உப்புக்கிணறு - சிறுகதை



உப்புக்கிணறு -  வீட்டிலிருந்து ஐந்து நிமிடத்தில் நடந்து போகும் தூரத்தில் இருந்தது. கடலுக்கு அருகாமையில் உள்ளதால் தண்ணீர் லேசாக உப்பு கரிக்கும். அதனால் யாரும் குடிப்பதற்கு அந்த தண்ணீரை பயன்படுத்துவதில்லை.
      குடிப்பதற்கு தெருப் பைப்பில் வரும் சொற்ப தண்ணீரைப் பயன்படுத்தும் மக்கள் வீட்டில் பாத்திரம் கழுவுவதற்கும், வீடு கழுவுவதற்கும் இந்த கிணற்று தண்ணீர்தான் பயன்படுத்துவர்.
      ஊரின் எல்லையில் ஓடும் ஆற்றில் உப்பு தண்ணீர் வந்தால் கடலுக்கு போகிறவர்களின் அவசரக்குளியலுக்கும் இந்த தண்ணீர்தான் கைகொடுக்கும். கலியாண வீடா..! சடங்கு வீடா...உப்பு கிணத்தில் தண்ணீரெடுக்க கூட்டம் அலைமோதும்.
      உப்பு கிணறைப்பத்தி இவ்வளவு நான் சொன்னாலும் இந்த கதை உப்பு கிணத்தை பற்றியதல்ல..அந்த உப்பு கிணத்தை மையமாக சுழலும் மனித ஜீவராசிகளிப்பற்றியது. 
               "மோளெ,உப்புக்கிணத்தில போய் பரிமாற ஒரு குடம் தண்ணி கோரிட்டு வாரயா?" வீட்டு வேலையாய்  இருந்த அம்மா ஒன்பது வயதான  இளைய மகள்  செல்வராணியைக்  கேட்டாள்.
               ஒருநாளும் இல்லாத திருநாளாய் அம்மா இப்படிக்கேட்டதும் செல்வராணிக்கு முகமெல்லாம் சந்தோசம். அம்மாவும் அக்காவும் குடத்தை இடுப்பில் வைத்து தினமும் நேரம் இருட்டத்தொடங்கும் போது தண்ணீர் எடுக்கப்போவதை பார்க்கும்போதெல்லாம் அவளுக்கும் அந்த ஆசை எழுந்ததுண்டு.
               ஆனால் வயதில் சின்னவளான அவளால் பெரிய பிளாஸ்டிக் குடத்தை தூக்க கூட முடியாது. யார் கண்படாமல் தூக்க முயற்சித்து புதிதாய் வாங்கிய பெரிய குடத்தை ஒரு முறை உடைத்து அம்மாவிடமிருந்து அடி பட்டதும் உண்டு.
               "கைய வச்சிட்டு சும்மா இருக்கமாட்டியா..என் உயிர எடுக்கனும்னெ வந்து பிறந்திருக்கா..ஒரு சொல்லும் கேக்கிறதில்ல.." - அடித்த அம்மா மறுநாள் ப்ளாஸ்டிக் குடம் விற்க வருபவரிடம் ஒரு சின்ன குடத்தையும் வாங்கி வைத்திருந்தாள்.
               சாயங்காலம் பள்ளி முடிந்து வந்த செல்வராணிக்கு சின்ன குடத்தைப்பார்த்ததும் ரொம்ப சந்தோசமாய் போய்விட்டது. நேற்று அம்மாவிடம் பட்ட அடியும் மறந்து போய் அம்மாவின் இடுப்பை கட்டிக்கொண்டாள்.
               'என் செல்ல மகளை நேத்து எப்படி அடித்துவிட்டேன்' - மகளின் குதூகலத்தைப்பார்த்த தாயின் முகத்தில் பரிவும் பாசமும் ஒருங்கே தெரிந்தது. இடுப்பை கட்டிகொண்ட மகளின் தலயை வருடி கன்னத்தில் முத்தமிட்டாள்.
               " சோறு தின்னுறியா..மோள.."
               "வேண்டாமா நான் தண்ணி கோறிட்டு வரட்டா?" - தனக்கான குடத்தை ஆசையாய் தூக்கிப்பார்த்தபடி கேட்டாள் மகள்.
               "இல்ல மோள ஒத்தைல போகக்கூடாது..மூத்தக்கா காலேஜ்லேர்ந்து வந்த பெறவு சேந்து போலாம்..நீ இப்ப விளையாடபோ.."
               கல்லூரி முடிந்து ஆறு மணி பஸ்ஸில் வீட்டுக்கு வந்த மூத்த மகள் ஸ்டெல்லா, முகத்தில் கலவரம் தெறிக்க,"அம்மா  இனிமே நான் காலேஜுக்கே  போக மாட்டேன்.." என்றாள்.
               அடுக்களையில் அம்மியில் மசால் அரைத்துக்கொண்டிருந்த அம்மா மகளை பார்த்து கேட்டாள்,
                "என்னடி ஆச்சு?"
               "கூட படிக்கிற பயலுக கிண்டல் பன்னுறாங்கம்மா.."
               "இப்படி துணி உடுத்திட்டு போனா கிண்டல் பண்ணாம என்ன பன்னுவானுக.."
      "பின்ன உங்களை போல வாயில் சேலை கட்டிண்டா போகணும்"
      "பொம்பளைனா அடக்கமா லெட்சனமா துணி உடுக்கணும். இப்படி உடம்பை இருக்கி புடிக்கிற துணியா போட்டா..!"
      "போமா இதெல்லாம் இப்ப ஃபேஷன்"
      "ஆமாடி தலக்கு எண்ண தேய்க்காம விரிச்சு போட்டுண்டு பிச்சகாரி மாதிரி நடக்குறதெலாம் பேசன்..பேசனு சொல்லிட்டு திரிங்க"
      "போமா..எப்பவும் என்னையே குத்தம் சொல்லிட்டு இருங்க. இனி உங்கிட்ட எதுவுமே சொல்ல மாட்டேன்"
               "சரி சரி..இப்பதானெ காலேஜுக்கு போய் சேந்திருக்க போகப்போக எல்லாம் சரியாகும். பரிமாற ஒருசொட்டு தண்ணி வீட்டில இல்ல கிணத்தில போய் தண்ணி கோரிட்டு வா..தங்கச்சியும் கூட வருவா  கூட்டிட்டு போ"
               "நான் போக மாட்டேன்..நீ போக வேண்டியத்தானே எப்பபாத்தாலும் எங்கிட்டயே சொல்லுறது.." - அலட்சியமும் ஆயாசமுமாய் வந்தது மகளிடமிருந்து பதில்.
               அந்த சலிப்பும் அலட்சியமும் அம்மாவை கோபப்படுத்தியது. பல்லை கடித்துக்கொண்டு மகளை முறைத்தாள், "இப்ப கரண்ட் வேற இல்ல. நீ அம்மில மசாலும் அரைக்க மாட்ட, கடலுக்கு போன உங்கப்பா வர நேரமாச்சு.. வெறும் வயித்தோட வர மனுசனுக்கு சோறு போட்டாதானெ நல்லா உழச்சு உனக்கு மாப்பிள பாத்து  கெட்டிகொடுக்க முடியும்."
               அம்மாவின் கோபம் மகளை பெரிசா ஒன்னும் பாதிக்கவில்லை.உதடுகள் சினிமா பாட்டை முனுமுக்க சமையல் அறையை விட்டு நடு வீட்டுக்கு வந்து தொலைகாட்சி பெட்டிக்கு எதிரில் அமர்ந்து கொண்டு ரிமோட்டை எடுத்து டிவியை இயக்கினாள்.
               'இந்த காலத்து மக்கள்ட்ட ஒரு பேச்சுக்கு மறு பேச்சு பேச முடியலைப்பா..'- மனதிற்குள் பொறுமியவள் .. வீட்டுக்கு வெளியே வந்து முற்றத்தில் பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் விளையாடிகொண்டிருந்த இளைய மகளை கூப்பிட்டாள்.
               "மோள... கிணத்தில போய் தண்ணி கோரிட்டுவார்ரியா."
               "அக்கா?" - கேள்வியுடன் அம்மாவை பார்த்தாள் சின்னவள்.
               "அவ வரமாட்டா உடம்பு சரி இல்ல.. ஒரே குடம் தண்ணி மட்டும் கோரிட்டு வா போதும்.."
               "சரிம்மா.." - அம்மா கொடுத்த சிறிய குடத்தை வாங்கி இடுப்பில் வைத்து பழகினாள் மகள்.
               "பாத்து போ மோள ரோட்டில வண்டியெல்லாம் வருது..சீக்கிரம் வரணும்.."
               உற்சாகத்துள்ளலுடன் பள்ளி சீருடையில் போகும் மகளை பார்க்க பார்க்க மூத்தமகள் மேல் அவள் அடக்கி வைத்திருந்த கோபம் பெருகியது.
               "அந்த சின்ன குழந்தைக்கு உள்ள இரக்கம் கூட உனக்கில்ல..இப்படி இருந்தா போதும்.எப்ப பாத்தாலும் டிவி யும் பாட்டும். எல்லாம் செல்லம் கொடுக்குற உங்க அப்பாவை சொல்லனும். இப்படி செல்லம் கொடுத்து வளத்தா போய் சேறுத வீட்டில முன்னபின்ன நடந்தா எப்படி சமாளிக்கும். இங்க காட்டுற வீம்புக்கு அங்க போய்தான் தொலைப்ப".
               தொலைகாட்சியில் ஒடிய பாடல் காட்சியில் லயித்திருந்த மகளின் காதில் அம்மாவின் முனகல் ரணமாய் விழ, அவள் வேண்டுமென்றே டிவி ஒலியை அதிகரித்தாள்.
               'இதெல்லாம் எங்க போய் திருந்த போகுதோ.." - அங்கலாய்ப்புடன் சொன்ன அம்மா மறுபடியும் சமயலுக்கான வேலையில் ஈடுபட ஆரம்பித்தாள்.
               ம்மியில் உருளும் குழவி போலவே அம்மாவின் மனதும் பல நினைவுகளுடன் உருண்டு கொண்டிருந்தது. குழவியில் அரைக்க அரைக்க ஒட்டும் மசால் கலவைபோல் அவள் மனதில் அவள் பெற்ற மக்களின் நினைவுகள் கலவையாய் ஒட்டிகொண்டு அவள் மனதை பிசைந்தது.
      மூத்தது பெண் , இரண்டாவது ஆண் , கடைக்குட்டியாய் பெண் குழந்தை என அளவான குடும்பம்தான்.
      ஆனால் விலை வாசியும், பெண்குழந்தைகளின் வருங்கால திருமண செலவுகளும் கணவனின் கடல் வருமானத்தினால் மட்டும் சாத்தியப்படாது என்பதால் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்கி இருந்த மகனை கட்டாயப்படுத்தி கடலுக்கு போக சொல்லிவிட்டாள்.
      ஆனால் மகனை படிக்கவைத்து பெரியாளக்க வேண்டுமென்ற கனவில் இருந்த அப்பாவுக்கு அம்மாவின் இந்த முடிவில் உடன் பாடில்லை என்றாலும் அம்மாவின் முன்னால் அவரால் பேச முடியவில்லை. மாசம்தோறும் வீட்டு செலவை கவனிக்கவும் சீட்டுக்கு பணம் கட்டவும் திண்டாடும் அம்மாவின் பிரச்சனைகள் அவர் வாயை அடைத்துவிட்டது.
      மகனை கடலுக்கு போகச்சொன்னாலும் அம்மாவுக்கு மகனின் மேல் அனுதாபம் உண்டு. அதனால் அவப்போது இந்த அனுதாபம் கோபமாய் மூத்த மகள் மேல் வெடிக்கும்.
      "நல்லா படிசிட்டிருந்தவனை உங்களுக்காக கடலுக்கு அனுப்பினேன் ஆனா உங்களுக்கு அந்த பொறுப்பு உண்டா..தொட்ட புடிச்சதுக்கு ஒரு வேலை செய்ய சொன்னா முணக்கம்..பெம்புள மக்கள்னா ஒரு பொறுப்பு வேணும், அப்பாவும் , தம்பியும் அருங்கடல்ல போய் சம்பாதிச்சுர பணம்லா நாம சிக்கனமா இருக்கணும்னு நெனக்கிறதில்ல..அத வாங்கு இத வாங்குனு சொல்லுறது..ரோட்டில ஒரு துணிக்காரன் போக விடுறதில்லை.."
      அம்மாவின் புலம்பல் கேட்டு கேட்டு பழக்கபட்டுவிட்டதால் அவள் அம்மாவின் புலம்பல்களை பெரிதாக எடுத்துக்-கொள்வதில்லை. முன்பெல்லாம் அம்மாவின் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதிலுக்கு பதில் சொல்லுவாள். அதானால் கோபத்தின் உச்சிக்கு போகும் அம்மா விளக்குமாற்றால் வெளு வெளுவென்று வெளுத்துவிடுவாள்.
      அதன் பிறகு வீட்டுக்கு வரும் அப்பா மகளுக்காக  அம்மாவிடம் சண்டைபோட வீடு ரெண்டாகிவிடும். 'தன்னால்தானே இதெல்லாம் இனிமேல் அம்மாவிடம் பதிலுக்கு பதில் சொல்லக்கூடாது.' என்று முடிவெடுத்தவள் அதன் பிறகு அம்மாவிடம்  அதிகம் ஒட்டாமல் அப்பாவிடமே அதிகம் ஒட்டுதலுடன் இருந்தாள்.
      தம்பிக்கும் அக்காவென்றால் பாசம் அதிகம்தான் அம்மாவுக்கு தெரியாமல் கேரளாவில் போட்டுக்கு போகும் போது செலவுக்கு கிடைக்கும் பேட்டா பணத்தில் மிச்சம் பிடித்து விதவிதமாய் அவளிக்கு பிடித்த பொருட்களை வாங்கி வருவான்.
      அம்மாவுக்கு அவன் அப்படி செய்வதில் ரொம்ப சந்தோசம்தான். 'இந்த வயசிலே என் மவன் இவ்ளோ பொறுப்பா இருக்கானே இந்த பொறுப்பு பெம்பள மகளுக்கு இல்லியே..' - நினைக்க நினைக்க அம்மாவுக்கு மனம் ரணமாய் வலிக்கும்.
      சிறு வயதிலே தன் அம்மா இறந்து போய்விட்டதால் வீட்டு பொறுப்பை எடுத்ததுடன் தனக்கான ஆசாபாசங்களை துறந்த அம்மாவால் வாலிப வயதில் இருக்கும் தன் மகளின் சின்ன சின்ன ஆசைகள் கூட ஆடம்பரமாய் தெரிந்ததுதான் இதற்கு காரணம் என்பதை உணர்ந்திருந்த அப்பா அம்மாவின் பேச்சில் முகம் வாடி நிற்கும் மகளை கண்டு ஆறுதல் படுத்துவார்.
      "மோள அம்மா சொல்லுறதை பெருசா எடுக்க கூடாது..தாய் கோழி மிதிச்சு குஞ்சு சாகவா போகுது எல்லாம் உங்க நல்லதுக்குத்தான் சொல்லுறானு நெனச்சுக்க"
      "இல்லப்பா அம்மாவுக்கு என்னை எப்பவும் ஏதாவது சொல்லணும். சும்மா சும்மா குத்தம் கண்டு பிடிசிட்டே இருக்கணும் எங்கிட்ட. " - முட்டும் அழுகையுடன் மகள் சொல்ல சொல்ல அப்பா மகளை வாஞ்சையுடன் தலை வருடிக்கொடுப்பார்.
      "பெத்த மக்களை இப்படியெ சொல்லிண்டு இருக்காத, முன்னை போல இல்ல இப்பம் சின்ன மக்க ஒரு சூடு சொன்னபொறுக்காது முன்ன பின்ன எதாவது செய்ய துணிஞ்சுட்டா.!.உயிர் போனா திரும்ப வருமா..?''
      "இவளா என் உயிரை எடுத்துண்டுதான் இவ சாவா. எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம் பெம்புள மக்களை வளத்தா ஒழுங்கா வளக்கணும்.."- இப்படியே தொடங்கும் பேச்சு அம்மா அப்பவுக்குள் பெரும் சண்டையாக மாறிவிடும்.
      ல விதமான எண்ணவோட்டங்களினிடயே மசால் அரைத்து முடித்திருந்த அம்மாவை வீட்டுக்கு வெளியெ கேட்ட சத்தம் திடுக்கிட வைத்தது.
      "யே..லூர்து மேரி உன் மவனுக்கும் யாருக்கோ உப்பு கிணத்துகிட்ட சண்டை வருது நீ இங்கயா இருக்க..?" - தெரிந்த பெண் குரல் சொல்ல மசாலில் விட வைத்திருந்த தண்ணி கோப்பையில் அவசரம் அவசரமாய் கையை நனைத்து சேலை முந்தானையில் துடைத்தபடி வெளியே வந்தாள் அம்மா.
      "என்னா என்ன விசயம்?" - அம்மவின் குரலில் பதற்றம் தொற்றியிருந்தது.
      "உன் மோவன் லூயிசுக்க மோள கிண்டல் பண்ணினானாம். அதை அவங்கப்பண்ட்ட சொல்லி கொடுத்து உன் மோனை பிடிச்சு அடிசிருக்கான்..சீக்கிரம் போ.."
      "எங்க..?"
      "உப்பு கிணத்துப்பக்கம்"
      அம்மா விறுவிறுவென்று உப்பு கிணத்தை தேடி ஓட்டமும் நடையுமாய் வந்து சேர்ந்தாள்.
      "ரோட்டுல ஒரு பெம்புள மக்க போவ வழி இல்ல.. உனக்க வீட்டிலேயும் ரெண்டு பெண் மக்க இருக்கு எதுக்கு உன் மோவன் இப்படி நடக்கிறான்.." - அம்மாவின் முகத்தை கண்டதும் வழியோரம் நின்றிருந்த கூட்டத்தில் சிலர் இப்படி கத்த ஆரம்பித்தனர்.
      அம்மா அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மகனுக்கு அடி விழுந்திருக்குமோ என்ற பதட்டத்துடன் கூட்டத்திற்குள் புகுந்தாள்.
      "ராபட்டு ...யெல ராபட்டு.." - அடர்ந்திருந்த  மனித தலைகளினாலும், மின்சாரம் இல்லாததினாலும் மகனை அடையாளம் காணமுடியாமல் திணறினாள்.
      "யம்மா ஒன்னுமில்ல சின்ன பிரச்சனைதான் நீங்க எதுக்கு வந்தீங்க வீட்டுக்கு போங்க" - அம்மாவை நெருங்கினான் ராபர்ட்.
      "யே விடுங்கப்பா..விடுங்கப்பா...அதான் அவங்கம்ம வந்தாச்சே அவங்க கிட்ட பேசுங்க..தொட்டதும் புடுச்சதுக்கும் சண்ட போட்டுண்டு" - கூடியிருந்த கூட்டம் ஆளாளுககு சமாதானப் பேச்சு பேச ஆரம்பிக்க கூட்டத்தை மீறி மகனை அடைந்து அவனை கட்டிக்கொண்டாள் அம்மா.
      "இங்க பாருங்க மோன வளத்தா ஒழுங்கா வளக்கணும்...இப்பிடி அவுத்து விட்டா ஊர்காரங்கைல அடி பட்டுத்தான் சாவான்" - ராபர்ட்டின் சட்டையை பிடித்திருந்தவன் அம்மாவைப்பார்த்து கத்தினான்.
      ராபர்ட் அவன் கையை தட்டி விட்டு தன்னை முழுமையாய் விடுவித்துக்கொண்டான். சண்டையில் நடந்த இழுபறியில் சட்டை காலரை இழந்திருந்தான் . ஆளைப்பார்த்தால் பெரிசா அடி ஒன்றும் படாதவன் போல் இருந்ததான்.
 அம்மா தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். அவனை கூட்டத்தைவிட்டு தனியாகப் பிரித்து வீட்டை நோக்கி அழைத்து வந்தாள்.
      "எல உனக்கென்ன புத்தி இது நம்ம வீட்டுலேயும் பெம்புள மக்களை வச்சிட்டு..உடம்பு சரி இல்லேனு தொழிலுக்கு போகாம இருந்தவன் இங்க எதுக்கு வந்த..பாரு எல்லாரும் கேவலமா பாக்கிறாங்க..போல வீட்டில போ"
      "நீங்க போங்க நான் பெறகு வாரேன்"
      "இப்ப போகப்போறிய இல்லயா உங்க அப்பா வரட்டும் உனக்கு இருக்கு" - மகனை தாய் விரட்டினாள்.
      வீடு வந்து சேர்ந்த பிறகும் அம்மாவின் பேச்சு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
      "கண்டவன் கைல அடி படுறதுக்கா உன்னை பெத்து வச்சிருக்கேன் ஒழுங்கு மரியாதையோட இருந்துக்க. உனக்கு எப்ப பதினெட்டு வயசு ஆகாதுனு இருக்கேன் யார் கால் கைலயாவது உழுந்து விசா பாத்து வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சுடனும்"
      "ஒரு பிரச்சனையும் இல்லைமா?" - நடந்த விசயத்தில் இம்மியும் பாதிக்காத முகத்துடன் மகன் சொன்னான்.
      "பின்ன சும்மா போனவனையா அவன் புடுச்சு அடிச்சான் வழியில போற மக்களை கிண்டல் பண்ணுறது தப்பில்லயா.."
      "யாரு கிண்டல் பண்ணினா..அவ எனக்க ஃப்ரெண்டு..சும்மா பாத்து சிரிச்சேன் அதை அவங்க மாமன் பாத்திட்டான்"
      "ஆமாம்மா இவன் அவகிட்ட பேசுவான் நானும் பாத்திருக்கேன்" - மூத்தவள் அம்மாவிடம் ஊதினாள்.
      "எல உன்னை நல்லவன் நல்லவனு நினச்சேன். உங்கிட்டயும் கள்ளத்தனம் இருக்ககத்தான் செய்யுது..இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு அழசா நீயெல்லாம் சரிப்படமாட்ட .. உனக்கு மூத்தவதானே அவளைப்பத்தி இதுவரைக்கும் ஒரு பிரச்சனை உண்டா..? அவ உண்டு அவ படிப்புண்டுனு இருக்கா.. அவளப்பத்தி ஒருத்தன் தப்பா பேசுவானா.. " -
      அவளைப்பற்றி பெருமையாய் அம்மா   பேசிக்கொண்டே போக தன் காதுகளை நம்ப முடியாமல் நின்றிருந்தாள் ஸ்டெல்லா.
      அதே நேரம் தண்ணீர் எடுக்க போயிருந்த இளைய மகள் செல்வராணி கண்ணை கசக்கிக் கொண்டு வந்து நின்றாள்.
      "யம்மா பாட்டை கிணத்தில உழுந்துட்டு.."
      அம்மா எரிக்கும் பார்வையுடன் மூத்தவளை முறைத்தாள், "தடி மாடெல்லாம் வீட்டில இருந்தா சின்ன குழந்தை என்ன செய்யும் ஏய்..அந்த நங்கூரத்தயாவது வாங்கிட்டு வாடி...என் என் ஜீவனயும் வானாலையும் எடுக்கனும்னே வந்து பிறந்திருக்கா..."

      இப்போது அம்மாவின் ஏச்சு உப்புக் கிணற்று தண்ணீர் போல் கரிக்காமல் சீமை நெல்லிக்காய் சாப்பிட்ட பின்பு குடிக்கும் தண்ணீர் போல் இனித்தது அவளுக்கு.
Share this article :

Post a Comment

 
Support : Emmess Info Tech
Copyright © 2014. கடிகை பெர்னாட் - All Rights Reserved

Proudly powered by Blogger