காதல் காலம் - 2 . கனாக் காலம்

சதா உன் நினைவுகளுடன்
அலைகிறேன் நான்...

உண்பதும் உறங்குவதும் கூட
பாரமாய் தெரிய
கண்ணுக்குள்
நிரந்தர கனவாய்
உறைந்து நிற்கிறாய்..நீ!

உன்னைத்தவிர
உலக அதிசயங்கள் கூட
ஈர்க்கவில்லை என்னை..!

உன்னப்பற்றி
என்னிடம் யாரேனும்
சொல்லமாட்டார்களா?
முட்டாள்தனமாய்
எதிர்பார்க்கிறது மனசு..!

உன்னை அடிக்கடி
பார்க்கும் ஆவலில்
உன் வீட்டின் அருகாமையில்
சுற்றுகிறேன்..!

உன்னைத் தவிர
எல்லாரும்
என்னையே
கவனிப்பதாய்
தோன்றுகிறது எனக்கு..!

உன் வீட்டு நடையில்
தலைவாரிக் கொண்டிருக்கிறாய்..
கற்றை கூந்தல்
காற்றில் அலைந்து திரிந்து
மீண்டும் மீண்டும்
உன் கன்னங்களையே
முத்தமிடுகிறது..!

சலனமற்ற ஒரு பார்வையை
ஒரு கணம் என் மேல்
தெளித்து விட்டு
நீ உன் பாட்டிற்கு
கூந்தல் காட்டில்
மீன் பிடிக்கிறாய்..!

உன்னைப் பொறுத்தவரையில்
நான் ஒரு வழிப்போக்கன்.
எனக்கோ
நீதான் வழி..!
உனக்கு நான் யாரோ
எனக்கு நீ..
நீர்..!
நிலம்..!
நெருப்பு..!
காற்று..!
ஆகாயம்..!





Share this article :

Post a Comment

 
Support : Emmess Info Tech
Copyright © 2014. கடிகை பெர்னாட் - All Rights Reserved

Proudly powered by Blogger