காலையில் கண்விழித்து
இன்னும் தூங்கலாமா என்று
ஒரு கணம் யோசித்து
வலுக்கட்டாயமாய் எழுந்திருப்பதுடன்
தொடங்கி விடுகிறது வாழ்க்கை..!?
அது சரி இது சரியென்று
சொந்தங்களின் யோசனைகளுக்கு
அரைமனதாய் சம்மதிப்பதில்
தொலைந்து விடுகிறது நிம்மதி..!
அலுவலகத்தில் மேலாளரின்
ஆணைகளை நிறைவேற்றுவதில்
கரைந்து விடுகிறது
எதிர்கால கனவுகள்..!
சில நண்பர்களின்
அர்த்தமற்ற
எதிர்மறை பேச்சுகளிலும்
கிண்டல்களிலும்
கரைந்து விடுகின்றன தன்னம்பிக்கைகள்..!
மாலையில்
சடமாய் வீடு திரும்புகையில்
நெரிசல் சாலையை
தைரியமாய் கடக்கும்
மாற்றுத்திறனாளியின்
தன்னம்பிக்கையில்
கிடைத்து விடுகிறது இழந்த அத்தனையும்..!

Post a Comment