![]() |
| வள்ளியாறு - கடியபட்டனம் |
"கார் ரெடியா இருக்கு" - சொன்ன அப்பா என் கையில் இருந்த டிராலியை வாங்கி உருட்டிக்கொண்டு காரை சமீபித்தார்.
"என்னப்பா நல்லா இருக்கியா?"
"ம்..நல்லா இருக்கேன்..நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா..?" - எல்லாரிடமும் பொத்தம் பொதுவாய் நலம் விசாரித்துக்கொண்டு காரில் அமர்ந்தேன். கார் விமான நிலையத்தின் படு சுத்தமான தார்ச்சாலையில் ஐந்து நிமிடம் தேய்த்து ஓடியபின் வெளியே வந்து சற்று குறுகலான சாலையில் பயணித்து பொது போக்குவரத்தில் கலந்தபோது மீண்டும் எங்கள் ஊர் ஆறு மெல்லிய ரிதத்தோடு என் நினைவுகளில் ஓடியது.
என் பாலிய காலங்களில் முக்கால் பங்கு ஆற்றில்தான் கழிந்திருக்கிறது. எங்கள் வீட்டிலிருந்து ஐந்து நிமிடம் பொடி நடையாய் நடந்து போனாலே ஆறு வந்துவிடும். அஞ்சாம் வகுப்பு புத்தகத்தில் குமரி மாவட்ட நதிகள் பாடத்தில் வள்ளியாறு கடியபட்டணத்தில் அரபிக்கடலில் கலக்கிறது , என்று எங்கள் ஊர் பெயர் வந்தபோது எல்லாரிடமும் காட்டி , "ஏ..நம்ம ஊர் பேரு எங்க புக்கில வந்திருக்கே" - என்று பெருமிதப்பட்டது இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறது.
சனிக்கிழமையென்றால் எனக்கும் என்னைபோல் எங்கள் ஊர் மாணவர்கள் எல்லாருக்கும் கொண்டாட்டம்தான். காலையில் கஞ்சி குடிச்ச கையோடு குளிக்க கிளம்பினால் முதலில் ஆறு சங்கமிக்கும் அரபிக்கடலில் போய் தோடு எடுப்பது, மூறை எடுப்பதென்று மதியம் வரை ஓடிவிடும். கடல் தண்ணியில் குளித்ததால் உப்புகரிக்கும் வாயோடும் மெல்ல எரியும் கண்ணோடும் ஆற்றில் குளித்தால்தான் ஆச்சு. இல்லையென்றால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும். ஆற்றில் வந்தாலும் அவ்வளவு லேசில் வீட்டிற்குச் செல்வதில்லை தொட்டு விளையாட்டு என்று ஆற்றில் முங்கி குளித்து விளையாடினால்தான் குளித்த திருப்தியே கிடைக்கும்.
'சால் பூல் த்ரீ..' - தொட்டு விளையாட்டில் யார் மற்றவர்களை தொட வரவேண்டும் என்பதை தீர்மானிப்பது இந்த துணை விளையாட்டின் மூலம்தான். எல்லாரும் வட்டமாய் நின்று இரண்டு கைகளையும் பிரித்து வைத்து நிற்க தலைவன் , "சால் பூல்" - என்று சொல்லும்போது காற்றில் சற்று நேரம் ஆட்டிவிட்டு "த்ரீ" - சொல்லும்போது ஒரு உள்ளங்கையின் மேல் மறு உள்ளங்கையை வைத்து மூடவேண்டும் - யாரெல்லாம் தலைவன் போல் மூவார்களோ அவர்கள் வெளியேறுவர். கடைசிவரை வெளியேறாமல் இறுப்பவரே மற்றவர்களை நீச்சல் அடித்து விரட்டிப்பிடித்து தொட வேண்டும்.
ஆற்றில் பிரமாண்டமாய் இருக்கும் குருவிகல் தான் தொட்டு விளையாட்டு தொடங்கும் இடம் எங்களுக்கு. உயரமான சற்று சரிவான பாறையின் கிழக்கு பக்கம் தண்ணீர் சற்று ஆழமாக இருக்கும். அதனால் 'ரெடி' சொன்னவுடன் தேடி வருபவனைத்தவிர மற்றவர்கள் எல்லாரும் முதலில் பாறையிலிருந்து குதிப்போம். அரைமணிக்கூர் முதல் இரண்டு மணிக்கூர் நேரம் கூட தொட்டு விளையாடுதல் நடக்கும். அதன்பிறகு..?
சனிக்கிழமையென்றால் எனக்கும் என்னைபோல் எங்கள் ஊர் மாணவர்கள் எல்லாருக்கும் கொண்டாட்டம்தான். காலையில் கஞ்சி குடிச்ச கையோடு குளிக்க கிளம்பினால் முதலில் ஆறு சங்கமிக்கும் அரபிக்கடலில் போய் தோடு எடுப்பது, மூறை எடுப்பதென்று மதியம் வரை ஓடிவிடும். கடல் தண்ணியில் குளித்ததால் உப்புகரிக்கும் வாயோடும் மெல்ல எரியும் கண்ணோடும் ஆற்றில் குளித்தால்தான் ஆச்சு. இல்லையென்றால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும். ஆற்றில் வந்தாலும் அவ்வளவு லேசில் வீட்டிற்குச் செல்வதில்லை தொட்டு விளையாட்டு என்று ஆற்றில் முங்கி குளித்து விளையாடினால்தான் குளித்த திருப்தியே கிடைக்கும்.
'சால் பூல் த்ரீ..' - தொட்டு விளையாட்டில் யார் மற்றவர்களை தொட வரவேண்டும் என்பதை தீர்மானிப்பது இந்த துணை விளையாட்டின் மூலம்தான். எல்லாரும் வட்டமாய் நின்று இரண்டு கைகளையும் பிரித்து வைத்து நிற்க தலைவன் , "சால் பூல்" - என்று சொல்லும்போது காற்றில் சற்று நேரம் ஆட்டிவிட்டு "த்ரீ" - சொல்லும்போது ஒரு உள்ளங்கையின் மேல் மறு உள்ளங்கையை வைத்து மூடவேண்டும் - யாரெல்லாம் தலைவன் போல் மூவார்களோ அவர்கள் வெளியேறுவர். கடைசிவரை வெளியேறாமல் இறுப்பவரே மற்றவர்களை நீச்சல் அடித்து விரட்டிப்பிடித்து தொட வேண்டும்.
![]() |
| குருவிகல் - வள்ளியாறு |
"லே கூறம் காயலாம்"- ஒருத்தன் ஐடியா கொடுப்பான்.
"ல வேண்டாம்ல நேரம் ஒருபாடு ஆச்சு..வீட்டில போலாம்" - மற்றவன் மறுக்க, "நீ போறேனா போ...நான் கூறம் காயப்போறேன்.." - இப்படி ஒருவன் சொல்லிவிட்டால் போதும் வீட்டில் அப்பா அடிப்பாறே அம்மா திட்டுமே என்ற எண்ணமெல்லாம் போய்விடும்.
ஆற்றின் கரையில் பரவிக்கிடக்கும் சூடான கருமணலில் குப்புற படுத்து கூறம் காயத்தொடங்கினால் அரைமணி நேரம் அதில் ஓடிவிடும். உடல் , தலையெல்லாம் காய்கிற வரை கருத்த மண்ணை குப்பம் குவித்து கதகதப்புக்காய் மார்போடு அணைத்துக்கொண்டு கிடந்தால் கிடைக்கிற சுகம்..! அப்பப்பா..!. உடல் நீரெல்லாம் கருமணல் உறுஞ்சி எடுக்க அதன் பின்னால் உடலில் மெல்ல உஷ்ணம் ஏறும். பின்னர் மீண்டும் பத்து பதுனஞ்சு நிமிடம் ஆற்றில் குளித்துவிட்டு தலைகூட துவட்டாமல் வீட்டில் போனால் கிடைக்கும் அடியும் ஏச்சும் கூட பெருசாய் தெரியாது. விடுமுறை நாட்களென்றால் இப்படித்தான் ஆறே கதியென்று ஓடிவிடும்.
"என்ன மோன வந்ததிலேர்ந்து ஒண்ணும் பேசாம இருக்க? உடம்பு கிடம்புக்கு ஒண்ணுமில்லியே?", அம்மாவின் அக்கறையான குரல் என் எண்ண ஓட்டத்தை நிறுத்தியது.
"அதெல்லாம் ஒண்ணுமில்லேமா"
"ஜீஸ் குடி இன்னா..?" - அம்மாவின் கையில் இருந்த ஸ்லைஸ் பாட்டிலை வாங்கிக்கொண்டேன்.
"ஊர் எல்லாம் எப்படி இருக்கு?"
"ம்..நல்லாதான் இருக்கு..நம்ம ஊர் கோயிலை புதுசா வேலை பாத்து வச்சிருக்கு..பெயிண்ட் எல்லாம் அடிச்சு புது கோயில் மாதிரியில்ல இருக்கு" - தம்மி சொன்னான்.
"ஒரு கோடிக்கு மேல செலவு ஆச்சே" - அப்பா சொன்னார்.
"ஊர்ல அவ்ளோ பணத்துக்கு என்ன பண்ணிணாங்க..?" - நான் கேட்டேன். ஃபேஸ் புக்கில் ஊர் நண்பர்கள் பகிர்ந்திருந்த ஆடம்பரமான கோவில் முகப்பு வளைவும் , காங்கிரீட்டில் வேய்ந்திருந்த மேல் கூரையும், கோவில் உள் பீட அலங்காரங்களும் கண் முன்னால் நிழலாடியது.
"ஊர்ல ஒரு குடும்ப அட்டைக்கு ஐய்யாயிரம் ரூபா வரி போட்டாங்க..பெறவு சுனாமில மெட்ராசனத்திலேர்ந்து வந்த பணம் உண்டா..அப்பப்ப பிரியுத நன்கொடையும் சேத்தா பணம் மிச்சம்தான் வரும். அதான் ஆடம்பரமா திருநா எடுத்தாவு" - அப்பா ஊர் பங்குப்பேரவையில் இருப்பவராதலால் விபரமாக விளக்கம் சொன்னார்.
"சுனாமில வந்த பணம் கோயில் வேலைக்கு எடுத்தா எப்படி..எத்தனையோ ஏழ பிள்ளைங்க படிப்பு செலவுக்கு உதவலாமே..வீடு இல்லாத எத்தனை பேரோ இருக்காங்களே அவங்களுக்கெல்லாம் உதவி செய்யலாமே" - நான் என் கருத்தைச் சொன்னேன்.
"ஊர்ல இப்ப யாரு பாவபட்டு கிடக்கா ? எல்லாரும் வசதியாத்தான் இருக்காவு..அதிலயும் ஒருத்தனுக்கு கொடுத்தா ஒருத்தனுக்கு பராதி வரும். அத விட பொதுக்காரியத்துக்கு செலவு பண்ணினா ஒருத்தரும் ஒண்ணும் சொல்ல மாட்டானுக." - அப்பா அவர் பங்குக்கு என்னிடம் வாதிட்டார்.
"இப்பெல்லாம் கோயிலுக்கு போற ஆளு கொறையுது. ஆனா அதுக்காக செலவு பண்ணுற பணம் அதிகமாயிட்டே வருது. கடவுள் வந்து எனக்கு பெரிய கோயிலா கட்டுங்கணு கேக்கவா செஞ்சாரு மனுஷன் ஒண்ணுகூடி செபிக்க ஒரு இடம் வேணும் அது ஆடம்பரமா இருக்கணும்னு அவசியம் இல்ல" - என் மூத்த அக்கா புருஷன் அப்பாவிடம் கேட்க அப்பா மௌனமானார்.
கார் சன்னலுக்கு வெளியே மனித தலைகளும், கட்டிடங்களும், மரங்களும் வேகமாக கடந்து போய்க்கொண்டிருந்தது. காலம் கூட இப்படி நூற்றி ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் பயனிப்பதாய் பட்டது எனக்கு. இப்போதுதான் வெளிநாட்டுக்கு போனமாதிரி இருக்கு. ஐந்து வருடங்கள் ஓடிவிட்டது. வருடம் தோறும் விடுமுறை கிடைத்தாலும் ஊருக்கு வர நான் சம்மதிக்கவில்லை. முதல்ல ரெண்டு அக்காக்களுக்கும் திருமணம் முடியணும். அப்புறம் இருக்குற கடனை அடைத்துவிட்டு நெலம் வாங்கி வீடு போடணும், என்னைக்கு வீடு கட்டி முடிக்கிறோமோ அன்னைக்குத்தான் ஊருக்கு வருவேன் என்று பிடிவாதமாய் இருந்தேன். நினச்ச காரியத்தை மகன் முடித்துவிட்டானே என்ற சந்தோசமும் பெருமிதமும் இப்போது என் பெற்றோர்களின் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.
"மோன உன்னை கொற சொன்ன இந்த ஊர் முன்ன நீ தலை நிமிர்ந்து நிக்கணும். பெம்புள மக்க இருக்கு , ஒன் மோனுக்கும் வேல இல்ல உன்னை நம்பி எப்படி கடன் குடுக்க? இப்படி நம்ம குடும்பகாரங்கலெள்ளாம் நம்மளை ஏன் நாதினு கேக்கவே வராட்டாவு அவங்க முன்னாடி பாரு பாருனு வாழந்து காட்டணும்" - அம்மாவின் மனவேதனை எனக்கு நன்றாகவே உறைத்தது.
"குளச்சல் வந்தாச்சு" - மச்சான் குரல் என்னை உசுப்பியது. மனசு தவித்தது. வெளியே இரவின் கருமை பரவி இருந்தாலும் என் மனமெல்லாம் ஆர்வம் வெளிச்சமாய் கொந்தளித்தது.
'ஆ...ஐந்து வருடங்களுக்குப் பிறகு இதோ நான் பிறந்த ஊரை தரிசிக்கப் போகிறேன், நான் சுவாசித்த முதல் காற்று இங்குதான் என்னைத் தீண்டியது. நான் புரண்ட பூமி இன்னும் பத்து நிமிடத்தில் வரப்போகிறது..நான் கேட்ட கடல் ஓசை, நான் குளித்த ஆறு, நான் தினமும் பஸ் ஏறிய பேருந்து நிறுத்தம், கடலில் குளித்து கருத்த யானை போன்ற பாறையில் கடல் சிப்பி எடுக்க குளித்தது, பாறையின் ஆக்கு என் உள்ளங்காலை கிழித்தது, வழிந்த ரத்தம் உப்புத்தண்ணியோடு கலந்தது..' - மனசு இன்னும் எதை எதையோ எண்ணி ஏங்கியது. ஐந்து வருடங்களாய் காணாமல் போன சொர்க்கம் மீண்டும் கிடைத்தது போல உள்ளம் துள்ளியது.'அதோ தூரத்தில் தெரிகிறது எங்கள் வீடு..ம் வந்து விட்டது`. காற்றில் மிதப்பதுபோல் இருந்தது மனசுக்கு.
மறுநாள் காலை -
அம்மா கொடுத்த தேநீர் குளிருக்கு இதமாய் இருந்தது. அடுக்களையில் அம்மா சமையல் வேலைகளில் மும்முரமாய் இருக்க டைனிங்க் டேபிள் அருகில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டேன்.
அடுக்களை ஜன்னல் வழியே அரபிக்கடல் நீலப்பாயை நீட்டி விரித்ததுபோல் சின்ன சின்ன அலைகளின் சலனத்துடன் ரம்யமாய் தென்பட்டது. காலை சூரிய வெளிச்சம் இன்னும் முற்றிலும் கடல் முழுவதும் பரவியிருக்காத நிலையில் கடலும் தூங்கி எழுந்த குழந்தைபோல் மலங்க மலங்க விழிப்பதுபோல் தோன்றியது எனக்கு. கடலில் நல்ல முரட்டு கருப்பு யானைகளை கவிழ்த்துப் போட்டதுபோல் கரும்பாறைகள் கடல் மட்டத்துக்கு மேலே முதுகுகாட்டிக்கொண்டிருந்தது. அதில் அலைகள் பட்டுத்தெறிக்கும் இடம் துணிதுவைக்க வாளியில் சர்ப் பொடியை போட்டு கலக்கினால் பொங்கும் நுரைபோல் வெள்ளையாய் காட்சி தந்தது.
"அம்மா நான் ஆத்தில குளிக்க போறேன்"
"அதெல்லாம் வேண்டாம் நீ வீட்டிலேயே குளி இந்த நாள்ல ஆத்தில உப்பு தண்ணி வரும்னு தெரியாதா உனக்கு"
"அதான் தடுப்பு சுவரு கட்டி இருக்கே..அதுக்கு அந்த பக்கம் போய் குளிச்சிட்டு வாரேன்"
"அங்க போய் குளிச்சுதத உட உப்பு தண்ணில குளிச்சலாம்..ஆறு ஆறு மாதிரியா கிடக்கு செடியெல்லாம் வளந்து தண்ணி கெட்டிபோட்டு ஒரே நாத்தம்..அதுல போய் மட்டும் குளிச்சுடாத"
அம்மாவின் வார்த்தை என்னை அதிர்ச்சியடைய வைத்தது. ஆறு என்பது எங்கள் ஊரின் கௌரவம். முட்டதிலேர்ந்தெல்லாம் கூட்டம் கூட்டமாய் ஆம்பளைங்களும் பொம்பளைங்களும் குளிச்ச காலம் உண்டு. "எங்க ஊர்ல உள்ள ஆறு மட்டும் இல்லேனா நீங்கலெல்லாம் அழுக்கு புடுச்சுதான் சாவீங்கல" - முட்டத்து காரங்ககிட்ட விளையாட்டாய் எங்க ஊர் பெருசுங்க சொல்லுவார்கள்.
ஆற்றில் ஆறு மாசம்தான் நல்ல தண்ணி ஓடும். ஜூன் மாசம் பள்ளிக்கூடம் திறக்கும்போது கூடவே ஆற்றில் நல்ல தண்ணி வந்துவிடும்..மழை நல்லா பெய்து சிவந்த மண்லேர்ந்து வரும் களிமண் கலந்த வெள்ளம் ஆற்றில் கலப்பதால் ஸ்ட்ராங்க் டீ கலரில் ஆற்று தண்ணி ஓடும். கரை புரண்டு ஓடும் வெள்ளம் ஆற்றில் கிடக்கும் எல்லா கழிவுகளையும் இழுத்துக்கொண்டு கடலில் சேர்த்து விடும். அதனால் முதல் ரெண்டு நாளுக்கு ஆற்றில் பெரிய கூட்டம் இருக்காது. "முதல் தண்ணில குளிச்சா நோய் வரும்ல..ஆறுமாசமா ஆத்தில கிடந்த சப்பும் சவரும் முதல்ல கடலுல போவட்டும் அதுக்கபிறகு குளிச்சாதான் நல்லது" - அப்பா சொல்லியிருக்கிறார்.
இரண்டு நாள் கழித்தால் ஆற்று வெள்ளம் பன மரத்து பதனீர் கலரில் மாறிவிடும். குளிக்கும்போது வாயில் வைத்துப்பார்த்தால் குடிக்கலாம் போல சுவையாக கூட இருக்கும்.வள்ளியாற்றில் என்னதான் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும் அதிகாலை மூன்றுமணிக்கே ஆறு களைகட்டிவிடும். கணவண் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற பிறகு பொழுது புலருமுன்னே குளியல் கடனை முடித்துவிட்டு குழந்தைகள் தூங்கியெழு முன்னே வீடுசேரும் அவசரத்தில் கீழ பக்கத்தெரு பெண்கள் மூன்று மணிக்கே ஆற்றை முற்றுகையிடுவர்.
"எல மக்கா வருஷம் பூரா இப்படி ஆத்து தண்ணி ஓடினா எப்படி இருக்கும்.." - குளிக்கும்போது உடன் குளிக்கும் பள்ளித் தோழனிடம் சொல்லுவேன்.
"அதான் நம்ம ஊர்ல அணை கட்ட போறாங்களே...அணை கட்டுனா இப்படி வேஷ்ட்டா கடல்ல போற தண்ணி அந்த பக்கம் நிக்கும் டிசம்பருக்கு பெறவு உப்புத்தண்ணி வந்தா குளிச்சலாம்ல"
"ஆமா..அப்ப இனி வருஷம் பூரா நாம ஆத்தில குளிச்சலாம்"
ஆத்தில அணைகட்ட போகிறார்கள் என்று ஒரு நாள் ஊர் பங்கு சாமியார் கோயிலில் அறிவித்தார். அரசாங்கத்திலேர்ந்து பேண்டும் சட்டையும் போட்டுக்கொண்டு சீரியசான முகத்துடன் சில அதிகாரிகள் வந்து குருவி கல் அருகில் அளவைகளால் அளப்பதும் கூடி எதையோ பேசுவதும் நடந்தது. பங்கு சாமியார் காதில் ஒருவர் என்னவோ சொல்ல அவரிடமிருந்து காதை பின்வாங்கிக் கொண்டு 'ஆம்' என்பதுபோல் தலையாட்டினார் அவர்.
வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தினர் நம்ம ஊர் தண்ணி பஞ்சம் இதோட தீரப்போகுது என்ற சந்தோசத்தில் திளைத்தனர்.
"எல சாமியார் காதில பேசுராரே அது யாரு"
"அதான் நம்ம ஜில்லா கலெக்டரு"
"ஆளு எம்ஜியார் போல இருக்காரு"
"அவரு திண்ணுத சாப்படு அப்படி"
"நான் கலெக்டராதான் படிப்பேன்"
"அதெல்லாம் நம்மலால முடியாது அதுக்கு பெரிய படிப்பெல்லாம் படிக்கணும்" - கூட வந்த நண்பன் சொன்னதுடன் என் கலெக்டர் கனவு தகர்ந்தது.
ஆறுமாசம் கழிந்திருக்கும். ஊரில் ஒரே பேச்சாகக் கிடந்தது. பெரையில்(மீனவர் ஓய்வுக் கூடம்) ஆட்கள் அது பற்றி ஆளாளுக்கு விவாதித்துக் கொண்டிருந்தனர்.
"குருவி கல்லுக்க பக்கத்திலதான் அணை வருதாம்" - ஒருவர் சொன்னார்.
"அப்பத்தான் கொள்ளாம் . அணையும் நல்லா ஸ்ட்ராங்கா நிக்கும்"
"அது மட்டுமா அரசாங்கத்துக்கு பணமும் மிச்சம்..பெரிய கல்லுலா அது ஆத்தில பாதி இடத்தை அது அடச்சுண்டு நிக்கும்..சீக்கிரம் கட்டி முடுச்சிடலாம்"
"சரி எப்படியாவது ஆத்தில அணை வரட்டும்பா..உப்பு தண்ணி வராம போவும்"
அணை கட்டும் வேலை தொடங்கியது. அப்படி இப்படினு வருஷம் ஒண்ணு தாண்டியாச்சு அணை வேலை முடிஞ்ச பாடில்லை. எங்கள் பள்ளிக்கூடத்தில் எல்லா வகுப்புகளிலும் மாணவர்களின் விவாதப் பொருளாய் அணை இருந்தது. ஒவ்வொரு நாளும் நாலு மணிக்கு மணி அடிச்சதும் , "எல மக்கா அணை எப்படி இருக்கானு பாத்திட்டு வர்லாமா?" என்று எங்களைப்போல் பலர் ஆற்றின் பக்கம் வந்து நின்று பார்ப்போம். ஆனால் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
"இன்னிக்கு ஒருவேலையும் நடக்கல போல அணை அப்படிதான் இருக்கு"
"ம்ம்...ஏன் இப்டி பிந்துது"
திடீரென்று ஒரு நாள் அணை கட்டும் வேலை சூடு பிடித்தது. விறு விறுயென்று நிறைய கட்டுமானப்பணி தொழிலாளர்களும் , மேற்பார்வையாளர்களும், இஞ்சினியர்களும் வந்து பம்பரமாய் சுழன்று வேலையை முடித்தார்கள்.
"எலெக்சன் மே மாசம் வருதாம்ல அதான் ஸ்பீடா வேலை நடக்குது" - ஊரில் பேசிக்கொண்டார்கள்.
"சரி எப்படியோ அணை கட்டி முடிஞ்சதே..இனி நம்ம ஊருக்கு தண்ணி பிரச்சனை இல்லை..கோடை காலத்தில சூடு தணிய நல்லா குளிச்சலாம்"
ஜூன் மாசம் வழக்கம் போல் நல்ல மழை. ஆற்று நீர் கரை புரண்டு ஓடியது. ஆற்றின் மேற்கு பக்கம் சேவடியா பிள்ளக தென்னந்தோப்புல பாதி காணாம போச்சு. அதவரைக்கும் குருவி கல்லின் கிழக்கு பக்கம் வழியாக தெக்கு நோக்கி நீளமா ஓடி தோமையார் தெரு வாசிப்புசாலை பின் பக்கம் வரை வந்து கடலில் கலக்கும் ஆற்றின் திசை புதிதாய் கட்டப்பட்ட அணையால் மாறி மேற்கு பக்கமா இருந்த தென்னந்தோப்பை அடித்து துவைத்து விட்டது. புதிதாய் கட்டப்பட்ட அணை இரண்டு நாள் தான் தாக்கிப் பிடித்தது. குருவி கல்லின் மேக்கு பக்கமிருந்த அணை ஒரு இரவின் கன மழையில் வந்த வெள்ளப்பெருக்கில் உடைந்து போனது.
அம்மா சொன்னபடி வீட்டில் குளித்து விட்டு வெளியே வந்தேன். ஆற்றைப் பார்க்க மனம் துடித்தது. வாசிப்புசாலையின் அருகில் இறங்கி ஆற்றை நோக்கிச் சென்ற மணல் பாதையில் இறங்கி நடந்தேன். ஆள் நடமாட்டம் முன்பு போல் இல்லை என்பற்கு அடையாளமாய் பாதையின் இடது வலது பக்கங்களில் வள்ளிச்செடி படர்ந்து கிடந்தது. நடக்கும் போது மரம் மேய்ந்து வைத்திருந்த இடத்தில் மனித மலத்தின் புழுமிய துர்நாற்றம் நாசியை துளைத்தது.
'நமது ஊர் பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது. ஆனால் சுகாதாரத்தில் தேய்ந்து போகிறது' - மனதில் நினைத்துக்கொண்டேன்.யாருக்கும் நமது சுற்றுப்புறம் இப்படி நாற்றம் பிடித்துக் கிடக்கிறதே என்ற பிரக்ஞை தோன்றவில்லை போலும் . எல்லாரும் தான் உண்டு தந்து வேலை உண்டு என்று இருப்பதுபோல் தெரிந்தது. ஓட்டு வீடுகளெல்லாம் இந்த பத்து வருடத்திற்குள் மாடி வீடாய் மாறியிருக்கிறது. குபைக்கூளங்களை அகற்றும் பணிகள் தேங்கி கிடக்கிறதே. ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வரும் உள்ளாட்சி தேர்தலால் பலன் ஒன்றுமில்லயோ. பஞ்சாயத்துத் தலைவரும் கவுன்சிலர்களும் உள்ளூர் வாசிகள்தானே ஒரு நாளுக்கு ஒரு முறையாவது இந்த இடத்தை தாண்டித்தானே செல்லுவார்கள். அவர்களுக்கு உணர்வு இல்லையென்றால் இந்த மக்களுக்குத்தான் எங்கு போனது புத்தி. அவர்களை பிடித்து உலுக்கு உலுக்கு என்று உலுக்க வேண்டாமா..?
ஆறு வந்திருந்தது. ஆறு ஆறாய் இல்லை குட்டையாய் தேங்கிக் கிடந்தது. கடலுக்கும் எனக்கும் எந்த பந்தமும் இல்லை என்பதுபோல் ஆறு கடலில் கலக்கு வலுவின்றி விரக்தியில் வாடிக்கிடந்தது.குருவி கல்லின் மேற்குப் பக்கம் உடைந்து கிடந்த பழைய அணை மண்ணுக்குள் பாதியும் தண்ணீருக்குள் பாதியுமாய் புதைந்து கிடந்தது.
என் மனசு சத்தமாய் ஓலமிட்டது. இருபது வருடங்களுக்கு முன் உடைந்து கிடக்கும் இந்த அணைதான் எங்களின் குளியல் தளம். பத்தாம் வகுப்பு படிக்கும் இருபத்து இரண்டு பேரும் காலை ஆறு ஆறரைக்குள் டாண் என்று தினமும் குளிக்க வந்து விடுவோம். உடைந்து போன அணையின் குருவிக்கல்லின் ஒட்டிய பகுதியை பெண்கள் துணி துவைக்க ஆக்கிரமித்துக்கொள்ள நாங்கள் அதன் மேற்கு பக்கம் அணையின் மேல் நின்று கொண்டு ஆற்றில் குதித்து தொட்டு விளையாட்டு விளையாடுவோம். அணை கட்டிய பிறகு நாங்கள் ஆற்றில் குதித்து விளையாடிய குருவி கல்லின் கிழக்குப் பக்கம் தண்ணிர் இல்லாமல் போய்விட்டது. பாறையில் ஏறி ஆற்றில் தலை கீழாக குத்தித்து நீச்சல் அடித்து விளையாடினால்தான் குளித்ததுபோல் இருக்கும் எங்களுக்கு. அது இல்லாமல் இப்போது போல் காக்கா குளி குளிக்க ஆற்றில் எதுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் எங்களைப்போல் எல்லா சிறுவர்களுக்கும் உண்டு.
"எல இப்படி அணை- லேர்ந்து தண்ணில தலை கீழா பாஞ்சு குளிச்சாதீங்க ஒடஞ்ச அணைலேர்ந்து துண்டு தண்ணிக்குள்ள கிடக்கு அடிபட்டால் ஆள் காலி" - சிறுவர்கள் அசட்டு தைரியத்துடன் குளிக்கும் போது ஆற்றில் குளிக்கும் பெருசுகள் எங்க்களை விரட்டுவார்கள். ஆனால் நாங்கள் கேட்டால்தானே.!
"கங்கிரீட் கம்பி தண்ணிக்- குள்ளதான் கிடக்கு குத்துனா தெரியும் . பேசாம போங்கல..! விட்டில அம்மையும் அப்பனும் உங்கள தேடமாட்டாங்களா..காலைலேர்ந்தே இந்த பைக்க ஆத்தை கலச்சிண்டே கிடக்கு" - பெருசுகள் ஆளாலுக்கு புலம்பினாலும் கத்தினாலும் எங்களுக்கு உறைக்காது. கொஞ்ச நேரம் சும்மா நல்ல பிள்ளை போல் குளிப்பதுபோல் பாவ்லா காட்டிக்கொண்டு சொன்னவர் போனதும் மீண்டும் அணையில் ஏறி குதித்து விளையாடுவோம்.
"பைக்கதான் சொல்ல சொல்ல கேக்கவும் செய்ல.." - சிலர் முனகுவதுடன் நிறுத்திக்கொள்வர்.
நான் அணைக்கட்டில் ஏறி நின்று கொண்டேன். கடந்து போன பால்ய காலங்கள் ஒழித்து வைத்த பொருள் போல் திரும்பக்கிடைத்தால் எப்படி இருக்கும். இந்த அணைதான் எத்தனை இன்ப நினைவுகளையும் துன்ப கதைகளையும் ஒளித்து வைத்துக்கொண்டு சட்மாய் நின்று கொண்டிருக்கிறது.
இதோ இந்த இடத்தில்தான் நான் நின்றேன். " டே பெர்னாடு நீ நினச்சாலும் என்னை பிடிக்க முடியாது?" - பத்தாம் கிளாசில் படிக்கும் போது. ஒரு ஜூன் மாசம் ஆற்றில் நாங்கள் ஒன்பது பேர் தொட்டு விளையாடு விளையாடும் போது ஓஸ்கர் இப்படித்தான் சொன்னான்.
" முத ஆளா உன்னைத்தான் தொடுவேன் பாத்துக்க..நீ எங்கிடேர்ந்து தப்பவே முடியாது" - நான் சவாலாய் சொன்னேன்.
"பாத்திடலாம்டா.."
"பாத்திடலாம்.."
ஆனால் ஓஸ்கர் சொன்னதுதான் நடந்தது. அவனை என்னால் பிடிக்க முடியவேவில்லை. என்னால் மட்டுமா யாராலும் பிடிக்க முடியவில்லை. "ஓன்..டூ..த்ரீ.." - சொல்லிக்கொண்டு எல்லாரும் அணையிலிருந்து தண்ணிக்குள் குதித்தனர். நான் ஓஸ்கரை தொடும் எண்ணத்தில் அவனுக்குப் பின் குதித்தேன். தேடினேன் தேடினேன் மூச்சுத்திணறி எழுந்தேன். அவனைத்தொட முடியவில்லை. சரி தண்ணிக்குமேல் அவன் வந்துதானே ஆக வேண்டும். வரட்டும் வரட்டும்...ஒரு நிமிடம் ரெண்டு நிமிடம்..பத்து நிமிடம் அரை மணியாயிற்று..ஓஸ்கரின் தலை தண்ணீர் மட்டத்தை விட்டு மேல் எழும்பவே இல்லை.
"எல ஓஸ்கரை காணலடா.."
"எங்க போயிருப்பான்"
"தெக்க கல்லுக்க இடைல போய் பாரு ஒரு வேளை பேல போயிருப்பான் போல..!"
"அதெப்படி நம்ம கூட இங்க குளிச்சவன் தூரத்தில இருக்க கல்லுக பின்னாடி எப்படி போவான்.." - ஆளாளுக்கு பேசிக்கொண்டோமே தவிர எங்கள் மனதில் லேசாக பயமும் திகிலும் எட்டிப்பார்த்தது. உண்மை மிகவும் கொடூரமானது என்பதை மனது ஒத்துக்கொள்ள மறுத்தது.
ஓடினோம்..கடற்கரையில் கிடந்த கடல் பாறைகள் இடுக்கு முடுக்கெல்லாம் தேடினோம்..."இங்க்தானே காலைல எல்லாரு வழக்கமா பேலுவோம் இங்கேயும் இல்லயே..எங்க போனான்.."
மனசில் உண்மை உறைத்தது. ஓஸ்கர் அவ்வளவ்தானா...இனி அவன் இல்லையா..எங்கள் ஊரிலே அவன் அப்பாதான் பணக்காரர்..பெண் மக்கள் இல்லாத வீடு..ரெண்டு ஆண் மக்கள் தான். மூத்தவன் ஓஸ்கர். ஏகப்பட்ட சொத்துக்கு வாரிசு அவன். நிச்சயமாய் அவனுக்கு ஒன்றும் ஆகியிருக்காது. அவனுக்கு மரணம் இல்லை..மனசு தாறுமாறாக யோசித்தாலும் உண்மையை நேருக்கு நேர் சந்திக்கும் துணிச்சல் அந்த இளம் வயதில் யாருக்குத்தான் வரும். திடீரென்று தண்ணீருக்குள்ளிருந்து எழுந்து வந்து 'எல மக்கா என்னையா தேடிட்டு இருக்கோம்' - என்று கேக்கமாட்டானா என்று மனசு ஏங்கியது.
"ஏ..நேரம் போவுண்டு இருக்கு..ஆத்தில குளிச்சுத பெரியாள்க கிட்ட சொல்லலாம்..அதான் நல்லது" - சுந்தர் சொன்னான். எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் இருப்பான். நல்ல வளர்த்தி ஆள் பெரிய ஆள் மாதிரி இருப்பான்.
"சரி.." - எல்லாரும் சோகம் கலந்த முகத்துடன் தலையாடினோம்.
"ஏ..எங்க கூட குளிச்ச பையனை காணல..இங்கதான் குளிச்சோம்.." - நாங்கள் சொன்னதும் முப்பது முப்பத்தஞ்சு வயசுக்குள்ளிருந்த அவர் மிரட்சியாய் எங்களைப் பார்த்தார். அவர் முகத்தில் பீதி தொற்றியது.
"போங்கல..போங்கல்..பொய் சொல்லுறதுக்கு ஒருஅளவே இல்லயா.." - நாங்கள் சொல்வது உண்மைதானென்று அவருக்குப் புரிந்தது ஆனாலும் ஆற்றில் இறங்கி ஆழத்தில் தேடும் தைரியம் அவரிடம் இல்லை அதனால்தான் இப்படி சொல்லுகிறார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
அதற்கு காரணமும் உண்டு. ஆற்றில் பழைய அணையின் மேற்கு பக்கம் தரை தொடமுடியாத ஆழம் உண்டு. அங்கு முன்பு ஆற்றில் குளிக்கும்போது இறந்து போனவர்களின் ஆவி பேயாய் சுத்துது என்றும் சில நேரங்களில் அது குளிப்பவர்களின் காலைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே போய்விடுமென்றும். ஆள் மூச்சுத்திணறி செத்து விடுவார்களென்றும் ஒரு பயக்கதை ஊரில் பரப்பி வைத்திருந்தனர். அதனால் அந்த ஆழத்தில் யாரும் துணிச்சலாக குளிக்கமாட்டார்கள்.
"லே..இவரு சரி பட்டு வரமாட்டாரு..வேறாள் கிட்ட சொல்லுவோம்.." - நான் சொன்னேன்.
எங்கள் பேச்சு அரை மணி நேரத்தில் ஊர் முழுக்க பரவிவிட்டது. ஊர் பதற்றமான முகத்துடன் கூடியது. ஓஸ்கரின் அம்மா பதறிப்போய் அழுது புரண்டு ஆற்றைத்தேடி ஓடி வந்தார்.
"லே...மோன...எங்கப்பா...போனா...என் செல்லம் ...எங்க வீட்டு ராஜா...நீ பிறந்த பிரகுதானேப்பா...கஞ்சிக்கு வழியில்லாம கிடந்த நம்ம குடும்பம்..இப்படி நல்ல நெலைல வந்தோம்...எல..மோன..." - கண்ணீரும் கம்பலையுமாய் ஆற்றங்கரை கருப்பு மண்ணில் புரண்டு புரண்டு அழுதார் ஓஸ்கரின் அம்மா"
ஆற்றின் குறுக்கே வலை கட்டி வைத்தனர். பிரேதம் எப்படியும் கடலுக்கு போவும் அப்ப வலைல வந்து சுத்தும்.
அன்று எங்கள் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மறு நாள் மதியம் முதல் பீரியட் நடக்கும் போது செய்தி வந்தது. "கடல்ல ஓஸ்கர் உடம்பு எழும்பியாச்சம்.." - மதிய சாப்பட்டுக்கு வீட்டுக்கு போய் கொஞ்சம் தாமதமாக பள்ளிக்கு வந்த வந்த ஐரின் சொன்னாள். எங்களுக்கு கண்ணீர் பிடித்தால் நிற்காது. ஓஸ்கரின் வீடு தேடி ஓடினோம். இப்போதும் 'ஆட்டோகிராஃப்' படத்தில் ஞாபகம் வருதே பாடலில் வரும் 'முதல் முதல் அழுத ஸ்னேகிதன் மரணம்' - வரியைக் கேட்கும் போதெல்லாம் அவன் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
கணத்துப்போன இதயத்துடன் அணையைவிட்டு கீழே இறங்கினேன். என் கண்கள் பாதிக்கு மேல் மணல் மூடிக்கிடந்த சின்ன குருவி கல்லின் மேல் போனது. குருவி கல்லுக்கு அருகில் சிறிய பாறையாக இருப்பதால் அதற்கு சின்ன குருவிகல் என்று பெயர் வந்தது. முன்பெல்லாம் தண்ணீருக்குள் கிடக்கும் அந்த கல் இப்போது வெள்ளை மணலில் அனாதையாய் கிடந்தது.
எனக்கு எப்போதும் அந்த கல்லின் மேல் விஷேச பிரியம் உண்டு. அதை பார்க்கும் போதெல்லாம் சுஜியின் ஞாபகம் தானாகவே மனதில் வந்து மரங்கொத்திப்பறவை போல் வந்து உட்கார்ந்துவிடும். மனதில் இனிமையான எண்ணங்களின் தொகுப்பாய் அவளின் நினைவுகள் அணிவகுக்க ஆரம்பித்துவிடும்.
அப்போது எனக்கு வயசு இருபத்து இரண்டு இருக்கும். ஆற்றில் குளிக்க வரவேண்டுமென்றால் உடனே வந்து விடமாட்டேன். ஏழு மணிக்கு பச்சை வண்ண வாளியை இடுப்பில் வைத்துக்கொண்டு சுஜி அவள் அம்மாவுடன் ஆற்றில் குளிக்க வருவாள். அவள் எங்கள் வீடுதாண்டித்தான் ஆற்றுக்குப் போகவேண்டும் அவள் வரவை எதிர் பார்த்து யாருக்கும் சந்தேகம் வராதவாறு சாலையோரம் நண்பர்களுடன் பேசிக்கொண்டு நிற்பேன். அவள் எப்ப வருவா..எப்ப வருவானு மனசு கிடந்து தவிக்கிற தவிப்பு இருக்கே அதை வார்த்தையால சொல்ல முடியாது.
தூரத்தில் அவள் தலை கண்டதும்தான் தாமதம். மனசு கன்னா பின்னானு துடிக்க ஆரம்பிக்கும் . நெஞ்சு பூரா ஒரு உஷ்ணம் பரவின மாதிரி ஒரு உணர்வு தலை தூக்கும்..அவ பக்கம் நெருங்க நெருங்க நெஞ்சுல உள்ள சூடு உடம்பு முழுவதும் பரவி ஏதோ காய்ச்சல் அடிப்பதுபோல் கண்கள் ரெண்டும் காந்த ஆரம்பிக்கும். சுஜிக்கு குழந்தை முகம். அவளோட பெரிய கண் மை போடாமலே கரு கருனு வண்டு மாதிரி இருக்கும். பச்சை நிற பாவாடை சட்டையில் குளிக்க வரும் அவள் பத்தாம் வகுப்பு படித்தாலும் பார்க்க ஏதோ எட்டாம் கிளாசு படிக்கிறவ மாதிரிதான் இருப்பா.அவ என்னைக் கடந்து போனதும் நண்பர்களிடம் நான் சொல்லுவேன்.
"மக்கா ஆத்தில குளிக்க போலாம்"
"கொஞ்சம் நேரம் பொறுத்துக்க, புஷ்பராஜ் வீட்டில டவல் எடுக்க போயிருக்கான் அவன் வந்ததும் போலாம்" - ஜோணி சொன்னாலும் அதைக் கேட்கும் மன நிலையில் நான் இல்லை.
"சரி நீங்கெல்லாம் பிந்தி வாங்க நான் முன்னாடி போறேன்" - இன்னும் கொஞ்சம் பிந்திப் போனால் சுஜி குளித்து விட்டு வந்து விடுவாள். அவள் துணிக்கு வலிக்காமல் சோப்பு போடும் அழகைப் பார்க்க முடியாது. அதை விட முக்கியம் தினமும் உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாய் வைத்திருக்க்ம் உடம்பை குளிக்கிற சாக்கில் சட்டையை கழற்றி அவளிடம் காட்டவேண்டும்.
"நீ எங்க குளிக்க போற?" - ஜோணி கேட்டான்.
"குருவிக்கல் பக்கம்"
"அது சரிப்படாது..சுள்ள கரையில் போலாம்"
"இல்ல இல்ல இங்க மண்ணில குளிச்சாதான் நல்லா இருக்கும். சுள்ள கரை ஒரே கல்லும் கரட்டையுமா கிடக்கும்" - சொல்லிக்கொண்டு நான் அவசரம் அவசரமாய் குளிக்க வருவேன்.
என் கண்கள் சின்ன குருவிகல் பக்கம் அலை பாய்ந்தது. எங்க போனா இவ..அவள் அம்மா மாரப்பு கட்டி வெள்ளை முதுகை காட்டி குளிப்பதைப் பார்க்க முடிந்தது. 'சுஜியும் பெருசா வளர்ந்தா அவங்க அம்மா மாதிரி குண்டாயிடுவாளோ..' - மனசு சம்மந்தம் இல்லாமல் சந்தேகபட்டது. சரி இதுவா முக்கியம் அவ எங்க? சின்ன குருவிக்கல்லின் பின்பக்கம் வாளியை வைத்துவிட்டு அம்மா துவைத்துக்கொடுத துணிகளை ஒவ்வொன்றாய் நனைத்து கையால் பிழிந்து கொண்டிருந்தாள். அவள் கை மெலிந்த கை துணியை பிழியும் வலிமை நிச்சயம் அதற்குக் கிடையாது. போய் அவளுக்கு உதவி செய்ய மனசு துடித்தது. நினைப்பதெல்லாம் செய்ய முடியுமா என்ன?
சின்ன குருவிக்கல்லின் பின் பக்கம் பொதுவாக கல் இல்லாத மணல் பகுதி உண்டு. அதில்தான் இரவில் கடல் தொழிலுக்கு போய் வரும் மீனவர்கள் அவசரக் குளியல் குளிப்பார்கள். நான் சட்டை கழற்றினேன் பொத்தம் பொதுவாய் ஒரு பார்வையை அவள் மேல் வீசினேன் அவள் என்னைப் பார்க்கிறாளாயென்று. அவள் கருமமே கண்ணாக துணியை பிழிந்து கொண்டிருந்தாள். ' லூசு கொஞ்சம் இந்தப் பக்கம் பார்த்தால்தான் என்ன?' .
எனது நண்பர்கள் வருவது தெரிந்தது. ஆற்றில் இறங்கப் போன என்னை வழுக்கட்டாய்மாய் பிடித்துக் கொண்டனர்."லே..வா...வா..சுள்ள கரைக்கு போலாம்..கெழவமார்கள போல இங்க கிடந்து குளிச்சுதான். அங்க பேண்டு பீ கழுவி விடுற தண்ணியெல்லாம் இங்கதான் வரும். வா சுத்தமான தன்ணில குளிக்கலாம்" - நண்பர்களில் ஒருவன் என் துணியை எடுத்துக்கொண்டு ஓட நான் வேறு வழியில்லாமல் அவர்களைப் பின் தொடர்ந்தேன்.
ஆற்றுக்கு அந்தப் பக்கம் இருந்த கொஞ்சார்க் விளையைத் தாண்டிதான் சுள்ள கரையிருந்தது. முன்பு , புனித சவேரியார் இங்க வருமுன்னாடி மீனவர்கள் இந்துக்களாக இருந்தபோது சுள்ளகரையில்தான் பிணங்களை எரிப்பார்களாம் அதனால்தான் சுடுகாடு என்ற பெயர் மலையாளத்தில் சுள்ளைக்காடு என்று மருவி சுள்ளகாடு என்று நிலைத்து விட்டது. சுள்ள காட்டில் பெரும்பாலும் பெண்கள் குளிக்க வரமாட்டார்கள். காரணம் அது அமானுஷ்யம் நிறைந்த பகுதியாக பலரால் பார்க்கப்பட்டது. அதுவும் மதியம் பனிரெண்டு மணிக்கென்றால் அறவே கூட்டம் இருக்காது.
எனக்கும் அங்கு குளிக்க பயம் உண்டு. எங்கம்மா சொன்னது கதையா உண்மையானு எனக்கு இன்னும் நம்ம முடியல. அவங்க வாலிப பிராயத்தில ஒத்தைல குளிக்க போகும்போது குட்டிசாத்தான் கையில் தங்க சொம்பை வைத்துக் கொண்டு வழி மறித்ததாகவும்.."வா மோள வந்து இத கொண்டு போ..மூத்திரத்தில விரவி வீட்டுக்கு கொண்டு போ..உன் குடும்பம் நல்லாவும்"-குட்டி சாத்தான் சொன்னதை கேட்டு அம்மா பயந்து போய் குளிக்காமல் அங்கிருந்து பிடித்த ஓட்டம் வீடு வரைக்கும். சுள்ள கரையில தனியா குளிக்க போனாலே எனக்கு இந்த கதை ஞாபகத்துக்கு வரும்...
இளம் வயது நினைவுகளிலிருந்து என்னை வலுக்கட்டாயமாய் விடுவித்துக்கொண்டு. சுள்ளகரை நோக்கி நடந்தேன். கொஞ்சார்க் விளையில் பாதியை ' இது கவர்ண்மெண்ட் இடம்' - என்றுசொல்லிக்கொண்டு ஐ.ஆர். ஈ. கம்பெனி வளைத்திருந்ததற்கு அடையாளமாய் கட்டப்பட்டிருந்த கருங்கல் சுவர் சர்வே எண்ணுடன் சுமார் எட்டடி உயரத்தில் கட்டப்படிருந்தது. ஒரு காலத்தில் செழிப்பாய் அடர்த்தியாய் நின்ற தென்னை மரங்கள் வாடிப்போய் வயோதிக தோற்றம் தந்தது. எங்கள் ஊர் இளசுகளின் இளநீர் கனவுகளில் கொஞ்சார்க் விளைக்கு நிறைய பங்கு உண்டு. பகலில் காய்த்து குலைகுலையாய் தொங்கும் தேங்காய் மறு நாள் காலை காணாமல் போய்விடும். கவலையும் கோபம் கலந்த முகத்துடன் வரும் கொஞ்சார்க் ஆற்றில் சுள்ள கரையில் குளிக்க வர்பவர்களில் யார் நல்லவன் யார் கெட்டவன் என்ற சந்தேகத்துடன் பார்க்கும் பார்வையைப் பார்த்தால் எனக்கு சிரிப்பும் பரிதாபமும்தான் வரும்.
நான் சின்ன வயசில் இருக்கும்போது அந்த விளை எங்க ஊர் சேவடியா பிள்ள கையில் இருந்தது. அப்போதெல்லாம் அவ்வப்போது தேங்காய் வெட்டு நடக்கும். ஆனால் விளை கொஞ்சார்க் கையில் வந்த பிறகு அப்படி தேங்காய் வெட்டு நடப்பதைக் காணமுடியாது. பகலில் எந்த மரத்தில் காய் அதிகம் கிடக்கிறது என்பதை கண்வைத்து செல்லும் சில இளம் பிராயத்துக்காரர்கள் இரவில் யார் கண்ணிலும் படாமல் மரத்தைக் காலி செய்துவிடுவர். இத்தணைக்கும் கொஞ்சார்க் இரவானால் டார்ச் லைட்டும் கையுமாக ரகசியமாக கள்ளனை கையோடு பிடிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் வருவார். ஒரு முறை அவர் வரும் போது சிலர் மரத்திலிருந்து தேங்காய் இறக்கிக் கொண்டிருப்பதை கண்டு கொண்டார்.
'கைய்யும் களவுமாய் பிடிச்சாச்சுடா இவனுகளை' - நினைத்தவர் அவர்களை நெருங்கியிருக்கிறார்.
"லே..யாருல தேவடியா மக்களே..உங்கம்மமாருகளை நான் கிடந்தானியால என் வெளைல தேங்கா பறிச்சுறீங்க" - கட்டி கட்டியாய் கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டு அவர்களை நெருங்க, கூட்டம் உஷாராகியது. இவர் ஒருத்தர்தான். ஆனால் அவர்களோ அஞ்சு ஆறு பேர் இருந்தாங்க. இவர் விளையில் பறிச்ச தேங்காயை எடுத்து இவர் மேலயே எடுத்து எறிந்து ஓட ஓட வெரட்டியிருக்கானுக. தலை தப்பியது தம்புறான் புண்ணியம் போல இவர் உயிரை கையில் பிடிச்சிட்டு ஓடின ஓட்டம் நின்னது ஆத்துக்கு இக்கரை வந்த பிறகுதான். கரமடி வளைக்கிற வள்ளத்தில உட்கார்ந்து சிலு சிலுனு வீசிற சோழ காற்றில கொஞ்சநேரம் காற்று வாங்கின பெறகுதான் இயல்பு நிலைக்கு வந்தார். இருந்தாலும் மனசு கேக்கல அவருக்கு 'ஆள் யாருனு தெரிஞ்சாலாவது போலிஸ்ல கம்ளெண்ட் குடுக்கலாம்' என்று நினைத்தவர். குருவிகல்லின் கிழக்குப்புறமா பெண்கள் குளிக்கும் இடம்தாண்டி கட்டமாமா வீட்டுக்கு பின் புறம் வந்து கைலயிருந்த டார்ச்சை எடுத்து ஆற்றுக்கு அக்கரைல இருந்த விளையை நோக்கி அடிச்சாரு. இவரை விரட்டி விட்டுட்டு அங்க குலை குலையா இறக்கிட்டிருந்தவ இவர் லைட் அடிச்சதும் அங்கேர்ந்து "ஓ..ஓ.." - குலவ சத்தம் போட்டானுக. கடைசி வரைக்கும் ஆள் யாருனு தெரியாமத்தான் வீடு வந்து சேந்தார்.
கொஞ்சார்க் விளையத்தாண்டி சுள்ள கரைக்கு வந்து சேர்ந்தேன். சின்னதும் பெரியதுமாய் வெள்ளைப்பாறைகள் நிறைந்திருந்தன. ஒவ்வொரு பாறையும் ஒவ்வொரு விலங்கு போல் தோற்றம் தந்தது. என் கண்கள் தடுப்புச்சுவரை நோட்டமிட்டது. இந்த தடுப்புச்சுவர் கட்டப்பட்ட போதிருந்த எதிர்பார்ப்புகள் எனக்கு நினைவுக்கு வந்தன.
"மக்கா நம்ம ஆத்தில சுள்ளகரைல அணை கட்டப்போறாங்களாம்"
"நல்லதுதானே.அந்த சைட்ல நெறையா பாறை உண்டே..அணை கட்டுனா நல்ல ஸ்ட்ராங்கா நிக்கும்.எத்தன வருஷமனாலும் இடியாது. மண்ணரிப்பு இல்லாத இடம்"
"அதுவும் சரி தான் இனி ஆத்தில உப்புத்தண்ணி வராது. உப்புத்தண்ணி வந்தாலும் அணைக்கு அந்த பக்கம் போய் குளிச்சா போதும்"
அணைக் கட்டும் பணி நடக்கும் போது ஊர் மக்கள் கொஞ்சம் கொஞ்சமா வந்து வேடிக்கைப் பார்த்தனர்.
"என்ன மக்கா..நடுவில திறப்ப காண்டுல"
"திறப்பு இல்லாம்தான் கட்டுவாங்களாம்"
"அப்ப தண்ணி கெட்டி போட்டுல்லா கிடக்கும். நல்ல தண்ணி வந்தாலும் கொஞ்சநாள்ல கெட்டு போவுடும்"
அணை கட்டு வேகமாய் நடந்து முடிந்தது. திறப்பு விழா நடந்தது. மக்கள் இறங்கி குளிக்க படிக்கட்டுகள் கட்டப் பட்டது. பொதுவாக பெண்கள் இந்த பக்கம் குளிக்க வரமாட்டார்கள். அவர்கள் துணி துவைக்க ஏதுவாய் படிக்கட்டு வந்தவுடன் பெண்கள் கூட்டம் இங்கும் கூடியது. படிக்கட்டில் உட்கார்ந்து ' சொடீர் சொடீரென்று ' துணி துவைக்கும் சத்தம் சுள்ளகரையில் இருக்கும் எல்லா பாறைகளிலும் பட்டு எதிரொலித்தது. வழக்கமாக குருவி கல் பக்கம் குளிக்கும் பெண்கள் கூட்டம் அணை கட்டிய பின் அங்கு தண்ணீர் வரவு குறைந்ததால் இங்கு வர ஆரம்பித்தது. படிக்கட்டு முழுவது பெண்கள் நிறைந்து கொள்ள ஆண்கள் குளிக்க இடமின்றி திணறினர்.
"பேராசை பிடிச்ச பெம்புளங்கப்பா..எல்லா எடத்திலயும் வந்து குவிஞ்சுடுவாளுக " - ஆண்களில் சிலர் முனக ஆரம்பித்தனர். நாளுக்கு நாள் அதிகமான முணக்கம் ஊர் காதுக்கு போனது. "பெம்புள்ளங்களை என்ன செய்ய அவங்களுக்கும் துணி துவைக்க எடம் வேணுமே?" - என்று யோசித்த ஊர் நிர்வாகம் பஞ்சாயத்து தலைவரிடம் கலந்தாலோசித்து பஞ்சாயத்து நிதி உதவியுடன் படிக்கட்டின் வடக்கு பக்கம் கொஞ்சம் நீட்டி கட்டி இரண்டு பேர் போவது போல் குறுகிய படிகள் கட்டப்பட்டன. இதனால் பெண்களும் ஆண்களும் அருகருகே குளிக்கும் நிலை ஏற்பட்டது. மாரப்பு கட்டிக்கொண்டு பெண்கள் குளிக்க சற்று தள்ளி ஆண்கள் குளிப்பதை எங்கள் ஊரில் வருத்து போக்காய் வரும் வெளியூர் காரர்கள் கண்டு கேள்வி கேட்டதும் உண்டு.
"கூட்டமாய் குளிக்கும்போது இதனால பிரச்சனை ஒன்னும் வராது. எங்க ஊர்ல இதெல்லாம் சகஜம்தான்..அவங்கள தாயும் சகோதரிகளாத்தான் நாங்க நெனப்போம் "
அணையின் தெற்கு பக்கம் உப்பு தண்ணீர் நிறைந்து கிடக்க அணையின் வடக்கு பக்கம் தண்ணி கருத்துப்போய் வாயில் வைத்து 'நல்ல தண்ணியா உப்புத்தண்ணியா ?' - என்று பார்க்கக்கூட பயம்மாக இருந்தது. கெட்ட வாடையும் பாசியும் பிடித்துக் கிடக்கும் இந்த தண்ணீருக்கு உப்புத்தண்ணி எவ்வளவோ தேவலையாக தோன்றியது. சின்ன வயசில் அணை கட்டுமுன் ஆறு இப்படி இருந்ததில்லை. உப்புத்தண்ணீர் வந்தாலும் ஆற்றில் செடியும் கொடியும் படர்ந்து பார்க்கவே பயங்கரமான நீர்காடு போல் காட்சி தறாது. அப்படி கொஞ்சம் செடி முளைத்தாலும் ஜூன் மாசம் வரும் வெள்ளப்பெருக்கில் ஆறு சுத்தமாகிவிடும். ஆனால் இப்போது ஆறு பழைய வேகத்தில் ஓடவில்லை. வருடக்கணக்காய் செடி முளைத்து நீச்சல் அடிக்கவே பயமாய் இருந்தது. முன்பெல்லாம் கடல் அருகிலிருந்து சின்னபாலம் தாண்டி நீச்சல் அடித்த காலம் உண்டு.
கடலில் மூரை(கடல் முள்) எடுத்துக்கொண்டு ஆற்றின் வழியாக கட்டுமரம் செலுத்தி சுள்ளகரையில் வந்து பாறையில் வைத்து உடைத்து சாப்பிடுவோம். ஆற்றில் உப்பு தண்ணீர் வந்தால் கட்டு மரம் நிறைய பிளாஸ்டிக் குடங்களை கொண்டு ஆற்று வழியாக பாலம் வரை வந்து பாலத்துக்கு வடக்குப் பக்கம் அம்மாண்டிவிளை செல்லும் பாதையில் வலது கைபக்கம் இருக்கும் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடித்து ஊருக்குக் கொண்டு வந்த காலமும் உண்டு.
அணை கட்டியபிறகு இந்த வசதிகள் போய்விட்டது. ஆறு புதற்காடாய் மாறிவிட்டதே என்ற ஏக்கம் என் நெஞ்சை படாத பாடுபடுத்தியது.
"என்ன மக்கா இந்த பக்கம் நிக்க?" - ஆற்றில் தூண்டில் போடவந்த அந்தோணி கேட்டான் என்னிடம்.
"சும்மா ஆறை பாக்க வந்தேன்"
"நம்ம பழய ஆறோட அழகே இப்ப போச்சு. அணை கட்டின பிறகு ஆறு எங்க ஓடுது. வருசத்தில பத்து நாளோ பதினஞ்சு நாளோ அணைக்கு மேலோட தண்ணி போகுது."
"ம்...இப்படியே போனா நம்ம ஆறும் குளச்சல் ஏவிஎம் கால்வாய் மாதிரி சாக்கடையாத்தான் ஆவும்" - அந்தோணியை ஊரில் மூளை சரியில்லாதவன் என்று சொல்லுவார்கள். ஆனால் அவன் சொன்ன வார்த்தை என்னை உலுக்கியது.
பின்ன இந்த ஊரில் எல்லாவரையும் விட அவன்தான் ஆற்றில் அதிகம் பந்தம் வைத்திருப்பவன். நாங்கலெல்லாம் குளிக்க மட்டும்தான் ஆற்றுக்கு வருவோம். ஆனால் ஆறுதான் அவனுக்கு வீடு. எப்பவும் களையும்(தூண்டில்) கயிறுமாய் சேமீன் பிடிக்க ஆற்றையே சுற்றி வருவான். பெரும்பாலும் சுள்ள கரைதான் அவனின் பதிவான இடம்.எல்லரும் மதியம் சுள்ளகரைக்கு வர பயந்தால் அவன் மட்டும் தன்னந்தனியாய் வந்து நின்று களை போடுவான்.
வீட்டிற்கு வந்த பிறகும் மனசு சதா ஆறைச்சுற்றி சுற்றி வந்தது வந்தது. எனக்கு மட்டுமல்ல எங்கள் ஊரில் அனைவருக்கும் வள்ளி ஆறு பற்றிய இனிமையான நினைவுகள் இருக்கத்தான் செய்யும். ஊரில் ஆண் பெண் என எல்லாருக்கும் நீச்சல் தெரியும். காரணம் ஆறுதான். பத்து வயசுக்குள் எல்லாரும் நீச்சல் தெரிந்திருக்கும். அதனால்தான் ஆரம்ப பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் நீச்சல் போட்டி வள்ளியாற்றில் வைத்து நடத்துவார்கள்.
ஊரில் ஆண்கள் பெரும்பாலும் நாளுக்கு இரண்டு முறைக்குளிப்பார்கள். ஆறு இருப்பதால் தண்ணீர் பஞ்சமில்லை. சில வீடுகளில் அடுப்பில் சோற்றுக்கு கூட ஆற்றுத்தண்ணீர் போடுவதுண்டு. ஆற்றின் அக்கரையில் கிடந்த கருப்பு மணல் திடலில் கால் புதைய கால் பந்து ஆடிய பின்பு வேர்த்து விறுவிறுத்து கடல் காற்றில் உடல் வேர்வை களைந்தபின் ஆற்றில் குளித்து விட்டு வீட்டுக்கு வந்து இரவு உணவு உண்டால், இறங்காத சோறும் இறங்கும்.
"என்ன ஒரு மாதிரியா இருக்க?" - அம்மா கேட்ட போது பதில் வரவில்லை எனக்கு. சின்ன வயசில் அம்மாவுடன் ஆறு தாண்டிச் சென்று அப்பா வளைக்கும் கரமடியில் சென்று ஆசை ஆசையாய் வியாளா குட்டி காரை மீனை எடுத்துக் கொண்டு வரும்போது ஆற்றில் நழுவி விழுந்த மீனை பிடிக்க நீச்சல் தெரியாத நான் ஆற்றில் குதித்ததும் கடைசில் மீன் கிடக்காமல் ஆற் போன போக்கில் போய் கரையேறி உயிர் பிழைத்ததும் இன்னும் பசுமையாய் நினைவிலிருந்தது எனக்கு.
"என்ன சாப்பிடலயா?" - அம்மாவின் குரல் என் கனவை இல்லை இல்லை பழம் நினைவை கலைத்தது.
"பசிக்கலேமா"
"காலேலேர்ந்து வெறும் வயிறா இருக்க என்ன? சாப்பாடு சரியில்லையா?" - அம்மாவின் கேள்வியில் தொனித்த அக்கறையிலும் அன்பிலும் மனம் நெகிழ்ந்து சாப்பிட அமர்ந்தேன்.
உணவு உள்ளே சென்றாலும் மனசு சதா சிந்தனை வயப்பட்டுக் கிடந்தது. எதாவது செய்ய வேண்டுமென்று தோன்றியது. சிறையில் கிடக்கும் கைதிகள் போல் ஆறும் அணைக்குள் சிறைப்பட்டுக் கிடக்கிறதோ என்று தோன்றியது. கைதிக்கு வருடம் ஒருமுறை கிடக்கும்'பரோல்' போல்தான் ஆற்றிற்கும் ஜூன் மாத வெள்ளப்பெருக்கு சீசனில் பரோல் கிடைக்கிறது போலும்.
இரவு தூங்கப்போகும் வரை ஆறு பல கோணங்களில் எனக்கு கதைகதையாய் சொல்லிக்கொண்டிருந்தது. சுனாமி அன்று ஆற்றில் குளிக்கப்போனதும் தண்ணீர் மட்டம் திடீரென்று உயர உயர புரியாத மர்மமாய் விழித்து நின்றதும், கடல் அலையில் ஐ.ஆர்.ஈ சுவர் டைட்டானிக் படத்தில் கப்பல் உடைவது போல் உடைந்ததும் , அதைத்தொடர்ந்து ஆறே வெள்ளக்காடாய் மாறியதும்...ஆஆ......ஐயோ..அம்மா..என்ற கூச்சல் சத்ததுடன் ஆற்றில் பலர் காணாமல் போனதும்...இரண்டு மூன்று நாட்களுக்குப்பிறகு கிடைத்த உடல்களும்...மனதில் நிழலாட நிழலாட நான் என்னை மறந்து தூங்கிவிட்டேன்.
மறுநாள் காலை -
கண் விழித்த போது அந்த செய்தி என் காதில் விழுந்தது. வீட்டு முற்றம் தூற்றுக்கொண்டிருந்த அம்மா சொன்னார் "நம்ம ஊரு அணையை யாரோ ஒடச்சுட்டாங்களாம் என்னென்ன அக்கிரமெல்லாம் நடக்குதப்பா இந்த ஊருல" கையிலிருந்த துடைப்பம் முற்றம் தூற்றிக்கொண்டிருக்க அம்மாவின் வாய் தன்னிச்சையாய் இன்னும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது. எனக்கு மனதிற்குள் ஏனோ நிம்மதி பரவியது. 'ஆற்றிற்கு இன்று சுதந்திர நாள்' - மனதிற்குள் சொல்லிக்கொண்டேன் நான்.
மறுநாள் காலை -
அம்மா கொடுத்த தேநீர் குளிருக்கு இதமாய் இருந்தது. அடுக்களையில் அம்மா சமையல் வேலைகளில் மும்முரமாய் இருக்க டைனிங்க் டேபிள் அருகில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டேன்.
அடுக்களை ஜன்னல் வழியே அரபிக்கடல் நீலப்பாயை நீட்டி விரித்ததுபோல் சின்ன சின்ன அலைகளின் சலனத்துடன் ரம்யமாய் தென்பட்டது. காலை சூரிய வெளிச்சம் இன்னும் முற்றிலும் கடல் முழுவதும் பரவியிருக்காத நிலையில் கடலும் தூங்கி எழுந்த குழந்தைபோல் மலங்க மலங்க விழிப்பதுபோல் தோன்றியது எனக்கு. கடலில் நல்ல முரட்டு கருப்பு யானைகளை கவிழ்த்துப் போட்டதுபோல் கரும்பாறைகள் கடல் மட்டத்துக்கு மேலே முதுகுகாட்டிக்கொண்டிருந்தது. அதில் அலைகள் பட்டுத்தெறிக்கும் இடம் துணிதுவைக்க வாளியில் சர்ப் பொடியை போட்டு கலக்கினால் பொங்கும் நுரைபோல் வெள்ளையாய் காட்சி தந்தது.
"அம்மா நான் ஆத்தில குளிக்க போறேன்"
"அதெல்லாம் வேண்டாம் நீ வீட்டிலேயே குளி இந்த நாள்ல ஆத்தில உப்பு தண்ணி வரும்னு தெரியாதா உனக்கு"
"அதான் தடுப்பு சுவரு கட்டி இருக்கே..அதுக்கு அந்த பக்கம் போய் குளிச்சிட்டு வாரேன்"
"அங்க போய் குளிச்சுதத உட உப்பு தண்ணில குளிச்சலாம்..ஆறு ஆறு மாதிரியா கிடக்கு செடியெல்லாம் வளந்து தண்ணி கெட்டிபோட்டு ஒரே நாத்தம்..அதுல போய் மட்டும் குளிச்சுடாத"
அம்மாவின் வார்த்தை என்னை அதிர்ச்சியடைய வைத்தது. ஆறு என்பது எங்கள் ஊரின் கௌரவம். முட்டதிலேர்ந்தெல்லாம் கூட்டம் கூட்டமாய் ஆம்பளைங்களும் பொம்பளைங்களும் குளிச்ச காலம் உண்டு. "எங்க ஊர்ல உள்ள ஆறு மட்டும் இல்லேனா நீங்கலெல்லாம் அழுக்கு புடுச்சுதான் சாவீங்கல" - முட்டத்து காரங்ககிட்ட விளையாட்டாய் எங்க ஊர் பெருசுங்க சொல்லுவார்கள்.
ஆற்றில் ஆறு மாசம்தான் நல்ல தண்ணி ஓடும். ஜூன் மாசம் பள்ளிக்கூடம் திறக்கும்போது கூடவே ஆற்றில் நல்ல தண்ணி வந்துவிடும்..மழை நல்லா பெய்து சிவந்த மண்லேர்ந்து வரும் களிமண் கலந்த வெள்ளம் ஆற்றில் கலப்பதால் ஸ்ட்ராங்க் டீ கலரில் ஆற்று தண்ணி ஓடும். கரை புரண்டு ஓடும் வெள்ளம் ஆற்றில் கிடக்கும் எல்லா கழிவுகளையும் இழுத்துக்கொண்டு கடலில் சேர்த்து விடும். அதனால் முதல் ரெண்டு நாளுக்கு ஆற்றில் பெரிய கூட்டம் இருக்காது. "முதல் தண்ணில குளிச்சா நோய் வரும்ல..ஆறுமாசமா ஆத்தில கிடந்த சப்பும் சவரும் முதல்ல கடலுல போவட்டும் அதுக்கபிறகு குளிச்சாதான் நல்லது" - அப்பா சொல்லியிருக்கிறார்.
இரண்டு நாள் கழித்தால் ஆற்று வெள்ளம் பன மரத்து பதனீர் கலரில் மாறிவிடும். குளிக்கும்போது வாயில் வைத்துப்பார்த்தால் குடிக்கலாம் போல சுவையாக கூட இருக்கும்.வள்ளியாற்றில் என்னதான் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும் அதிகாலை மூன்றுமணிக்கே ஆறு களைகட்டிவிடும். கணவண் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற பிறகு பொழுது புலருமுன்னே குளியல் கடனை முடித்துவிட்டு குழந்தைகள் தூங்கியெழு முன்னே வீடுசேரும் அவசரத்தில் கீழ பக்கத்தெரு பெண்கள் மூன்று மணிக்கே ஆற்றை முற்றுகையிடுவர்.
"எல மக்கா வருஷம் பூரா இப்படி ஆத்து தண்ணி ஓடினா எப்படி இருக்கும்.." - குளிக்கும்போது உடன் குளிக்கும் பள்ளித் தோழனிடம் சொல்லுவேன்.
"அதான் நம்ம ஊர்ல அணை கட்ட போறாங்களே...அணை கட்டுனா இப்படி வேஷ்ட்டா கடல்ல போற தண்ணி அந்த பக்கம் நிக்கும் டிசம்பருக்கு பெறவு உப்புத்தண்ணி வந்தா குளிச்சலாம்ல"
"ஆமா..அப்ப இனி வருஷம் பூரா நாம ஆத்தில குளிச்சலாம்"
ஆத்தில அணைகட்ட போகிறார்கள் என்று ஒரு நாள் ஊர் பங்கு சாமியார் கோயிலில் அறிவித்தார். அரசாங்கத்திலேர்ந்து பேண்டும் சட்டையும் போட்டுக்கொண்டு சீரியசான முகத்துடன் சில அதிகாரிகள் வந்து குருவி கல் அருகில் அளவைகளால் அளப்பதும் கூடி எதையோ பேசுவதும் நடந்தது. பங்கு சாமியார் காதில் ஒருவர் என்னவோ சொல்ல அவரிடமிருந்து காதை பின்வாங்கிக் கொண்டு 'ஆம்' என்பதுபோல் தலையாட்டினார் அவர்.
வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தினர் நம்ம ஊர் தண்ணி பஞ்சம் இதோட தீரப்போகுது என்ற சந்தோசத்தில் திளைத்தனர்.
"எல சாமியார் காதில பேசுராரே அது யாரு"
"அதான் நம்ம ஜில்லா கலெக்டரு"
"ஆளு எம்ஜியார் போல இருக்காரு"
"அவரு திண்ணுத சாப்படு அப்படி"
"நான் கலெக்டராதான் படிப்பேன்"
"அதெல்லாம் நம்மலால முடியாது அதுக்கு பெரிய படிப்பெல்லாம் படிக்கணும்" - கூட வந்த நண்பன் சொன்னதுடன் என் கலெக்டர் கனவு தகர்ந்தது.
ஆறுமாசம் கழிந்திருக்கும். ஊரில் ஒரே பேச்சாகக் கிடந்தது. பெரையில்(மீனவர் ஓய்வுக் கூடம்) ஆட்கள் அது பற்றி ஆளாளுக்கு விவாதித்துக் கொண்டிருந்தனர்.
"குருவி கல்லுக்க பக்கத்திலதான் அணை வருதாம்" - ஒருவர் சொன்னார்.
"அப்பத்தான் கொள்ளாம் . அணையும் நல்லா ஸ்ட்ராங்கா நிக்கும்"
"அது மட்டுமா அரசாங்கத்துக்கு பணமும் மிச்சம்..பெரிய கல்லுலா அது ஆத்தில பாதி இடத்தை அது அடச்சுண்டு நிக்கும்..சீக்கிரம் கட்டி முடுச்சிடலாம்"
"சரி எப்படியாவது ஆத்தில அணை வரட்டும்பா..உப்பு தண்ணி வராம போவும்"
அணை கட்டும் வேலை தொடங்கியது. அப்படி இப்படினு வருஷம் ஒண்ணு தாண்டியாச்சு அணை வேலை முடிஞ்ச பாடில்லை. எங்கள் பள்ளிக்கூடத்தில் எல்லா வகுப்புகளிலும் மாணவர்களின் விவாதப் பொருளாய் அணை இருந்தது. ஒவ்வொரு நாளும் நாலு மணிக்கு மணி அடிச்சதும் , "எல மக்கா அணை எப்படி இருக்கானு பாத்திட்டு வர்லாமா?" என்று எங்களைப்போல் பலர் ஆற்றின் பக்கம் வந்து நின்று பார்ப்போம். ஆனால் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
"இன்னிக்கு ஒருவேலையும் நடக்கல போல அணை அப்படிதான் இருக்கு"
"ம்ம்...ஏன் இப்டி பிந்துது"
திடீரென்று ஒரு நாள் அணை கட்டும் வேலை சூடு பிடித்தது. விறு விறுயென்று நிறைய கட்டுமானப்பணி தொழிலாளர்களும் , மேற்பார்வையாளர்களும், இஞ்சினியர்களும் வந்து பம்பரமாய் சுழன்று வேலையை முடித்தார்கள்.
"எலெக்சன் மே மாசம் வருதாம்ல அதான் ஸ்பீடா வேலை நடக்குது" - ஊரில் பேசிக்கொண்டார்கள்.
"சரி எப்படியோ அணை கட்டி முடிஞ்சதே..இனி நம்ம ஊருக்கு தண்ணி பிரச்சனை இல்லை..கோடை காலத்தில சூடு தணிய நல்லா குளிச்சலாம்"
ஜூன் மாசம் வழக்கம் போல் நல்ல மழை. ஆற்று நீர் கரை புரண்டு ஓடியது. ஆற்றின் மேற்கு பக்கம் சேவடியா பிள்ளக தென்னந்தோப்புல பாதி காணாம போச்சு. அதவரைக்கும் குருவி கல்லின் கிழக்கு பக்கம் வழியாக தெக்கு நோக்கி நீளமா ஓடி தோமையார் தெரு வாசிப்புசாலை பின் பக்கம் வரை வந்து கடலில் கலக்கும் ஆற்றின் திசை புதிதாய் கட்டப்பட்ட அணையால் மாறி மேற்கு பக்கமா இருந்த தென்னந்தோப்பை அடித்து துவைத்து விட்டது. புதிதாய் கட்டப்பட்ட அணை இரண்டு நாள் தான் தாக்கிப் பிடித்தது. குருவி கல்லின் மேக்கு பக்கமிருந்த அணை ஒரு இரவின் கன மழையில் வந்த வெள்ளப்பெருக்கில் உடைந்து போனது.
அம்மா சொன்னபடி வீட்டில் குளித்து விட்டு வெளியே வந்தேன். ஆற்றைப் பார்க்க மனம் துடித்தது. வாசிப்புசாலையின் அருகில் இறங்கி ஆற்றை நோக்கிச் சென்ற மணல் பாதையில் இறங்கி நடந்தேன். ஆள் நடமாட்டம் முன்பு போல் இல்லை என்பற்கு அடையாளமாய் பாதையின் இடது வலது பக்கங்களில் வள்ளிச்செடி படர்ந்து கிடந்தது. நடக்கும் போது மரம் மேய்ந்து வைத்திருந்த இடத்தில் மனித மலத்தின் புழுமிய துர்நாற்றம் நாசியை துளைத்தது.
'நமது ஊர் பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது. ஆனால் சுகாதாரத்தில் தேய்ந்து போகிறது' - மனதில் நினைத்துக்கொண்டேன்.யாருக்கும் நமது சுற்றுப்புறம் இப்படி நாற்றம் பிடித்துக் கிடக்கிறதே என்ற பிரக்ஞை தோன்றவில்லை போலும் . எல்லாரும் தான் உண்டு தந்து வேலை உண்டு என்று இருப்பதுபோல் தெரிந்தது. ஓட்டு வீடுகளெல்லாம் இந்த பத்து வருடத்திற்குள் மாடி வீடாய் மாறியிருக்கிறது. குபைக்கூளங்களை அகற்றும் பணிகள் தேங்கி கிடக்கிறதே. ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வரும் உள்ளாட்சி தேர்தலால் பலன் ஒன்றுமில்லயோ. பஞ்சாயத்துத் தலைவரும் கவுன்சிலர்களும் உள்ளூர் வாசிகள்தானே ஒரு நாளுக்கு ஒரு முறையாவது இந்த இடத்தை தாண்டித்தானே செல்லுவார்கள். அவர்களுக்கு உணர்வு இல்லையென்றால் இந்த மக்களுக்குத்தான் எங்கு போனது புத்தி. அவர்களை பிடித்து உலுக்கு உலுக்கு என்று உலுக்க வேண்டாமா..?
ஆறு வந்திருந்தது. ஆறு ஆறாய் இல்லை குட்டையாய் தேங்கிக் கிடந்தது. கடலுக்கும் எனக்கும் எந்த பந்தமும் இல்லை என்பதுபோல் ஆறு கடலில் கலக்கு வலுவின்றி விரக்தியில் வாடிக்கிடந்தது.குருவி கல்லின் மேற்குப் பக்கம் உடைந்து கிடந்த பழைய அணை மண்ணுக்குள் பாதியும் தண்ணீருக்குள் பாதியுமாய் புதைந்து கிடந்தது.
என் மனசு சத்தமாய் ஓலமிட்டது. இருபது வருடங்களுக்கு முன் உடைந்து கிடக்கும் இந்த அணைதான் எங்களின் குளியல் தளம். பத்தாம் வகுப்பு படிக்கும் இருபத்து இரண்டு பேரும் காலை ஆறு ஆறரைக்குள் டாண் என்று தினமும் குளிக்க வந்து விடுவோம். உடைந்து போன அணையின் குருவிக்கல்லின் ஒட்டிய பகுதியை பெண்கள் துணி துவைக்க ஆக்கிரமித்துக்கொள்ள நாங்கள் அதன் மேற்கு பக்கம் அணையின் மேல் நின்று கொண்டு ஆற்றில் குதித்து தொட்டு விளையாட்டு விளையாடுவோம். அணை கட்டிய பிறகு நாங்கள் ஆற்றில் குதித்து விளையாடிய குருவி கல்லின் கிழக்குப் பக்கம் தண்ணிர் இல்லாமல் போய்விட்டது. பாறையில் ஏறி ஆற்றில் தலை கீழாக குத்தித்து நீச்சல் அடித்து விளையாடினால்தான் குளித்ததுபோல் இருக்கும் எங்களுக்கு. அது இல்லாமல் இப்போது போல் காக்கா குளி குளிக்க ஆற்றில் எதுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் எங்களைப்போல் எல்லா சிறுவர்களுக்கும் உண்டு.
![]() |
| குருவி கல் அருகில் உடைந்து கிடக்கும் பழையஅணையும் கடலில் சேராமல் கிடக்கும் ஆறும் |
"கங்கிரீட் கம்பி தண்ணிக்- குள்ளதான் கிடக்கு குத்துனா தெரியும் . பேசாம போங்கல..! விட்டில அம்மையும் அப்பனும் உங்கள தேடமாட்டாங்களா..காலைலேர்ந்தே இந்த பைக்க ஆத்தை கலச்சிண்டே கிடக்கு" - பெருசுகள் ஆளாலுக்கு புலம்பினாலும் கத்தினாலும் எங்களுக்கு உறைக்காது. கொஞ்ச நேரம் சும்மா நல்ல பிள்ளை போல் குளிப்பதுபோல் பாவ்லா காட்டிக்கொண்டு சொன்னவர் போனதும் மீண்டும் அணையில் ஏறி குதித்து விளையாடுவோம்.
"பைக்கதான் சொல்ல சொல்ல கேக்கவும் செய்ல.." - சிலர் முனகுவதுடன் நிறுத்திக்கொள்வர்.
நான் அணைக்கட்டில் ஏறி நின்று கொண்டேன். கடந்து போன பால்ய காலங்கள் ஒழித்து வைத்த பொருள் போல் திரும்பக்கிடைத்தால் எப்படி இருக்கும். இந்த அணைதான் எத்தனை இன்ப நினைவுகளையும் துன்ப கதைகளையும் ஒளித்து வைத்துக்கொண்டு சட்மாய் நின்று கொண்டிருக்கிறது.
இதோ இந்த இடத்தில்தான் நான் நின்றேன். " டே பெர்னாடு நீ நினச்சாலும் என்னை பிடிக்க முடியாது?" - பத்தாம் கிளாசில் படிக்கும் போது. ஒரு ஜூன் மாசம் ஆற்றில் நாங்கள் ஒன்பது பேர் தொட்டு விளையாடு விளையாடும் போது ஓஸ்கர் இப்படித்தான் சொன்னான்.
" முத ஆளா உன்னைத்தான் தொடுவேன் பாத்துக்க..நீ எங்கிடேர்ந்து தப்பவே முடியாது" - நான் சவாலாய் சொன்னேன்.
"பாத்திடலாம்டா.."
"பாத்திடலாம்.."
ஆனால் ஓஸ்கர் சொன்னதுதான் நடந்தது. அவனை என்னால் பிடிக்க முடியவேவில்லை. என்னால் மட்டுமா யாராலும் பிடிக்க முடியவில்லை. "ஓன்..டூ..த்ரீ.." - சொல்லிக்கொண்டு எல்லாரும் அணையிலிருந்து தண்ணிக்குள் குதித்தனர். நான் ஓஸ்கரை தொடும் எண்ணத்தில் அவனுக்குப் பின் குதித்தேன். தேடினேன் தேடினேன் மூச்சுத்திணறி எழுந்தேன். அவனைத்தொட முடியவில்லை. சரி தண்ணிக்குமேல் அவன் வந்துதானே ஆக வேண்டும். வரட்டும் வரட்டும்...ஒரு நிமிடம் ரெண்டு நிமிடம்..பத்து நிமிடம் அரை மணியாயிற்று..ஓஸ்கரின் தலை தண்ணீர் மட்டத்தை விட்டு மேல் எழும்பவே இல்லை.
"எல ஓஸ்கரை காணலடா.."
"எங்க போயிருப்பான்"
"தெக்க கல்லுக்க இடைல போய் பாரு ஒரு வேளை பேல போயிருப்பான் போல..!"
"அதெப்படி நம்ம கூட இங்க குளிச்சவன் தூரத்தில இருக்க கல்லுக பின்னாடி எப்படி போவான்.." - ஆளாளுக்கு பேசிக்கொண்டோமே தவிர எங்கள் மனதில் லேசாக பயமும் திகிலும் எட்டிப்பார்த்தது. உண்மை மிகவும் கொடூரமானது என்பதை மனது ஒத்துக்கொள்ள மறுத்தது.
ஓடினோம்..கடற்கரையில் கிடந்த கடல் பாறைகள் இடுக்கு முடுக்கெல்லாம் தேடினோம்..."இங்க்தானே காலைல எல்லாரு வழக்கமா பேலுவோம் இங்கேயும் இல்லயே..எங்க போனான்.."
மனசில் உண்மை உறைத்தது. ஓஸ்கர் அவ்வளவ்தானா...இனி அவன் இல்லையா..எங்கள் ஊரிலே அவன் அப்பாதான் பணக்காரர்..பெண் மக்கள் இல்லாத வீடு..ரெண்டு ஆண் மக்கள் தான். மூத்தவன் ஓஸ்கர். ஏகப்பட்ட சொத்துக்கு வாரிசு அவன். நிச்சயமாய் அவனுக்கு ஒன்றும் ஆகியிருக்காது. அவனுக்கு மரணம் இல்லை..மனசு தாறுமாறாக யோசித்தாலும் உண்மையை நேருக்கு நேர் சந்திக்கும் துணிச்சல் அந்த இளம் வயதில் யாருக்குத்தான் வரும். திடீரென்று தண்ணீருக்குள்ளிருந்து எழுந்து வந்து 'எல மக்கா என்னையா தேடிட்டு இருக்கோம்' - என்று கேக்கமாட்டானா என்று மனசு ஏங்கியது.
"ஏ..நேரம் போவுண்டு இருக்கு..ஆத்தில குளிச்சுத பெரியாள்க கிட்ட சொல்லலாம்..அதான் நல்லது" - சுந்தர் சொன்னான். எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் இருப்பான். நல்ல வளர்த்தி ஆள் பெரிய ஆள் மாதிரி இருப்பான்.
"சரி.." - எல்லாரும் சோகம் கலந்த முகத்துடன் தலையாடினோம்.
"ஏ..எங்க கூட குளிச்ச பையனை காணல..இங்கதான் குளிச்சோம்.." - நாங்கள் சொன்னதும் முப்பது முப்பத்தஞ்சு வயசுக்குள்ளிருந்த அவர் மிரட்சியாய் எங்களைப் பார்த்தார். அவர் முகத்தில் பீதி தொற்றியது.
"போங்கல..போங்கல்..பொய் சொல்லுறதுக்கு ஒருஅளவே இல்லயா.." - நாங்கள் சொல்வது உண்மைதானென்று அவருக்குப் புரிந்தது ஆனாலும் ஆற்றில் இறங்கி ஆழத்தில் தேடும் தைரியம் அவரிடம் இல்லை அதனால்தான் இப்படி சொல்லுகிறார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
அதற்கு காரணமும் உண்டு. ஆற்றில் பழைய அணையின் மேற்கு பக்கம் தரை தொடமுடியாத ஆழம் உண்டு. அங்கு முன்பு ஆற்றில் குளிக்கும்போது இறந்து போனவர்களின் ஆவி பேயாய் சுத்துது என்றும் சில நேரங்களில் அது குளிப்பவர்களின் காலைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே போய்விடுமென்றும். ஆள் மூச்சுத்திணறி செத்து விடுவார்களென்றும் ஒரு பயக்கதை ஊரில் பரப்பி வைத்திருந்தனர். அதனால் அந்த ஆழத்தில் யாரும் துணிச்சலாக குளிக்கமாட்டார்கள்.
"லே..இவரு சரி பட்டு வரமாட்டாரு..வேறாள் கிட்ட சொல்லுவோம்.." - நான் சொன்னேன்.
எங்கள் பேச்சு அரை மணி நேரத்தில் ஊர் முழுக்க பரவிவிட்டது. ஊர் பதற்றமான முகத்துடன் கூடியது. ஓஸ்கரின் அம்மா பதறிப்போய் அழுது புரண்டு ஆற்றைத்தேடி ஓடி வந்தார்.
"லே...மோன...எங்கப்பா...போனா...என் செல்லம் ...எங்க வீட்டு ராஜா...நீ பிறந்த பிரகுதானேப்பா...கஞ்சிக்கு வழியில்லாம கிடந்த நம்ம குடும்பம்..இப்படி நல்ல நெலைல வந்தோம்...எல..மோன..." - கண்ணீரும் கம்பலையுமாய் ஆற்றங்கரை கருப்பு மண்ணில் புரண்டு புரண்டு அழுதார் ஓஸ்கரின் அம்மா"
ஆற்றின் குறுக்கே வலை கட்டி வைத்தனர். பிரேதம் எப்படியும் கடலுக்கு போவும் அப்ப வலைல வந்து சுத்தும்.
அன்று எங்கள் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மறு நாள் மதியம் முதல் பீரியட் நடக்கும் போது செய்தி வந்தது. "கடல்ல ஓஸ்கர் உடம்பு எழும்பியாச்சம்.." - மதிய சாப்பட்டுக்கு வீட்டுக்கு போய் கொஞ்சம் தாமதமாக பள்ளிக்கு வந்த வந்த ஐரின் சொன்னாள். எங்களுக்கு கண்ணீர் பிடித்தால் நிற்காது. ஓஸ்கரின் வீடு தேடி ஓடினோம். இப்போதும் 'ஆட்டோகிராஃப்' படத்தில் ஞாபகம் வருதே பாடலில் வரும் 'முதல் முதல் அழுத ஸ்னேகிதன் மரணம்' - வரியைக் கேட்கும் போதெல்லாம் அவன் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
கணத்துப்போன இதயத்துடன் அணையைவிட்டு கீழே இறங்கினேன். என் கண்கள் பாதிக்கு மேல் மணல் மூடிக்கிடந்த சின்ன குருவி கல்லின் மேல் போனது. குருவி கல்லுக்கு அருகில் சிறிய பாறையாக இருப்பதால் அதற்கு சின்ன குருவிகல் என்று பெயர் வந்தது. முன்பெல்லாம் தண்ணீருக்குள் கிடக்கும் அந்த கல் இப்போது வெள்ளை மணலில் அனாதையாய் கிடந்தது.
எனக்கு எப்போதும் அந்த கல்லின் மேல் விஷேச பிரியம் உண்டு. அதை பார்க்கும் போதெல்லாம் சுஜியின் ஞாபகம் தானாகவே மனதில் வந்து மரங்கொத்திப்பறவை போல் வந்து உட்கார்ந்துவிடும். மனதில் இனிமையான எண்ணங்களின் தொகுப்பாய் அவளின் நினைவுகள் அணிவகுக்க ஆரம்பித்துவிடும்.
அப்போது எனக்கு வயசு இருபத்து இரண்டு இருக்கும். ஆற்றில் குளிக்க வரவேண்டுமென்றால் உடனே வந்து விடமாட்டேன். ஏழு மணிக்கு பச்சை வண்ண வாளியை இடுப்பில் வைத்துக்கொண்டு சுஜி அவள் அம்மாவுடன் ஆற்றில் குளிக்க வருவாள். அவள் எங்கள் வீடுதாண்டித்தான் ஆற்றுக்குப் போகவேண்டும் அவள் வரவை எதிர் பார்த்து யாருக்கும் சந்தேகம் வராதவாறு சாலையோரம் நண்பர்களுடன் பேசிக்கொண்டு நிற்பேன். அவள் எப்ப வருவா..எப்ப வருவானு மனசு கிடந்து தவிக்கிற தவிப்பு இருக்கே அதை வார்த்தையால சொல்ல முடியாது.
தூரத்தில் அவள் தலை கண்டதும்தான் தாமதம். மனசு கன்னா பின்னானு துடிக்க ஆரம்பிக்கும் . நெஞ்சு பூரா ஒரு உஷ்ணம் பரவின மாதிரி ஒரு உணர்வு தலை தூக்கும்..அவ பக்கம் நெருங்க நெருங்க நெஞ்சுல உள்ள சூடு உடம்பு முழுவதும் பரவி ஏதோ காய்ச்சல் அடிப்பதுபோல் கண்கள் ரெண்டும் காந்த ஆரம்பிக்கும். சுஜிக்கு குழந்தை முகம். அவளோட பெரிய கண் மை போடாமலே கரு கருனு வண்டு மாதிரி இருக்கும். பச்சை நிற பாவாடை சட்டையில் குளிக்க வரும் அவள் பத்தாம் வகுப்பு படித்தாலும் பார்க்க ஏதோ எட்டாம் கிளாசு படிக்கிறவ மாதிரிதான் இருப்பா.அவ என்னைக் கடந்து போனதும் நண்பர்களிடம் நான் சொல்லுவேன்.
"மக்கா ஆத்தில குளிக்க போலாம்"
"கொஞ்சம் நேரம் பொறுத்துக்க, புஷ்பராஜ் வீட்டில டவல் எடுக்க போயிருக்கான் அவன் வந்ததும் போலாம்" - ஜோணி சொன்னாலும் அதைக் கேட்கும் மன நிலையில் நான் இல்லை.
"சரி நீங்கெல்லாம் பிந்தி வாங்க நான் முன்னாடி போறேன்" - இன்னும் கொஞ்சம் பிந்திப் போனால் சுஜி குளித்து விட்டு வந்து விடுவாள். அவள் துணிக்கு வலிக்காமல் சோப்பு போடும் அழகைப் பார்க்க முடியாது. அதை விட முக்கியம் தினமும் உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாய் வைத்திருக்க்ம் உடம்பை குளிக்கிற சாக்கில் சட்டையை கழற்றி அவளிடம் காட்டவேண்டும்.
"நீ எங்க குளிக்க போற?" - ஜோணி கேட்டான்.
"குருவிக்கல் பக்கம்"
"அது சரிப்படாது..சுள்ள கரையில் போலாம்"
"இல்ல இல்ல இங்க மண்ணில குளிச்சாதான் நல்லா இருக்கும். சுள்ள கரை ஒரே கல்லும் கரட்டையுமா கிடக்கும்" - சொல்லிக்கொண்டு நான் அவசரம் அவசரமாய் குளிக்க வருவேன்.
என் கண்கள் சின்ன குருவிகல் பக்கம் அலை பாய்ந்தது. எங்க போனா இவ..அவள் அம்மா மாரப்பு கட்டி வெள்ளை முதுகை காட்டி குளிப்பதைப் பார்க்க முடிந்தது. 'சுஜியும் பெருசா வளர்ந்தா அவங்க அம்மா மாதிரி குண்டாயிடுவாளோ..' - மனசு சம்மந்தம் இல்லாமல் சந்தேகபட்டது. சரி இதுவா முக்கியம் அவ எங்க? சின்ன குருவிக்கல்லின் பின்பக்கம் வாளியை வைத்துவிட்டு அம்மா துவைத்துக்கொடுத துணிகளை ஒவ்வொன்றாய் நனைத்து கையால் பிழிந்து கொண்டிருந்தாள். அவள் கை மெலிந்த கை துணியை பிழியும் வலிமை நிச்சயம் அதற்குக் கிடையாது. போய் அவளுக்கு உதவி செய்ய மனசு துடித்தது. நினைப்பதெல்லாம் செய்ய முடியுமா என்ன?
சின்ன குருவிக்கல்லின் பின் பக்கம் பொதுவாக கல் இல்லாத மணல் பகுதி உண்டு. அதில்தான் இரவில் கடல் தொழிலுக்கு போய் வரும் மீனவர்கள் அவசரக் குளியல் குளிப்பார்கள். நான் சட்டை கழற்றினேன் பொத்தம் பொதுவாய் ஒரு பார்வையை அவள் மேல் வீசினேன் அவள் என்னைப் பார்க்கிறாளாயென்று. அவள் கருமமே கண்ணாக துணியை பிழிந்து கொண்டிருந்தாள். ' லூசு கொஞ்சம் இந்தப் பக்கம் பார்த்தால்தான் என்ன?' .
எனது நண்பர்கள் வருவது தெரிந்தது. ஆற்றில் இறங்கப் போன என்னை வழுக்கட்டாய்மாய் பிடித்துக் கொண்டனர்."லே..வா...வா..சுள்ள கரைக்கு போலாம்..கெழவமார்கள போல இங்க கிடந்து குளிச்சுதான். அங்க பேண்டு பீ கழுவி விடுற தண்ணியெல்லாம் இங்கதான் வரும். வா சுத்தமான தன்ணில குளிக்கலாம்" - நண்பர்களில் ஒருவன் என் துணியை எடுத்துக்கொண்டு ஓட நான் வேறு வழியில்லாமல் அவர்களைப் பின் தொடர்ந்தேன்.
ஆற்றுக்கு அந்தப் பக்கம் இருந்த கொஞ்சார்க் விளையைத் தாண்டிதான் சுள்ள கரையிருந்தது. முன்பு , புனித சவேரியார் இங்க வருமுன்னாடி மீனவர்கள் இந்துக்களாக இருந்தபோது சுள்ளகரையில்தான் பிணங்களை எரிப்பார்களாம் அதனால்தான் சுடுகாடு என்ற பெயர் மலையாளத்தில் சுள்ளைக்காடு என்று மருவி சுள்ளகாடு என்று நிலைத்து விட்டது. சுள்ள காட்டில் பெரும்பாலும் பெண்கள் குளிக்க வரமாட்டார்கள். காரணம் அது அமானுஷ்யம் நிறைந்த பகுதியாக பலரால் பார்க்கப்பட்டது. அதுவும் மதியம் பனிரெண்டு மணிக்கென்றால் அறவே கூட்டம் இருக்காது.
எனக்கும் அங்கு குளிக்க பயம் உண்டு. எங்கம்மா சொன்னது கதையா உண்மையானு எனக்கு இன்னும் நம்ம முடியல. அவங்க வாலிப பிராயத்தில ஒத்தைல குளிக்க போகும்போது குட்டிசாத்தான் கையில் தங்க சொம்பை வைத்துக் கொண்டு வழி மறித்ததாகவும்.."வா மோள வந்து இத கொண்டு போ..மூத்திரத்தில விரவி வீட்டுக்கு கொண்டு போ..உன் குடும்பம் நல்லாவும்"-குட்டி சாத்தான் சொன்னதை கேட்டு அம்மா பயந்து போய் குளிக்காமல் அங்கிருந்து பிடித்த ஓட்டம் வீடு வரைக்கும். சுள்ள கரையில தனியா குளிக்க போனாலே எனக்கு இந்த கதை ஞாபகத்துக்கு வரும்...
![]() |
| ஐ.ஆர்.ஈ கருங்கல் சுவர் |
நான் சின்ன வயசில் இருக்கும்போது அந்த விளை எங்க ஊர் சேவடியா பிள்ள கையில் இருந்தது. அப்போதெல்லாம் அவ்வப்போது தேங்காய் வெட்டு நடக்கும். ஆனால் விளை கொஞ்சார்க் கையில் வந்த பிறகு அப்படி தேங்காய் வெட்டு நடப்பதைக் காணமுடியாது. பகலில் எந்த மரத்தில் காய் அதிகம் கிடக்கிறது என்பதை கண்வைத்து செல்லும் சில இளம் பிராயத்துக்காரர்கள் இரவில் யார் கண்ணிலும் படாமல் மரத்தைக் காலி செய்துவிடுவர். இத்தணைக்கும் கொஞ்சார்க் இரவானால் டார்ச் லைட்டும் கையுமாக ரகசியமாக கள்ளனை கையோடு பிடிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் வருவார். ஒரு முறை அவர் வரும் போது சிலர் மரத்திலிருந்து தேங்காய் இறக்கிக் கொண்டிருப்பதை கண்டு கொண்டார்.
'கைய்யும் களவுமாய் பிடிச்சாச்சுடா இவனுகளை' - நினைத்தவர் அவர்களை நெருங்கியிருக்கிறார்.
"லே..யாருல தேவடியா மக்களே..உங்கம்மமாருகளை நான் கிடந்தானியால என் வெளைல தேங்கா பறிச்சுறீங்க" - கட்டி கட்டியாய் கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டு அவர்களை நெருங்க, கூட்டம் உஷாராகியது. இவர் ஒருத்தர்தான். ஆனால் அவர்களோ அஞ்சு ஆறு பேர் இருந்தாங்க. இவர் விளையில் பறிச்ச தேங்காயை எடுத்து இவர் மேலயே எடுத்து எறிந்து ஓட ஓட வெரட்டியிருக்கானுக. தலை தப்பியது தம்புறான் புண்ணியம் போல இவர் உயிரை கையில் பிடிச்சிட்டு ஓடின ஓட்டம் நின்னது ஆத்துக்கு இக்கரை வந்த பிறகுதான். கரமடி வளைக்கிற வள்ளத்தில உட்கார்ந்து சிலு சிலுனு வீசிற சோழ காற்றில கொஞ்சநேரம் காற்று வாங்கின பெறகுதான் இயல்பு நிலைக்கு வந்தார். இருந்தாலும் மனசு கேக்கல அவருக்கு 'ஆள் யாருனு தெரிஞ்சாலாவது போலிஸ்ல கம்ளெண்ட் குடுக்கலாம்' என்று நினைத்தவர். குருவிகல்லின் கிழக்குப்புறமா பெண்கள் குளிக்கும் இடம்தாண்டி கட்டமாமா வீட்டுக்கு பின் புறம் வந்து கைலயிருந்த டார்ச்சை எடுத்து ஆற்றுக்கு அக்கரைல இருந்த விளையை நோக்கி அடிச்சாரு. இவரை விரட்டி விட்டுட்டு அங்க குலை குலையா இறக்கிட்டிருந்தவ இவர் லைட் அடிச்சதும் அங்கேர்ந்து "ஓ..ஓ.." - குலவ சத்தம் போட்டானுக. கடைசி வரைக்கும் ஆள் யாருனு தெரியாமத்தான் வீடு வந்து சேந்தார்.
கொஞ்சார்க் விளையத்தாண்டி சுள்ள கரைக்கு வந்து சேர்ந்தேன். சின்னதும் பெரியதுமாய் வெள்ளைப்பாறைகள் நிறைந்திருந்தன. ஒவ்வொரு பாறையும் ஒவ்வொரு விலங்கு போல் தோற்றம் தந்தது. என் கண்கள் தடுப்புச்சுவரை நோட்டமிட்டது. இந்த தடுப்புச்சுவர் கட்டப்பட்ட போதிருந்த எதிர்பார்ப்புகள் எனக்கு நினைவுக்கு வந்தன.
![]() |
| சுள்ளகரை அணை - வள்ளியாறு |
"மக்கா நம்ம ஆத்தில சுள்ளகரைல அணை கட்டப்போறாங்களாம்"
"நல்லதுதானே.அந்த சைட்ல நெறையா பாறை உண்டே..அணை கட்டுனா நல்ல ஸ்ட்ராங்கா நிக்கும்.எத்தன வருஷமனாலும் இடியாது. மண்ணரிப்பு இல்லாத இடம்"
"அதுவும் சரி தான் இனி ஆத்தில உப்புத்தண்ணி வராது. உப்புத்தண்ணி வந்தாலும் அணைக்கு அந்த பக்கம் போய் குளிச்சா போதும்"
அணைக் கட்டும் பணி நடக்கும் போது ஊர் மக்கள் கொஞ்சம் கொஞ்சமா வந்து வேடிக்கைப் பார்த்தனர்.
"என்ன மக்கா..நடுவில திறப்ப காண்டுல"
"திறப்பு இல்லாம்தான் கட்டுவாங்களாம்"
"அப்ப தண்ணி கெட்டி போட்டுல்லா கிடக்கும். நல்ல தண்ணி வந்தாலும் கொஞ்சநாள்ல கெட்டு போவுடும்"
அணை கட்டு வேகமாய் நடந்து முடிந்தது. திறப்பு விழா நடந்தது. மக்கள் இறங்கி குளிக்க படிக்கட்டுகள் கட்டப் பட்டது. பொதுவாக பெண்கள் இந்த பக்கம் குளிக்க வரமாட்டார்கள். அவர்கள் துணி துவைக்க ஏதுவாய் படிக்கட்டு வந்தவுடன் பெண்கள் கூட்டம் இங்கும் கூடியது. படிக்கட்டில் உட்கார்ந்து ' சொடீர் சொடீரென்று ' துணி துவைக்கும் சத்தம் சுள்ளகரையில் இருக்கும் எல்லா பாறைகளிலும் பட்டு எதிரொலித்தது. வழக்கமாக குருவி கல் பக்கம் குளிக்கும் பெண்கள் கூட்டம் அணை கட்டிய பின் அங்கு தண்ணீர் வரவு குறைந்ததால் இங்கு வர ஆரம்பித்தது. படிக்கட்டு முழுவது பெண்கள் நிறைந்து கொள்ள ஆண்கள் குளிக்க இடமின்றி திணறினர்.
"பேராசை பிடிச்ச பெம்புளங்கப்பா..எல்லா எடத்திலயும் வந்து குவிஞ்சுடுவாளுக " - ஆண்களில் சிலர் முனக ஆரம்பித்தனர். நாளுக்கு நாள் அதிகமான முணக்கம் ஊர் காதுக்கு போனது. "பெம்புள்ளங்களை என்ன செய்ய அவங்களுக்கும் துணி துவைக்க எடம் வேணுமே?" - என்று யோசித்த ஊர் நிர்வாகம் பஞ்சாயத்து தலைவரிடம் கலந்தாலோசித்து பஞ்சாயத்து நிதி உதவியுடன் படிக்கட்டின் வடக்கு பக்கம் கொஞ்சம் நீட்டி கட்டி இரண்டு பேர் போவது போல் குறுகிய படிகள் கட்டப்பட்டன. இதனால் பெண்களும் ஆண்களும் அருகருகே குளிக்கும் நிலை ஏற்பட்டது. மாரப்பு கட்டிக்கொண்டு பெண்கள் குளிக்க சற்று தள்ளி ஆண்கள் குளிப்பதை எங்கள் ஊரில் வருத்து போக்காய் வரும் வெளியூர் காரர்கள் கண்டு கேள்வி கேட்டதும் உண்டு.
![]() |
| வெறிச்சோடி கிடக்கும் அணை படிக்கட்டும் - கெட்டுப்போய் கிடக்கும் தண்ணீரும் |
"கூட்டமாய் குளிக்கும்போது இதனால பிரச்சனை ஒன்னும் வராது. எங்க ஊர்ல இதெல்லாம் சகஜம்தான்..அவங்கள தாயும் சகோதரிகளாத்தான் நாங்க நெனப்போம் "
அணையின் தெற்கு பக்கம் உப்பு தண்ணீர் நிறைந்து கிடக்க அணையின் வடக்கு பக்கம் தண்ணி கருத்துப்போய் வாயில் வைத்து 'நல்ல தண்ணியா உப்புத்தண்ணியா ?' - என்று பார்க்கக்கூட பயம்மாக இருந்தது. கெட்ட வாடையும் பாசியும் பிடித்துக் கிடக்கும் இந்த தண்ணீருக்கு உப்புத்தண்ணி எவ்வளவோ தேவலையாக தோன்றியது. சின்ன வயசில் அணை கட்டுமுன் ஆறு இப்படி இருந்ததில்லை. உப்புத்தண்ணீர் வந்தாலும் ஆற்றில் செடியும் கொடியும் படர்ந்து பார்க்கவே பயங்கரமான நீர்காடு போல் காட்சி தறாது. அப்படி கொஞ்சம் செடி முளைத்தாலும் ஜூன் மாசம் வரும் வெள்ளப்பெருக்கில் ஆறு சுத்தமாகிவிடும். ஆனால் இப்போது ஆறு பழைய வேகத்தில் ஓடவில்லை. வருடக்கணக்காய் செடி முளைத்து நீச்சல் அடிக்கவே பயமாய் இருந்தது. முன்பெல்லாம் கடல் அருகிலிருந்து சின்னபாலம் தாண்டி நீச்சல் அடித்த காலம் உண்டு.
கடலில் மூரை(கடல் முள்) எடுத்துக்கொண்டு ஆற்றின் வழியாக கட்டுமரம் செலுத்தி சுள்ளகரையில் வந்து பாறையில் வைத்து உடைத்து சாப்பிடுவோம். ஆற்றில் உப்பு தண்ணீர் வந்தால் கட்டு மரம் நிறைய பிளாஸ்டிக் குடங்களை கொண்டு ஆற்று வழியாக பாலம் வரை வந்து பாலத்துக்கு வடக்குப் பக்கம் அம்மாண்டிவிளை செல்லும் பாதையில் வலது கைபக்கம் இருக்கும் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடித்து ஊருக்குக் கொண்டு வந்த காலமும் உண்டு.
அணை கட்டியபிறகு இந்த வசதிகள் போய்விட்டது. ஆறு புதற்காடாய் மாறிவிட்டதே என்ற ஏக்கம் என் நெஞ்சை படாத பாடுபடுத்தியது.
"என்ன மக்கா இந்த பக்கம் நிக்க?" - ஆற்றில் தூண்டில் போடவந்த அந்தோணி கேட்டான் என்னிடம்.
"சும்மா ஆறை பாக்க வந்தேன்"
"நம்ம பழய ஆறோட அழகே இப்ப போச்சு. அணை கட்டின பிறகு ஆறு எங்க ஓடுது. வருசத்தில பத்து நாளோ பதினஞ்சு நாளோ அணைக்கு மேலோட தண்ணி போகுது."
"ம்...இப்படியே போனா நம்ம ஆறும் குளச்சல் ஏவிஎம் கால்வாய் மாதிரி சாக்கடையாத்தான் ஆவும்" - அந்தோணியை ஊரில் மூளை சரியில்லாதவன் என்று சொல்லுவார்கள். ஆனால் அவன் சொன்ன வார்த்தை என்னை உலுக்கியது.
![]() |
| புதர் மண்டிக்கிடக்கும் ஆறு |
வீட்டிற்கு வந்த பிறகும் மனசு சதா ஆறைச்சுற்றி சுற்றி வந்தது வந்தது. எனக்கு மட்டுமல்ல எங்கள் ஊரில் அனைவருக்கும் வள்ளி ஆறு பற்றிய இனிமையான நினைவுகள் இருக்கத்தான் செய்யும். ஊரில் ஆண் பெண் என எல்லாருக்கும் நீச்சல் தெரியும். காரணம் ஆறுதான். பத்து வயசுக்குள் எல்லாரும் நீச்சல் தெரிந்திருக்கும். அதனால்தான் ஆரம்ப பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் நீச்சல் போட்டி வள்ளியாற்றில் வைத்து நடத்துவார்கள்.
ஊரில் ஆண்கள் பெரும்பாலும் நாளுக்கு இரண்டு முறைக்குளிப்பார்கள். ஆறு இருப்பதால் தண்ணீர் பஞ்சமில்லை. சில வீடுகளில் அடுப்பில் சோற்றுக்கு கூட ஆற்றுத்தண்ணீர் போடுவதுண்டு. ஆற்றின் அக்கரையில் கிடந்த கருப்பு மணல் திடலில் கால் புதைய கால் பந்து ஆடிய பின்பு வேர்த்து விறுவிறுத்து கடல் காற்றில் உடல் வேர்வை களைந்தபின் ஆற்றில் குளித்து விட்டு வீட்டுக்கு வந்து இரவு உணவு உண்டால், இறங்காத சோறும் இறங்கும்.
![]() |
| படிக்கட்டிற்கருகில் தேங்கிக்கிடங்கும் நீரின் அசுத்த தோற்றம் |
"என்ன சாப்பிடலயா?" - அம்மாவின் குரல் என் கனவை இல்லை இல்லை பழம் நினைவை கலைத்தது.
"பசிக்கலேமா"
"காலேலேர்ந்து வெறும் வயிறா இருக்க என்ன? சாப்பாடு சரியில்லையா?" - அம்மாவின் கேள்வியில் தொனித்த அக்கறையிலும் அன்பிலும் மனம் நெகிழ்ந்து சாப்பிட அமர்ந்தேன்.
உணவு உள்ளே சென்றாலும் மனசு சதா சிந்தனை வயப்பட்டுக் கிடந்தது. எதாவது செய்ய வேண்டுமென்று தோன்றியது. சிறையில் கிடக்கும் கைதிகள் போல் ஆறும் அணைக்குள் சிறைப்பட்டுக் கிடக்கிறதோ என்று தோன்றியது. கைதிக்கு வருடம் ஒருமுறை கிடக்கும்'பரோல்' போல்தான் ஆற்றிற்கும் ஜூன் மாத வெள்ளப்பெருக்கு சீசனில் பரோல் கிடைக்கிறது போலும்.
இரவு தூங்கப்போகும் வரை ஆறு பல கோணங்களில் எனக்கு கதைகதையாய் சொல்லிக்கொண்டிருந்தது. சுனாமி அன்று ஆற்றில் குளிக்கப்போனதும் தண்ணீர் மட்டம் திடீரென்று உயர உயர புரியாத மர்மமாய் விழித்து நின்றதும், கடல் அலையில் ஐ.ஆர்.ஈ சுவர் டைட்டானிக் படத்தில் கப்பல் உடைவது போல் உடைந்ததும் , அதைத்தொடர்ந்து ஆறே வெள்ளக்காடாய் மாறியதும்...ஆஆ......ஐயோ..அம்மா..என்ற கூச்சல் சத்ததுடன் ஆற்றில் பலர் காணாமல் போனதும்...இரண்டு மூன்று நாட்களுக்குப்பிறகு கிடைத்த உடல்களும்...மனதில் நிழலாட நிழலாட நான் என்னை மறந்து தூங்கிவிட்டேன்.
மறுநாள் காலை -
கண் விழித்த போது அந்த செய்தி என் காதில் விழுந்தது. வீட்டு முற்றம் தூற்றுக்கொண்டிருந்த அம்மா சொன்னார் "நம்ம ஊரு அணையை யாரோ ஒடச்சுட்டாங்களாம் என்னென்ன அக்கிரமெல்லாம் நடக்குதப்பா இந்த ஊருல" கையிலிருந்த துடைப்பம் முற்றம் தூற்றிக்கொண்டிருக்க அம்மாவின் வாய் தன்னிச்சையாய் இன்னும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது. எனக்கு மனதிற்குள் ஏனோ நிம்மதி பரவியது. 'ஆற்றிற்கு இன்று சுதந்திர நாள்' - மனதிற்குள் சொல்லிக்கொண்டேன் நான்.

+ comments + 1 comments
அருமையான பதிவு...
Post a Comment