிறுத்திய பின் யாரிடமும் அவளால் மனம் விட்டு சிரித்துப் பேச முடியவில்லை. அந்தளவுக்கு அவள் மனம் புழுங்கிக்கிடந்தாள். ஆனால் தன் கணவணுக்கு அதுபோல் மனக் குமையல் இல்லை போலும், தன்னிடம் பேசாமல் இருந்தாலும் அவன் சந்தோசமாகத்தான் இருக்கிறான்..அதுவும் இந்த பெண்ணிடம் இந்தளவுக்கு சிரித்துச் சிரித்துப் பேசுகிறான்...முகத்தில் கூட என்ன மலர்ச்சி..அவனுக்கு..! இப்படி என் கூட பேசி எத்தனை நாட்களாயிற்று..' - யோசிக்க யோசிக்க அவள் வயிறு எரிந்தது. அப்படியே வீட்டுக்குத் திரும்பிவிட்டாள்.

வந்ததும் வராமல் கணவனிடம் அவள் கேள்விக்கணையை தொடுத்தும், அவனின் அலட்சியமான பதில் அவளை என்னவோ செய்தது. கண்கள் குளமாக அப்படியே தளர்ந்து அமர்ந்துவிட்டாள். வெளியே விளையாடச்சென்ற குழந்தைகள் அவளை அம்மா..அம்மா.. என்று எழுப்பிய பின்புதான் அவள் சுய நினைவுக்கு வந்தாள்.

து நடந்து வாரம் ஒன்று தாண்டிவிட்டது. மாலை களைப்புடன் வீடு திரும்பியவன் வீட்டில் புதிய ஆண் குரல் சத்தம் கேட்டதும் சற்று நிதானித்தான். முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த மூத்த மகளிடம் கேட்டான்."யாரு வந்திருக்கா வீட்டில?"
"ஒரு அங்கிள் வந்திருக்காங்கப்பா"'
"தங்கச்சி எங்க?"
"அம்ம வச்சிருக்கு"
"ம்.." - என்று தனக்குள் முனகியவன்.  வீட்டுக்குள் செல்ல மனமின்றி வெளியே நின்றான். வந்திருப்பவர் யாராக இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் பேசிக்கொள்வதில்லை என்பதை தெரிந்து கொள்வதில் அவானுக்கு இருந்த தயக்கம் அவனை உள்ளே நுழையவிடாமல் செய்தது.
"தோ..அவரே வந்திட்டார்.."  அவன்  நிழலாட்டத்தைக் கண்டு மனைவி வந்திருந்தவரிடம் சொன்னது காதில் விழ, இதற்கும் மேலே வெளியே நிற்பது உசிதமில்லை என்றுணர்ந்து உள்ளே சென்றான்.
"என்ன அண்ணா நல்லா இருக்கீங்களா?" - வந்திருந்தவன் மாநிறத்தில் நல்ல வளர்த்தியாய் இருந்தான். சராசரி உடற்கட்டு. இதற்கு முன் அவனைப் பார்த்த ஞாபகம் அவனுக்கில்லை.
'யாரா இருக்கும்' - மனதிற்குள் யோசித்தபடியே " நல்லா இருக்கேன்" - என்றான். ஏனோ அவனைப் முதல் பார்வையிலேயே தவிர்க்கத் தோன்றியது அவனுக்கு.
"எங்க மாமா மகன் ஃபாரின்ல வேல பாக்கிறான்" - மனைவி அவனிடம் சொன்னதற்கு 'உம்' கொட்டியதோடு நிறுத்திக்கொண்டான் கணவன். அதற்கு மேல் அங்கு பேச எதுவுமில்லை என்பதுபோல் அறைக்குள் புகுந்து கொண்டான்.
"என்ன ரெண்டு பேருக்கும் சண்டையா?" - அவன் கேட்டதும்,
"ம்..சின்ன மனஸ்தாபம்" - என்று மனைவி சொன்னதும் உள்ளிருந்த அவனுக்கு நன்றாகவே கேட்டது. சீக்கிரம் இடத்தை வந்திருந்தவன் காலி செய்தால் கொள்ளாம் போல் அவனுக்குத் தோன்றியது.
வெளியே அவன் ஏதோ சொன்னதற்கு அவள் சிரித்தது அவனைக் கடுப்பேற்றியது.

தன்பிறகு ஒன்றிரண்டு முறை அவன் வீட்டுக்கு வந்து போனதை அவன் கண்டிருக்கிறான். இவன் எதிர் பட்டால் சிரிப்பதோடு நிறுத்திக்கொள்வான். அவன் தன் விட்டிற்கு வருவது அவ்வளவு நல்லதில்லை என்று தோன்றியது அவனுக்கு. இதை எப்படி அவளிடம் சொல்வது. நான் சொல்லித்தான் புரிய வேண்டுமா அவளுக்கு..ஊர் சனம் நாளு வார்த்தை அரசல் புரசலாக சொன்னாள் தாங்க முடியுமா இவளால். பலவாறு யோசித்துக் குழம்பியவன் , இன்று அவளிடம் இது பற்றி பேசிவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தான்.

வீட்டுக்கு வரும்போது அவள் மொபைல் ஃபோணில் யாரிடமோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள்.  தலையில் வெகுநாளைக்குப் பிறகு மல்லிகைச் சரம் சூடியிருந்தாள். முகத்தில் இட்டிருந்த பௌடர்வாசனை பூவோடு சேர்ந்து ஹால் முழுவதும் பரவியிருந்தது. அவன் வருவதைக் கண்டதும் ஒருகணம் பேச்சை நிறுத்தியவள் மீண்டும் தொடர்ந்தாள்.' யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாள்..ஒருவேளை அவனா..? சே இருக்காது..' மனதுக்குள் எழுந்த சந்தேகத்தை அவனே அழிக்க முற்பட்டான். அவளிடம் பேச வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டுவிட்டான். 'வெகுநாளைக்குப் பிறகு இன்றுதான் சிரித்த முகமாய் இருக்கிறாள். நான் ஏதாவது கேட்கப்போய் மீண்டும் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு இருக்கப்போகிறாள்'. உடை மாற்றிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தான்.

இரண்டு வீடு தாண்டியிருப்பான். "ஏ..சேகரு.." , யாரோ அவன் பெயரை சொல்லி அழைக்க நின்றான். வீட்டு நடையில் வெற்றிலை மென்று துப்பிக்கொண்டிருந்த பெருசு அவனைப் பார்த்து கூப்பிட்டார். அவர் அவனுக்கு தூரத்து உறவுமுறையில் பெரியப்பா ஆகவேண்டும்.
"இங்க வா..ஒங்கிட்ட ஒண்ணு கேக்கணும்"
"என்ன பெரியப்பா சொல்லுங்க?"
"வீட்டுக்குள்ள வா..சொல்லுறேன்"
வீட்டுக்குள் சென்றுவிட்டு பத்து நிமிடம் கழித்து வந்தவனின் முகம் வேதனையில் கருத்து இருந்தது.
ஒரு ஆண் எந்த அவமானத்தையும் பொறுத்துக்கொள்வான். ஆனால் இது அவனை ஒரேயடியாய் நிலைகுலையச் செய்தது. கணவன் மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசுவதை நிறுத்திக் கொண்டால் யார் வேண்டுமானாலும்  அவர்களுக்கிடையே சந்தேக நெருப்பை பற்ற வைத்துவிடலாமோ என்று தோன்றியது அவனுக்கு.
ஆனாலும் புதிதாய் அவர்கள் இருவருக்குமிடையே முளைத்திருக்கும் கேரக்டர் யார்? ஏன் அடிக்கடி வீட்டுக்கு வருகிறான்? அவன் வருவதற்கு இவள் வேறு ஏன் அனுமதிக்கிறாள்..? விடை கிடைக்காத இந்த கேள்விகள் அவனுக்கு மனைவியின் பேரில் அவ நம்பிக்கையை உண்டாக்கியது.


'வெட்டொன்று துண்டு ரெண்டாக கேட்டு விடலாமா?' - அவனுக்கு கோபம் கொப்பளித்தது. விறு விறுவென்று வீட்டுக்கு வந்தான். அவள் செல் ஃபோணில் இன்னும் பேசிக்கொண்டிருந்தாள். 'கழுத..கழுத..புருஷன் வாரதைக் கூட கவனிக்காம போண்ல எவன் கூட பேசிட்டிருக்காளோ...' தன் அறைக்குள் சென்று அவசரம் அவசரமாக உடை மாற்றினான். 'பெம்புள உனக்கே இவ்ளோ கொழுப்புனா..ஆம்பள எனக்கு எப்படி இருக்கும்' - மனசுக்குள் வன்மம் கட்டிட்கொண்டான். உடை மாற்றிய வேகத்தில் வெளியே வந்தான். மொபைல் போணை எடுத்து எண்களை ஒற்றினான். 

"மக்கா..இதுக்கு முன்னாடி நீ சொன்னியே அந்த நம்பர் வேணும்" - எதிர் முனையின் பதிலுக்கு கொஞ்சம் நேரம் காத்திருந்தான். அவன் முகத்தில் வன்மம் குடிகொண்டிருந்தது. 'எப்படி இருந்தேன் நான் ராஜா மாதிரி..இவளைக் கலியாணம் கட்டிட்டு ஊர்ல உள்ளவனெல்லாம் எனக்கு அட்வைஸ் சொல்லுற அளவுக்கு வச்சிட்டாளே....!' 

"மக்கா நம்பர் சொல்லுறேன் குறிச்சுக்க" - எதிர் முனை பேசியது. 

"சொல்லுட நண்பா.." - அவன் சொல்லச் சொல்ல தன் மொபைலிலே பதிவு செய்துவிட்டு நன்றி சொன்னான். இணைப்பைத் துண்டித்துவிட்டு த்ரு முனையில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் வந்து காத்திருந்தான். நாகர்கோவில் செல்லும் பஸ்ஸில் தொற்றினான்.

மறுநாள் காலை வீட்டுக்கு வந்தான். உடுத்திருந்த ஆடை கசங்கியிருந்தது. முகம் சற்று களைத்திருந்தாலும் அவன் மனது இப்போது நிறைவாய் இருந்தது. தன் மனைவிக்கு தக்க பதிலடி கொடுத்ததுபோல் ஒரு திருப்தி. 'ஒரு பொம்புள இவளுக்கே வெக்கம் மானம் இல்லேனா எனக்கு எதுக்கு இருக்கணும்'? - வீட்டை நெருங்கும் போது உள்ளிருந்து ஆண்குரல் கேட்டது. மணி பத்தைத் தாண்டியிருந்தது. 'குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருப்பார்கள். நானும் வீட்டில் இல்லை. நிச்சயம் அவன்தான். ஓடுகாலி..புருஷன் சொல்லாம கொள்ளாம ராத்திரி போனானே..அவனுக்கு என்னாச்சோ ஏதாச்சோனு பதற்றமில்லாமல்..கள்ளப் புருஷனைக் கூட்டி கூத்தடிக்க ஆரம்பித்துவிட்டாளா..சுற்றியுள்ள ஜனங்கள் கேவலமாக நினைப்பார்களே..என்ற எண்ணம் கூடவா ஒருத்திக்கு வராது..! சே..என்ன ஜென்மம் இவள்.' - ஆவேசத்துடன் வீட்டுக்குள் நுழையப் போனவனை உள்ளே கேட்ட மனைவியின் குரல் ஒருகணம் நிறுத்தியது.
"என் புருஷனை விட்டுட்டு உன் கூட வருவேனு எப்படிடா நினச்ச.. எனக்கும் என் புருஷனுக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கும். அதுக்கு உன்னைத்தேடி வந்திடுவேனு நினச்சியா.. நாயே..மரியாதையா வெளிய போடா..இனி இந்த வீட்டுப் பக்கம் மாமன் மகள்..அப்படி இப்படினு உறவு முறையச் சொல்லிட்டு வந்த என் செருப்பக் கழற்றி அடிப்பேன்.."
"ஏய்..என்ன பத்தினி மாதிரி பேசுற..இந்த ஊர்ல உள்ளவங்க என்னையும் உன்னையும் வச்சு கதை கதையா பேசுறாங்க..அது உனக்கு தெரியாமலா இருக்கும். அப்படியிருந்தும் எதுக்குடி என்னை உன் வீட்டுக்குள்ள அனுமதிச்ச..அதான் உனக்கும் என் மேல ஒரு இதுனு நினச்சிட்டேன்..வாய்ப்புக் கிடச்சா எந்த ஆம்பளையும் ராமன் கிடையாது..ஏன் ..உன் புருஷன் மட்டும் யோக்கியனா என்ன? பேங்கில அவன் கூட வேல பக்கிற ஒரு பொம்பளையையும் விடுறது கிடையாதாமே"
"ஏய் என் புருஷனை பத்தி சொல்ல உனக்கு அருகதையே இல்ல மரியாதையா வெளிய போ..!"
"உன் கலியாணத்துக்கு முன்னாடியே நான் உன்னைக் காதலிச்சேன்..ஆனா வேல வெட்டி இல்லாம இருந்த எனக்கு எப்படி உங்கம்மா உன்னைக் கட்டித்தருவாங்க..ஆனா அந்த காதல் இன்னும் என் மனசில அழியாம இருக்கு..ப்ளீஸ் ரேகா..எனக்கு நீ வேணும்"
"சீ..கையை விடுறா..கத்தி ஊரை கூட்டிடுவேன். சின்ன வயசில உன் கூட பழகின பாவத்துக்கு உன்னை அவமானப் படுத்த மனசு வரல..வெளிய போ.."
"முடியாது"
"சொன்னா கேளு..வெளிய போ..என்னை கொலகாரியாக்காத.."
"பரவா இல்ல.. உன் கையால செத்தா எனக்கு சந்தோஷம்தான்..என்னை கொன்னிடு ....இனி நீ இல்லாமல் என்னால வாழ முடியாது"
"சே..எல்லாம் என் தப்பு..கலியாணம் ஆன நான் உன் கூட முன்ன மாதிரி பாசமா பழகினது என் தப்புத்தான்... இந்த வீட்டுக்குள்ளயே உன்னை ஏத்தியிருக்கக் கூடாது..என் புருஷனை கடுப்பேத்தனும்னு உன் கூட ஃபோண்லயெல்லாம் பேசினேன் பாரு..எனக்கு இதுவும் வேணும்..இதுக்கு மேலயும் வேணும்.." - ரேகா விசும்ப ஆரம்பித்தாள்.
இதற்கு மேல் பொறுப்பது சரியல்ல என உணர்ந்த சேகர் உள்ளே நுழைந்தான். அவன் எதிர்பாறாத திடீர் வருகை மனைவிக்கு அதிச்சியை அளித்தது. ஆனாலும் அவளைக் கடித்து குதறக் காத்திருக்கும் ஓநாயிடமிருந்து தப்பிய உணர்வும் அவள் முகத்தில் பிரதிபலித்தது.
"என்னங்க என்ன மன்னிச்சிடுங்க..பாம்புனு தெரியாம இவன வீட்டில சேத்திட்டேன்" - ஓடி வந்து அவன் மார்பில் சாய்ந்து அழுதவளை, தோளைப் பிடித்து நிதானப்படுத்தினான்.
எதிரில் முகத்தில் பீதியுடன் நின்ற அவனை பரிதாபத்துடன் பார்த்தான்." தன் மேல ஒரு பெண் வச்சிருக்க நம்பிக்கையை கடைசி வரை காப்பாத்துறவந்தான் உண்மையான ஆம்பள..இப்படி கிடைக்கிற சந்தர்ப்பத்தில அவ மேல பாயுறது ஆண்மையும் இல்ல. இனி இப்படி உன்னை நம்பினவங்களுக்கு துரோகம் பண்ணாத என்ன? ..போ..போ.." - வாசலை நோக்கி கை காட்டினான்.

இரவு மனைவி காட்டிய நெருக்கத்தை அவன் தவிர்த்தான். "என்னங்க..இன்னும் என் மேல உள்ள கோபம் தீரலயா.."? - ரேகா கெஞ்சலுடன் கணவணை ஏறிட்டாள்.

"அதெல்லாம் இல்லமா.. எனக்குத்தான் உன்னை நெருங்க தகுதி இல்ல"

"என்னங்க என்னென்னமோ சொல்லுறீங்க..எனக்கு ஒண்ணுமே புரியல ப்ளீஸ்பா.. என்னால நீங்க இல்லாம ஒரு நாள் கூட நிம்மதியா வாழ முடியாது.." - அவளின் மென் கரம் ஆவலாய் அவன் மார்பை வருடியது.

"ப்ளீஸ் ரேகா..இன்னிக்கு மட்டும் கொஞ்சம் என்னை தனியா விடு..நாளைக்கு உனக்கு எல்லாமே புரியும்" - சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொண்டான்.

அவள் எழுந்து லைட்டை அணைத்துவிட்டு, அறையை விட்டு வெளியே வந்து குழந்தைகளுடன் படுத்துக்கொண்டாள்.

ரேகா அதிகாலையிலேயே உற்சாகத்துடன் எழுந்துவிட்டாள். கொஞ்ச நாளாய் மனதில் உறைபனிபோல் இருந்த பாரம் குறைந்திருந்தது. உடல் நெளித்து சோம்பல் முறித்து உடல் வளைவுகளில் மெல்லிய நளினம் காட்டினாள். எழுந்து அவிழ்ந்து கிடந்த தலைமுடியை அள்ளி முடிந்துவிட்டு அடுக்களைக்கு வந்து கேஸ் அடுப்பை பற்ற வைத்தாள். சுட சுட அவள் தயாரித்த டீயின் வாசனை அவளுக்கே பிடித்திருந்தது. 

டீ குவளையுடன் கணவன் தூங்கிக்கொண்டிருந்த அறையின் கதவைத் திறந்தவள், "என்னங்கக....!" - அவள் அலறல் சத்தம் அந்த பகுதியில் அனைத்து வீட்டின் கதவுகளையும் பதற்றத்துடன் திறக்க வைத்தது. என்னவோ ஏதோ வென்று அடித்துப் பிடித்து வந்த கூட்டம் அதிர்ச்சியில் வாய் பிளந்து நின்றது...அறைக்குள் மின் விசிறியில் ஊசலாடும் கயிற்றில் கழுத்திருகி அவன் ஊசலாடிக் கொண்டிருந்தான். உயிர் பிரிந்து வெகு நேரம் ஆகிவிட்டது என்பதை அவன் வெறித்த கண்களும், தொங்கிய நாக்கும் எல்லாருக்கும் உணர்த்தியது. தளர்ந்து தரையில் சரிந்து கிடந்தாள் ரேகா. அவள் குரல்வளை வெடித்துச் அதிர்ந்தது அவள் அழுகையில். கூடியிருந்த கூட்டம் குழந்தைகள் இருவரையும் வீட்டை விட்டு அப்புறப்படுத்தியது.

கூடியிருந்த ஆண்களில் சிலர் காரியத்தில் இறங்கினர். கயிற்றின் சுருக்கை நெகிழ்த்தி அவனை தரையிறக்கினர். கட்டிலில் அவன் உடல் கிடத்தப்பட்டது. "என்னங்க..இப்படி பண்ணிட்டீங்களே...!" - அவள் பெருங்குரலுடன் தலையிலும் மார்பிலும் அடித்துக் கதறினாள்.

கூட்டம் அவளை நோக்கி வசைபாட ஆரம்பித்தது."எல்லாம் இவளால வந்த வினை..மனுசனுக்கு மானம் ரோஷம் தானே முக்கியம்..கெட்டுன பெண்டாட்டி இப்படி மானங்கெட்டு நடந்தா எந்த புருஷன் பொறுப்பான்."

"இவளெல்லாம் கரண்டு கம்பத்தில கெட்டு வச்சு அடிக்கணும்..அரிப்பெடுத்து நடக்கா..சீ...வேசத் தேவடியா..அவங்கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன்..இவ நம்ம குடும்பத்துக்கு வேண்டாம்..பாவி மவன் வெள்ளத்தோல பாத்து மயங்கிட்டான்..இப்ப அல்ப வயசில போய் சேந்திட்டான்..இதுக்காடி என் மோன மயக்கி கல்யாணம் பண்ணின.." - சேகரின் அம்மா வந்து மருமகளை பிலு பிலுவென்று பிடித்துக் கொண்டாள். அவள் தலைமுடியை பிடித்து இழுத்தாள்

"யே..உடுங்கே..அவ புத்திக் கெட்டு நடந்தா உங்க மோனுக்கென்ன வந்தது..இவள வெட்டி போட்டுண்டு வேற கலியாணம் பண்ணிண்டு ஜாம் ஜாம்னு வாழாம இவனுக்கா...பொண்ணு கிடச்சாது.. எதுக்கு சாகணும்.."

கூட்டம் அவளுக்கு வித விதமாய் பட்டம் சூட்டிக் கொண்டிருந்தது. இது வரை அவள் கேட்டிராத கொச்சை வார்த்தைகள் அவள் காதை நிறைத்தது. அவள் கண்கள் ஏக்கத்துடனும் பயத்துடனனும் கூட்டத்தை வெறித்தது. தனக்காக நியாயம் சொல்ல இதில் யாருமே இல்லயா? என்ற எதிர் பார்ப்பில் அவள் கண்கள் சோர்ந்திருந்தது. காதுகளைப் பொத்திக்கொண்டு முகத்தை முழங்காலில் புதைத்து விசும்பிக்கொண்டேயிருந்தாள்.."

அவள் மனம் விடை தெரியாத கேள்வியுடன் திண்டாடிக் கொண்டிருந்தது. 'இந்த ஊர் என்னை நடத்தை கெட்டவள் என்று சொன்னதை என் கணவன் நம்பிவிட்டானா? அதனால்தான் இந்த முடிவுக்கு அவன் வந்தானா..?'

"ஹேய்...அவன் பாகெட்ல ஒரு பேப்பர் இருக்கு..என்னவோ எழுதி வச்சிட்டுதான் செத்திருக்கான்" - யாரோ சொல்ல கூட்டத்தில் சல சலப்பு கூடியது. "என்ன எழுதியிருக்கான்..என்ன எழுதியிருக்கான்.." - சிலர் முனுமுணுத்தனர்.

"யே..யாராவது படிச்சு சொல்லுங்கப்பா..என்ன எழுதியிருப்பான் இவளோட வண்டவாளத்தைத்தான் எழுதியிருப்பான்" - பெரியவர் ஒருவர் சொல்ல. அந்த கூட்டத்தில் படித்தவன் போலிருந்த ஒருவன் சேகரின் சட்டைப் பையிலிருந்து அந்த காகிதத்தைப் பிடுங்கி மொளனமாய் கண்களை ஓட்டினான்.

"யே..சத்தமா படிப்பா.." - கூட்டம் அடுத்தவன் குடும்பத்தில் அப்படி என்னதான் நடக்குது என்ற ஆர்வத்தில் கத்த..படித்துக்கொண்டிருந்தவன் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

அவன் ஒருவித குற்ற உணர்ச்சியுடன் ரேகாவைப் பார்த்தான். 'இந்த பொது ஜனம் அத்தனை அவசரமாக ஒரு பெண்ணின் மேல் தீர்ப்பை எழுதிவிடுகிறது' - கலங்கிய கண்களுடன் கடிதத்தை இறந்தவன் மனைவியிடம் கொடுத்தான்.

கண்ணீர் திரையிட்ட கண்களுடன் ரேகா கடிதத்தை வாசித்தாள்.

"ரேகா என்னை மன்னிச்சிடு. 

நீ ரொம்ப நல்லவ..? நெருப்பு நீ.. உன்னப் போய்..!

ஊர் பேச்சக் கேட்டு சந்தேகப்பட்டுட்டேன்.. 

நான் அசுத்தம்..சாக்கடை...

யெஸ் ரேகா, உனக்குத் துரோகம் பண்ணிட்டேன். முந்தா நாள் ராத்திரிதான் அந்த தப்பு நடந்திச்சு. உன்ன பழி வாங்க நினச்சு சாக்கடைல கால் வச்சிட்....இல்ல இல்ல உடம்பயே நனைச்சிட்டு வந்து நிக்கிறேன். 

நம்ம சமூகம் பொண்ணுங்க தப்பு பண்ணினா மட்டும்தான் தண்டிக்குது. ஆண்களை கண்டுக்கிறதில்ல.. என் மனசாட்சி என்னை நிம்மதியா தூங்க விடாது. அதனால எனக்கு நானே தண்டனை கொடுக்கிறேன். இந்த நிமிஷம், உன் பக்கத்தில வந்து கட்டிப் பிடிச்சு உன் மாருல தல வச்சு படுக்க ஆசையா இருக்கு. ஆனா முடியாது என்னால..உங்கிட்ட என் தப்பை சொன்னா போதும் நீ மன்னிச்சிடுவ என்னை. ஆனா அதுக்கு நான் தகுதி இல்ல. செய்யாத தப்புக்கு உன்னை தண்டிச்சிட்டேன்..என் அமைதியால கொஞ்சம் கொஞ்சமா உன்ன சாகடிச்சேன்..எனக்கு மன்னிக்கத் தெரியாது. மன்னிப்பு கேக்கவும் தெரியாது. நான் போறேன். மொத்தமா..போறேன்..என் நாக்கு இனி கொடுக்கு மாதிரி உன்னை கொட்டாது. 

உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும்..ரேகா உன்னை விட்டுப் போக மனசே வரல எனக்கு.... ஆனா மனசு அத்துப் போச்சு..என் மனசாட்சி என்னைக் கொஞ்சம் கொஞ்சமா கொல்லும் முன்னால..நானே செத்திடுறேன்...

குழந்தைகள...பாத்துக்க..நல்லா படிக்க வை. 

கடைசியா ஒண்ணு..என்ன மறந்திடு. நினச்சு நினச்சு அழாத.. மறு ஜென்மம் மேல எனக்கு நம்பிக்கை இருந்ததில்ல..ஆனா..இப்ப ஆசைப்படுறேன். உன் மகனா பிறக்கணும் போல இருக்கு எனக்கு.. அதுக்கு நீ இன்னொரு கலியாணம் பண்ணிக்கணும்...அப்பதான் என் ஆசை நெறவேறும்.. போறேன்....!"

-சேகர்

அவள் கதறினாள். அவள் கையில் இருந்த கடிதம் ஒவ்வொருவர் கையாய் மாறிப் போய்க் கொண்டேயிருந்தது.


Share this article :

Post a Comment

 
Support : Emmess Info Tech
Copyright © 2014. கடிகை பெர்னாட் - All Rights Reserved

Proudly powered by Blogger